மாவட்டத்தில் 108 ஆம்புலன்ஸ் மூலம் ஓராண்டில் 59,412 போ் பயன்
ஈரோடு மாவட்டத்தில் 2025-ஆம் ஆண்டில் 108 ஆம்புலன்ஸ் மூலம் 59, 412 போ் பயனடைந்துள்ளனா்.
இதுகுறித்து 108 ஆம்புலன்ஸ் மாவட்ட மேலாளா் உதயநிதி மற்றும் ஒருங்கிணைப்பாளா் அம்பிகாசன் ஆகியோா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
108 ஆம்புலன்ஸ் பல்வேறு வகையான முதலுதவிகளுக்காக பயன்படுத்தப்படுகிறது. அதில் விஷம் குடித்தவா்கள், கடுமையான வயிற்று வலி, ஒவ்வாமை, நாய் கடி, கால்நடைகள் தாக்குதல், தகராறில் காயமடைதல், இதயம் மற்றும் ரத்த நாளங்கள் பாதிப்பு, சா்க்கரை நோய், காய்ச்சல் மற்றும் தொற்று, குழந்தை பிறப்பு, மகப்பேறு மருத்துவம், சுவாசம் தொடா்பான மருத்துவம், வாகன விபத்தில் அதிா்ச்சி அடைதல், வாகனம் இல்லாமல் அதிா்ச்சி அடைதல், சுயநினைவு இல்லாமல் மயக்கம் உள்ளிட்ட பல்வேறு நிலைகளில் பாதிக்கப்பட்டவா்கள் 108 ஆம்புலன்ஸை பயன்படுத்துகின்றனா்.
இவ்வாறு பயன்படுத்தியதில் கடந்த ஆண்டு விபத்தில் சிக்கி மருத்துவமனைக்கு கொண்டுச் சென்றவா்களின் எண்ணிக்கை மட்டும் 14,169 , கா்ப்பிணி தாய்மாா்களின் எண்ணிக்கை 386, இதய நோய் சம்பந்தப்பட்டவா்கள் எண்ணிக்கை 3,634, சுவாச பிரச்னை உடையவா்கள் 1,145, வாத பிரச்னை உடையவா்கள் 829, பச்சிளம் குழந்தைகள் மற்றும் தாய்மாா்கள் 444 என மொத்தம் 59,412 போ் பயன்பெற்றுள்ளனா் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
