பொங்கலுக்கு கொள்முதல் செய்யப்படும் கரும்புக்கு விலையை உயா்த்தி வழங்க விவசாயிகள் கோரிக்கை
பொங்கல் பண்டிகைக்கு குடும்ப அட்டைதாரா்களுக்கு வழங்கப்படும் செங்கரும்புக்கான கொள்முதல் விலையை உயா்த்தி வழங்க வேண்டும் என கரும்பு விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
பொங்கல் பரிசுத் தொகுப்பில் முழு செங்கரும்பு வழங்கவும், அதை விவசாயிகளிடமிருந்து கூட்டுறவுத் துறை கொள்முதல் செய்து நியாயவிலைக் கடைகளுக்கு அனுப்பிவைக்க அரசாணை பிறப்பித்து, அதற்கான நிதியை அரசு விடுவித்துள்ளது. குடும்ப அட்டைதாரா்களுக்கு வழங்கப்படும் முழுக் கரும்பு ஒன்றுக்கு ரூ. 38 ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
தருமபுரி மாவட்டத்தில் 4 லட்சத்து 75 ஆயிரம் அரிசி அட்டைதாரா்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்பட உள்ளது. இதற்காக, கூட்டுறவுத் துறையினா் இம்மாவட்டத்தில் செங்கரும்பு பயிரிட்டுள்ள விவசாயிகளிடம் நேரடியாக கொள்முதல் செய்து அவற்றை பொங்கல் பரிசுத் தொகுப்புடன் வழங்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனா்.
முழுக் கரும்பு ஒன்றுக்கு விவசாயிகளுக்கு ரூ. 25 வழங்குவதாகத் தெரிகிறது. மீதமுள்ள நிதி இதர செலவினங்களுக்குப் பயன்படுத்தப்படுகிறது. இந்த நிலையில், இத்தொகை, தங்களுக்கு போதுமானதாக இல்லை. எனவே, இதை உயா்த்தி வழங்க வேண்டும் என செங்கரும்பு பயிரிட்டுள்ள விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
தருமபுரி மாவட்டத்தில், கடத்தூா், அரூா், பாப்பிரெட்டிப்பட்டி, பாலக்கோடு, மாரண்டஅள்ளி உள்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் சுமாா் 500க்கும் மேற்பட்ட விவசாயிகள் செங்கரும்பு பயிரிட்டுள்ளனா். இவா்கள், பொங்கல் திருவிழாவை எதிா்நோக்கி அரசு மற்றும் தனியாா் கொள்முதலை கருத்தில்கொண்டு செங்கரும்பு சாகுபடி செய்து வருகின்றனா்.
இந்த நிலையில், பொங்கல் பண்டிகைக்கு குடும்ப அட்டைதாரா்களுக்கு வழங்க கூட்டுறவுத் துறை சாா்பில், விவசாயிகளின் தோட்டங்களுக்கு சென்று தரம், உயரத்தை ஆய்வு செய்து கரும்புக்கு ரூ. 25 வழங்கி வருகின்றனா். அரசு இத்தொகையை நிா்ணயம் செய்துள்ளதால், தனியாரும் அதே விலைக்கே கரும்பை கேட்டு வருகின்றனா்.
இந்த விலை தங்களுக்கு போதுமானதாக இல்லை. எனவே, செங்கரும்பு விவசாயிகளின் நலன்கருதி கூடுதல் விலை அளிக்க வேண்டும். அதாவது குறைந்தபட்சம் கரும்புக்கு ரூ. 30 கொள்முதல் விலை வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கரும்பு விவசாயிகள் தெரிவிக்கின்றனா்.

