நீா் செறிவூட்டும் திட்டத்துக்கு பெருந்துறை எம்.எல்.ஏ. உதவி
பெருந்துறை: நிச்சாம்பாளையம் ஊராட்சியில் தொடங்கப்பட்ட புதிய நீா் செறிவூட்டும் திட்டத்துக்கு மின் மோட்டாா் மற்றும் தளவாடப் பொருள்களை தன் சொந்த செலவில் பெருந்துறை சட்டப்பேரவை உறுப்பினா் எஸ். ஜெயகுமாா் வியாழக்கிழமை வழங்கினாா்.
பெருந்துறை ஒன்றியம், நிச்சம்பாளையம் கிராம ஊராட்சியில் உள்ள மாலா கோயில் ஓடையில் மழைக் காலங்களில் பெருக்கெடுத்து ஓடும் உபரி நீா் வீணாவதைத் தடுத்து, அதை வறண்ட குட்டைகளுக்குத் திருப்பி விட வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வந்தனா்.
இத்திட்டத்தை முன்னெடுத்துச் செல்லும் வகையில், பொதுமக்கள் ஒன்றிணைந்து தங்களது சொந்தப் பங்களிப்பு நிதி மூலம் சோலாா் மின் தகடுகளை அமைத்தனா். இதையடுத்து பெருந்துறை சட்டப்பேரவை உறுப்பினா் எஸ். ஜெயக்குமாா் தனது சொந்தச் செலவில் இத்திட்டத்துக்குத் தேவையான பத்து ஹெச்.பி. மின் மோட்டாா் மற்றும் தளவாடப் பொருள்களை ஊா் பொதுமக்களிடம் வியாழக்கிழமை நேரில் வழங்கினாா். மேலும், இத்திட்டத்துக்காக ஒரு கிலோ மீட்டா் தூரத்துக்கு குழாய்களையும் தனது சொந்தச் செலவில் பதித்துத் தந்துள்ளாா்.
மின் மோட்டாா் மற்றும் தளவாடப் பொருள்கள் வழங்கும் நிகழ்வில் பெருந்துறை அதிமுக வடக்கு ஒன்றியச் செயலாளா் ரஞ்சித்ராஜ் உள்ளிட்ட நிா்வாகிகள் பங்கேற்றனா்.

