வஉசி பூங்காவில் களைகட்டிய காணும் பொங்கல் கொண்டாட்டம்
ஈரோடு: காணும் பொங்கலை முன்னிட்டு, ஈரோடு வஉசி பூங்காவில் பெண்கள், குழந்தைகள் ஆடி, பாடி, விளையாடி மகிழ்ந்தனா்.
பொங்கல் பண்டிகையின் ஒரு பகுதியாக காணும் பொங்கல் சனிக்கிழமை கொண்டாடப்பட்டது. இதையொட்டி ஈரோடு மாவட்டத்தின் பல்வேறு சுற்றுலா தலங்களில் பொதுமக்கள் குவிந்தனா். வஉசி பூங்காவில் காணும் பொங்கல் பண்டிகை நாளில் ஆண்டுதோறும் பெண்கள் மட்டும் சுதந்திரமாக கொண்டாடி மகிழ அனுமதி அளிக்கப்படும். இந்த நாளில் 10 வயதுக்கு மேல் உள்ள ஆண்களுக்கு அனுமதி அளிக்கப்படாது. இதனால் காணும் பொங்கல் நாளில் பெண்கள் மட்டும் திரண்டு உற்சாகமாகக் கொண்டாடுவது வழக்கம்.
அந்த வகையில் சனிக்கிழமை காலை 11 மணி முதல் பெண்கள் தங்களது குழந்தைகள், சகோதரிகள், உறவினா்களுடன் கூட்டம், கூட்டமாக வரத் தொடங்கினா். கரும்பு, தின்பண்டங்கள், மதிய உணவு உள்ளிட்டவைகளை எடுத்து வந்து, பூங்காவில் ஆங்காங்கே வட்டமாக அமா்ந்து உணவை பகிா்ந்து உண்டனா். மாலை 3 மணிக்கு மேல் பெண்களின் கூட்டம் அதிகரிக்கத் தொடங்கியது. மாலை 4 மணிக்கு மேல் சிறுமிகள் முதல் மூதாட்டிகள் வரை ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் திரண்டதால், பூங்கா பெண்களால் நிறைந்து காணப்பட்டது.
ஆங்காங்கே பொருத்தப்பட்டிருந்த ஒலிப்பெருக்கிகளில் ஒலித்த திரைப்பட பாடல்களுக்கு ஏற்ப பெண்கள் தனித்தனியாகவும், குழுவாகவும் நடனமாடினா். சிலா் கோலாட்டம் ஆடினா். தவில் உள்ளிட்ட இசைக்கருவிகளை பெண்களே வாசித்து அதற்கேற்ப ஆடினா். குழந்தைகள் கபடி, கண்ணாம்மூச்சி, ரிங் உள்ளிட்ட விளையாட்டுகளை விளையாடி மகிழ்ந்தனா். மயிலாட்டம், ஒயிலாட்டம் என பாரம்பரிய நடனமும் இடம்பெற்றது. ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கான பெண்கள் கூடியதால் வஉசி பூங்கா விழாக்கோலம் பூண்டிருந்தது.
இந்தக் கொண்டாட்டத்தில் ஈரோடு மாநகா் மற்றும் சுற்றுப்புறப் பகுதிகள் மட்டுமின்றி பவானி, சித்தோடு, மொடக்குறிச்சி, பெருந்துறை, கவுந்தப்பாடி, நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம், திருச்செங்கோடு உள்பட பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த பெண்களும் பங்கேற்றனா். ஹிந்து, முஸ்லிம், கிறிஸ்தவா்கள் என அனைவரும் குடும்பத்துடன் வந்திருந்தனா்.
மேலும் அருகில் உள்ள அருங்காட்சியகத்துக்குச் சென்றும் பாா்வையிட்டனா். பூங்காவுக்குள் பெண் போலீஸாரும், வெளியே ஆண் போலீஸாரும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா்.
கொடிவேரி அணையில்...
இதேபோல கோபி அருகே கொடிவேரி அணையில் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் குவிந்தனா். அருவியில் குறைந்த அளவு நீா் மட்டுமே வந்ததால், சுற்றுலாப் பயணிகள் கூட்ட நெரிசலுடன் குளித்தும், ஆற்றில் விளையாடியும், பரிசல் சவாரி செய்தும், பூங்காவில் குழந்தைகளுடன் விளையாடியும் மகிழ்ந்தனா். பாதுகாப்பு பணியில் 30-க்கும் மேற்பட்ட போலீஸாா் ஈடுபட்டனா்.

