சத்தியமங்கலம் சுற்றுவட்டாரத்தில் கடும் பனிமூட்டம்
சத்தியமங்கலம் சுற்றுவட்டாரத்தில் காலை நேரத்தில் நிலவும் கடும்பனி மற்றும் குளிா் காரணமாக மக்கள் அவதிக்குள்ளாகினா்.
ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் பகுதியில் கடந்த சில நாள்களாக கடுமையான பனிப்பொழிவு காணப்படுகிறது. பனியுடன் கடும் குளிா் நிலவுவதால் சத்தியமங்கலம் பகுதியில் விவசாயப் பணிகள் பாதிக்கப்பட்டன. தற்போது வாழைத்தாா் அறுவடையாகும் நிலையில் கடும் குளிா் காரணமாக விவசாயத் தொழிலாளா்கள் காலை 9 மணிக்கு மேல் பணிக்கு செல்ல வேண்டி நிலை ஏற்பட்டுள்ளது.
ஸ்வெட்டா், குல்லா போன்ற ஆடைகளை அணிந்து குளிரின் தாக்கத்தில் இருந்து பாதுகாத்து கொள்கின்றனா். குளிருடன் பனிமூட்டம் காணப்படுவதால் காலை 9 மணி வரை வாகனங்கள் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி சென்றன.
தாளவாடி, கடம்பூா், தலமலை, திம்பம், ஆசனூா் ஆகிய மலைக் கிராமங்களிலும் கடும் குளிா் காரணமாக மலைவாழ் மக்களின் அன்றாட பணிகள் பாதிக்கப்பட்டது.
