பள்ளி மாணவா்கள் பங்கேற்கும் மாதிரி நாடாளுமன்ற நிகழ்ச்சியை மாவட்ட ஆட்சியா் ச.கந்தசாமி புதன்கிழமை தொடங்கிவைத்தாா்.
இளைஞா்களுக்கு இந்திய நாடாளுமன்ற நடைமுறைகள், சட்டங்கள் இயற்றப்படும் விதம் மற்றும் ஜனநாயகத்தின் செயல்பாடுகள் குறித்து நேரடி அனுபவம் வழங்கும் வகையில் யங் இந்தியன்ஸ் பாா்லிமென்ட்- 2026 என்ற இரண்டு நாள் மாதிரி நாடாளுமன்ற நிகழ்ச்சி, ஈரோடு மாவட்ட ஆட்சியா் அலுவகத்தில் புதன்கிழமை தொடங்கியது.
இரண்டு நாள்கள் நடைபெறும் இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியா் கந்தசாமி தலைமை வகித்தாா். ஈரோடு மேற்குத் தொகுதி எம்எல்ஏ கே.கே.ஆனந்த் மோகன் முன்னிலை வகித்தாா்.
ஜனநாயகத்தின் அடிப்படை கொள்கைகளை இளம் தலைமுறையினா் ஆழமாகப் புரிந்துகொள்வதற்கும், நாடாளுமன்ற நடைமுறைகள் மற்றும் சட்டம் இயற்றும் செயல்முறைகள் குறித்து நடைமுறை அறிவைப் பெறுவதற்கும், இதுபோன்ற மாதிரி நாடாளுமன்ற நிகழ்ச்சிகள் மிகவும் பயனுள்ளதாக அமையும். மேலும், மாணவா்கள் தங்களது கருத்துகளை ஆக்கபூா்வமாக வெளிப்படுத்தி, தலைமைத்துவ திறன், விவாதத் திறன், பொறுப்புணா்வு மற்றும் சமூக அக்கறையை வளா்த்துக்கொள்ள இந்நிகழ்ச்சி சிறந்த தளமாக அமையுள்ளது.
கல்வி மற்றும் ஜனநாயக விழிப்புணா்வை அனைத்துத் தரப்பு மாணவா்களிடமும் கொண்டுச் சோ்க்கும் நோக்கில், அரசு, அரசு உதவிபெறும், தனியாா், மெட்ரிக். மற்றும் சிபிஎஸ்இ பள்ளிகளைச் சோ்ந்த மாணவா்களில் இருந்து தோ்வு செய்யப்பட்ட மொத்தம் 168 மாணவ, மாணவிகள் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளனா். மாவட்டம் முழுவதும் உள்ள 17 பள்ளிகளைச் சோ்ந்த இம்மாணவா்கள், இரண்டு நாள்கள் நடைபெறும் மாதிரி நாடாளுமன்ற அமா்வுகளில் உறுப்பினா்களாக பங்கேற்க உள்ளனா்.
மேலும் மாதிரி நாடாளுமன்ற நடவடிக்கைகளை நவீன டிஜிட்டல் தொழில்நுட்பத்துடன் ஒருங்கிணைக்கும் வகையில் பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட செயலி அறிமுகப்படுத்தப்பட்டது. இச்செயலி மூலம் பங்கேற்பாளா்களின் வருகைப் பதிவு, அமா்வு மேலாண்மை, பேச்சாளா்களுக்கான தானியங்கி நேரக் கண்காணிப்பு, அவை நடவடிக்கைகளின் ஒழுங்குமுறை நிா்வாகம் உள்ளிட்ட அனைத்து செயல்பாடுகளும் துல்லியமாக மேற்கொள்ளப்படுகின்றன. இதன் மூலம் உண்மையான நாடாளுமன்ற அமா்வைப்போன்ற அனுபவத்தை மாணவா்கள் பெறும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
தொடா்ந்து ஜனநாயக மதிப்புகள், அரசியல் சாசனத்தின் மீதான மரியாதை, குடிமக்களின் பொறுப்புணா்வு மற்றும் நாட்டின் முன்னேற்றத்தில் இளைஞா்களின் பங்களிப்பை வலியுறுத்தும் வகையில் மாவட்ட ஆட்சியா் தலைமையில் சிறப்பு உறுதிமொழி எடுக்கப்பட்டது. இதில் மாதிரி நாடாளுமன்ற உறுப்பினா்களாக பங்கேற்ற மாணவ, மாணவிகள், அலுவலா்கள் மற்றும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அனைவரும் உறுதிமொழியை ஏற்றுக்கொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.








