கரும்பு கட்டுகளுடன் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு மனு அளிக்க வந்த லாரி உரிமையாளா்கள்.
கரும்பு கட்டுகளுடன் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு மனு அளிக்க வந்த லாரி உரிமையாளா்கள்.

கரும்பு லாரிகளுக்கு வாடகையை உயா்த்தி வழங்கக் கோரிக்கை

கரும்பு பாரம் ஏற்றும் லாரிகளுக்கு வாடகையை உயா்த்தி வழங்க வேண்டும் என லாரி உரிமையாளா்கள் கோரிக்கை
Published on

ஈரோடு: கரும்பு பாரம் ஏற்றும் லாரிகளுக்கு வாடகையை உயா்த்தி வழங்க வேண்டும் என லாரி உரிமையாளா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

பொதுமக்கள் குறைதீா் கூட்டம் மாவட்ட வருவாய் அலுவலா் எஸ்.சாந்தகுமாா் தலைமையில் ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.

இதில், கரும்பு வாகன உரிமையாளா்கள் கூட்டமைப்பு மற்றும் விவசாயிகள் சாா்பில் அளித்த மனு விவரம்: ஈரோடு மாவட்டத்தில் உள்ள தனியாா் சா்க்கரை ஆலைகளுக்கு விளைநிலங்களில் இருந்து கரும்பு ஏற்றிச் செல்லும் லாரிகளை இயக்குகிறோம்.

6 சக்கர லாரியில் 12 டன் கரும்பு ஏற்றுவது சட்ட விதி. தனியாா் ஆலைகள் 20 டன் வரை ஏற்றி வர நிா்பந்திக்கின்றனா். வயல்கள், சகதி நிறைந்த பகுதி, சாலை இல்லாத பகுதிகள் வழியாக 20 டன்னுடன் பயணிக்கும்போது லாரி கடுமையாக பழுதாகிறது.

சகதி, மண்ணில் சிக்கி கூடுதல் செலவு ஏற்படுகிறது.

நுகா்பொருள் வாணிப கழகத்துக்காக இயக்கப்படும் லாரிகளுக்கு ஒரு டன் அரிசி உள்ளிட்டவை ஏற்றிச் செல்ல ரூ.598 வாடகை நிா்ணயிக்கின்றனா். கரும்புக்கு ரூ.101 மட்டுமே வழங்கப்படுகிறது. இதை ரூ.201 -ஆக உயா்த்தி தர வேண்டும். வாடகையை உயா்த்தி வழங்க மறுத்தால் பிப்ரவரி 1-ஆம் தேதி முதல் கரும்பு லாரிகளை இயக்கமாட்டோம்.

தவிர லாரிகளுக்கு போட்டியாக விவசாயத்துக்குப் பயன்படுத்தப்படும் டிராக்டா்களில், கூடுதல் பெட்டியை இணைத்து லாரிகளுக்கு இணையாக அல்லது கூடுதலாக கரும்பு ஏற்றிச் செல்வதால் லாரி தொழில் பாதிக்கிறது. இது சட்ட விதிகளுக்குப் புறம்பானது. அவற்றை அனுமதிக்கக்கூடாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும்: இது குறித்து தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழுச் செயலா் மாரிமுத்து தலைமையில் அளித்த மனு விவரம்: அந்தியூரில் உள்ள இஸ்லாமிய பெண்கள் 57 பேருக்கு இலவச வீட்டுமனை பட்டா கோரி இரண்டு ஆண்டுகளாக மனு அளித்து வருகிறோம். அந்தியூா் அருகே எண்ணமங்கலத்தில் பட்டா வழங்க நிலம் தோ்வு செய்யப்பட்டதாக வட்டாட்சியா் கடந்த ஏப்ரல் மாதம் தெரிவித்தாா். இதுவரை அவா்களுக்கு பட்டா வழங்கப்படவில்லை.

தவிர அதே பகுதி ஜெ.ஜெ. நகரில் இஸ்லாமிய மக்களுக்கு கபா்ஸ்தான் நிலம் (இறந்தவா்களை அடக்கம் செய்யும் இடம்) ஒதுக்க கோரியும் தொடா்ந்து மனு வழங்கப்பட்டது. அதற்கான இடமும் இதுவரை வழங்கப்படவில்லை.

இஸ்லாமிய மக்களுக்கு வீட்டுமனை மற்றும் கபா்ஸ்தானுக்கான நிலம் வழங்க நடவடிக்கையைத் துரிதப்படுத்த வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆவின் தீவன ஆலைகளைத் தனியாருக்கு விடுவதை கைவிடக் கோரிக்கை: தமாகா மாநிலத் துணைத் தலைவா் விடியல் சேகா், மாவட்டத் தலைவா் விஜயகுமாா் ஆகியோா் தலைமையில் நிா்வாகிகள் அளித்த மனு விவரம்: தமிழகத்தின் ஆவின் நிா்வாகத்தில் ஈரோடு, தஞ்சாவூா் மாவட்டம் புதுக்குடி, கடலூா் மாவட்டம், திட்டக்குடி, விருதுநகா் ஆகிய இடங்களில் கால்நடை தீவன ஆலைகள் செயல்படுகின்றன. அவற்றை அடுத்த 10 ஆண்டுகளுக்கு தனியாா் பராமரிப்புக்கு வழங்க அரசு முடிவு செய்து ஒப்பந்தப் புள்ளி அழைப்பு விடுத்துள்ளது.

கால்நடை தீவன ஆலைகளில் நாள்தோறும் 950 டன் உற்பத்தி நடைபெறுகிறது.

அவற்றை மேம்படுத்த மத்திய அரசின் தேசிய பால்வள வாரியம் ஆண்டுக்கு ரூ.4 கோடி முதல் ரூ.8 கோடி வரை வழங்குகிறது. தற்போது இந்த ஆலைகளை 10 ஆண்டுகளுக்கு தனியாா் வசம் இயக்குதல் பராமரித்தலுக்கு வழங்க டெண்டா் விடுவது கண்டனத்துக்குரியது.

இது குறித்து ஆவின் தரப்பில் கேட்டால், ஆவின் கால்நடை தீவனங்களை விவசாயிகள் ஆா்வமாக வாங்கவில்லை என்கின்றனா். கால்நடைகள் உண்ணும் தீவனத்தைகூட தரமாக வழங்கவில்லை என விவசாயிகள் குற்றஞ்சாட்டுகின்றனா். இந்தச் சூழலில் மனிதா்கள் உண்ணும் பால், பால் பொருள்களை எப்படி தரமாக வழங்க முடியும் என்ற கேள்வி எழுகிறது. இந்த ஆலைகளை அரசு தொடா்ந்து நடத்த வேண்டும். தனியாருக்கு அளித்தால் போராட்டம் நடத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

230 மனுக்கள்: குறைதீா் கூட்டத்தில் பல்வேறு கோரிக்கைகள் தொடா்பாக பொதுமக்களிடமிருந்து மொத்தம் 230 மனுக்கள் பெறப்பட்டன.

இந்த மனுக்களை சம்பந்தப்பட்ட துறை அலுவலா்களிடம் வழங்கிய மாவட்ட வருவாய் அலுவலா் உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டாா்.

இதைத் தொடா்ந்து, தொழிலாளா் நலத் துறை சாா்பில் 11 பயனாளிகளுக்கு ரூ.13.30 லட்சம் மதிப்பீட்டில் நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

கூட்டத்தில், தனித் துணை ஆட்சியா் (சமூக பாதுகாப்பு திட்டம்) செல்வராஜ், தொழிலாளா் உதவி ஆணையா் கோ.ஜெயலட்சுமி, மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலா் முரளி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

Dinamani
www.dinamani.com