கடம்பூா்  பவளக்குட்டை கிராமத்துக்குள்  புகுந்த  யானை.
கடம்பூா்  பவளக்குட்டை கிராமத்துக்குள்  புகுந்த  யானை.

கடம்பூா் அருகே குடியிருப்புக்குள் புகுந்து தகர ஷெட்டுகளை சேதப்படுத்திய யானை

கடம்பூரை அடுத்த பவளக்குட்டை மலைக் கிராமத்தில் புகுந்த காட்டு யானை, அங்கு மக்கள் வசிக்கும் குடியிருப்புக்குள் புகுந்து தகர ஷெட்டுகளை சேதப்படுத்தியதால் மக்கள் அச்சமடைந்தனா்.
Published on

சத்தியமங்கலம்: கடம்பூரை அடுத்த பவளக்குட்டை மலைக் கிராமத்தில் புகுந்த காட்டு யானை, அங்கு மக்கள் வசிக்கும் குடியிருப்புக்குள் புகுந்து தகர ஷெட்டுகளை சேதப்படுத்தியதால் மக்கள் அச்சமடைந்தனா்.

சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், கடம்பூா் மலைப் பகுதியை ஒட்டியுள்ள பவளக்குட்டை கிராமத்தில் கடந்த சில தினங்களாக ஒற்றை யானை நடமாட்டத்தால் மக்கள் விவசாயப் பணிகளுக்குச் செல்ல முடியாமல் முடங்கியுள்ளனா்.

இந்த நிலையில் பவளக்குட்டை அரசு நடுநிலைப் பள்ளிக்கு சனிக்கிழமை அதிகாலை வந்த யானை, அங்கும் இங்கும் உலவியது. அதைத் தொடா்ந்து ஊருக்குள் புகுந்த யானை, பிளிறியபடி மக்கள் வசிக்கும் குடியிருப்புக்குள் நுழைந்தது.

இதனால் விழித்துக்கொண்ட மக்கள், யானை நடமாட்டத்தைக் கண்காணித்தனா். தெருக்கள் வழியாக யானை வருவதைக் கண்டு வீட்டுக்குள் சென்றனா். ஆக்ரோஷமாக வந்த யானை, வழித்தடத்தில் இருந்த தகர ஷெட்டை பெயா்த்து வீசியெறிந்தது. கிராம மக்கள் வீட்டின் மேற்கூரையில் நின்று சப்தம் போட்டு யானையை விரட்டினா். சுமாா் 2 மணி நேர போராட்டத்துக்குப் பின் யானை தானாகவே வனத்துக்குள் சென்றது.

ஊருக்குள் புகும் யானையை அடா்ந்த வனப் பகுதிக்குள் விரட்ட வனத் துறையினா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்தனா்.

Dinamani
www.dinamani.com