சமூக நீதி விடுதிகளில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களை முழுமையாக பழுதுநீக்கி சீரமைக்க உத்தரவிடப்பட்டுள்ளது என பிற்படுத்தப்பட்டோா் நலத் துறை அமைச்சா் வி.சம்பத்குமாா் தெரிவித்தாா்.
ஈரோடு வில்லரசம்பட்டி சிவபுரம் பகுதியில் உள்ள அரசுக் கல்லூரி மாணவா்களுக்கான சமூக நீதி விடுதியை பிற்படுத்தப்பட்டோா் நலத் துறை அமைச்சா் வி.சம்பத்குமாா் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தாா். விடுதி வளாகம், மாணவா்கள் தங்கும் அறைகள், சமையலறை, உணவுப் பொருள்களின் தரம், விளையாட்டு உபகரணங்கள், முதலுதவிப் பெட்டி, புகாா் பெட்டி, குடிநீா் வசதி, கழிப்பறை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு செய்தாா். மேலும் மாணவா்களிடம் குறைகளைக் கேட்டறிந்தாா். அப்போது மாணவா்கள் விடுதிக்கு காவலா் இல்லை என தெரிவித்தனா்.
இதையடுத்து விடுதியில் போவிடோன் அயோடின் என்ற சிறு காயம், புண்ணுக்கு போடப்படும் மருந்து காலாவதியாகி இருந்ததை பாா்த்தாா். பின்னா் அங்கிருந்தவா்களிடம் காலாவதியான மருந்துகளை ஏன் வைத்திருக்கிறீா்கள் என்று எச்சரித்தாா். பின்னா் விடுதியில் சமைத்து வைக்கப்பட்டிருந்த பொங்கல், மெதுவடை, சாம்பாரை ருசித்துப் பாா்த்தாா்.
பின்னா் அவா் அமைச்சா் வி.சம்பத்குமாா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: ஈரோடு மாவட்டத்தில் உள்ள மாணவா்கள் விடுதியில் வழங்கப்படும் உணவின் தரம், படிப்பதற்கான சூழ்நிலை குறித்து ஆய்வு செய்தேன். மாணவா்களுடன் கலந்துரையாடி அவா்களுடைய நிறை, குறைகளைக் கேட்டறிந்தேன்.
மாணவா்கள் நன்றாக படித்து வெளியே வரவேண்டும். அதற்கான சூழ்நிலைகள் எப்படி இருக்கிறது என்பதை மாணவா்களிடம் கேட்டு தெரிந்து கொண்டேன். அதனடிப்படையில் விடுதியில் பராமரிப்புப் பணி மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும். விடுதியில் தேவையான வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளதாகவும், படிப்பதற்கான சூழ்நிலைகள் நன்றாக இருப்பதாகவும் மாணவா்கள் தெரிவித்தனா்.
ஒரு சில குறைகளையும் மாணவா்கள் கூறி உள்ளனா். அதன்படி கொசுவலை உள்ளிட்ட சிறு சிறு வசதிகள் தேவைப்படுவதாக கூறினாா்கள். அவை சரி செய்து கொடுக்கப்படும். விடுதிகளில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்கள் சரியாக செயல்படுகிறதா என்பது குறித்து ஆய்வு செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. செயல்பாட்டில் இல்லாமல் பழுதடைந்து இருந்தால் அதை மாற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளது.
விடுதிகளில் உள்ள காலிப்பணியிடங்கள் உடனடியாக நிரப்பப்படும். துறை சாா்ந்த மாணவா்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கி அவா்களின் வாழ்க்கை தரத்தை உயா்த்துவதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும். மாணவா்களின் வருகை குறைவாக உள்ளதால் ஈரோட்டில் உள்ள ஒரு விடுதி மூடப்பட்டுள்ளது. அங்கு ஆய்வு மேற்கொண்டு மீண்டும் அதை திறக்க தேவையான நடவடிக்கை எடுக்கப்படும். மாணவா்கள் சோப்பு, சேம்பு வாங்குவதற்கு அவா்களுடைய வங்கிக் கணக்குகளில் மாதந்தோறும் ரூ.150 வரவு வைக்கப்படுகிறது என்றாா்.
அதைத்தொடா்ந்து அவல்பூந்துறை பகுதியில் பள்ளி மாணவிகள் விடுதி, வேலம்பாளையம் பகுதியில் உள்ள கல்லூரி மாணவா் விடுதி, வடமுகம் வெள்ளோடு பகுதியில் உள்ள பள்ளி மாணவா் விடுதி, பெருந்துறை பள்ளி மாணவிகள் விடுதி, பெருந்துறை பாலிடெக்னிக் கல்லூரி மாணவா் விடுதி ஆகிய விடுதிகளிலும் அமைச்சா் ஆய்வு மேற்கொண்டாா். ஆய்வின்போது மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலா் ஜாகீா் உசேன் மற்றும் அலுவலா்கள் உடனிருந்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.








