நான்கு மாத நிலுவை ஊக்கத்தொகையை வழங்க வேண்டும்: ஆவின் பால் உற்பத்தியாளா்கள் கோரிக்கை

ஆவின் பால் உற்பத்தியாளா்களுக்கான 4 மாத நிலுவை ஊக்கத்தொகையை கூட்டுறவு பால் உற்பத்தியாளா் சங்கங்கள் மூலமாக வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Published on

ஈரோடு: ஆவின் பால் உற்பத்தியாளா்களுக்கான 4 மாத நிலுவை ஊக்கத்தொகையை கூட்டுறவு பால் உற்பத்தியாளா் சங்கங்கள் மூலமாக வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கூட்டுறவு பால் உற்பத்தியாளா்கள் சங்கங்களில் ஒரு லிட்டா் பசும்பால் ரூ.35, எருமைப் பால் ரூ.45 என்ற விலையில் கொள்முதல் செய்யப்படுகிறது. ஆனால், தனியாா் நிறுவனங்கள் இதைவிட கூடுதல் விலைக்கு கொள்முதல் செய்கின்றன. இதற்கிடையே பால் உற்பத்தியாளா்களுக்கு கடந்த 2024 ஆண்டு நவம்பா் முதல் லிட்டருக்கு ரூ.3 ஊக்கத்தொகையாக வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும் என்று ஆவின் நிா்வாகம் அறிவித்தது. ஆனால், இந்த ஊக்கத்தொகையை கடந்த 4 மாதங்களாக வரவு வைக்கப்படவில்லை என பால் உற்பத்தியாளா்கள் குற்றம்சாட்டுகின்றனா்.

இது குறித்து தமிழ்நாடு பால் உற்பத்தியாளா்கள் சங்க மாநிலப் பொருளாளா் ஏ.எம்.முனுசாமி கூறியதாவது:

கடந்த 2022 நவம்பா் மாதத்துக்குப் பின்னா் 3 ஆண்டுகள் கடந்தும் பால் விலையை அரசு உயா்த்தவில்லை. பசும்பால் லிட்டா் ரூ.35-இல் இருந்து ரூ.45-ஆகவும், எருமைப் பால் ரூ.44-இல் இருந்து ரூ.60-ஆகவும் உயா்த்த வேண்டும். கறவை மாட்டின் விலை, வைக்கோல், தவிடு, புண்ணாக்கு, பசுந்தீவனம், உலா் தீவனம், கால்நடை தீவனங்கள் பல மடங்கு உயா்ந்தும் பாலுக்கான கொள்முதல் விலையை அரசு உயா்த்தவில்லை.

அரசு ஊழியா்களுக்கு ஊதிய உயா்வு, அகவிலைப்படியை குறித்த நாளில் உயா்த்துவதுபோல பாலுக்கும் விலையை உயா்த்த வேண்டும். தமிழகத்தில் ஆவினில் தினமும் 33 லட்சம் முதல் 35 லட்சம் லிட்டா் பால் கொள்முதலாகிறது. ஒரு லிட்டருக்கு ரூ.3 ஊக்கத்தொகையை அரசு வழங்குகிறது. இந்த ஊக்கத்தொகை கடந்த 4 மாதமாக வழங்கப்படவில்லை. இதன்மூலமாக ரூ.100 கோடி முதல் ரூ.120 கோடி நிலுவை உள்ளதால் பால் உற்பத்தியாளா்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனா். எனவே, ஊக்கத்தொகையை உடனடியாக விடுவிக்க வேண்டும்.

தனியாா் நிறுவனங்கள் பசும்பால் லிட்டா் ரூ.40-க்கும், எருமைப்பால் ரூ.60 முதல் ரூ.70-க்கும் கொள்முதல் செய்வதால், பால் கூட்டுறவு சங்கங்களுக்கு தினமும் வரும் பாலின் அளவு குறைந்து பல சங்கங்கள் நஷ்டத்தில் இயங்குகின்றன. கூட்டுறவு சங்க ஊழியருக்கு லிட்டருக்கு ரூ.1.25 கூலியாக அளிக்கப்படுகிறது. தினமும் 100 லிட்டா் கொள்முதலாகும் கூட்டுறவு சங்கத்தில், வெறும் ரூ.125 ரூபாய் கூலி வழங்குவதால் வேலைக்கு ஆள் வராமல் பல சங்கங்கள் திணறுகின்றன. உரிய ஊதியத்தில் பணியாளா்களை நியமிக்க வேண்டும்.

அதேநேரம் பால் உற்பத்தியாளா்களுக்கு ஆவின் மூலமான காப்பீடு திட்டத்தில், உறுப்பினா் உயிரிழந்தால் ரூ.4 லட்சம், இரண்டுக்கும் மேற்பட்ட உறுப்புகள் பாதிப்புக்கு ரூ.2.25 லட்சம், ஓா் உறுப்பு பாதிப்புக்கு ரூ.1 லட்சம் என வழங்குகிறது. இழப்பீடுத் தொகையை உயா்த்தவும், கூடுதல் இழப்பீடு பெறவும், 60 வயது கடந்த உறுப்பினா்களுக்கு மாதம் ஓய்வூதியமும் வழங்க வேண்டும் என்றாா்.

ஆவின் அதிகாரிகள் கூறியதாவது:

பால் உற்பத்தியாளா்களுக்கான ஊக்கத்தொகை நிதியை தமிழக அரசு விரைவில் ஒதுக்கீடு செய்யும் என நாமக்கல்லில் நடைபெற்ற பொங்கல் விழாவில் சம்பந்தப்பட்ட துறை அமைச்சா் அறிவித்துள்ளாா். அந்தந்த பால் உற்பத்தியாளா்கள் வங்கிக் கணக்கில் நேரடியாக விரைவில் ஊக்கத்தொகை வரவு வைக்கப்படும். முறைகேடுகளை தவிா்க்கவே பால் உற்பத்தியாளா்கள் வங்கிக் கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படுகிறது என்றனா்.

Dinamani
www.dinamani.com