நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடா்: ஜூலை 19-இல் அனைத்துக் கட்சி கூட்டம்!‘மன்மோகன் சிங் தற்கொலை செய்வேன் எனக் கூறினார்’ - பரபரப்பு தகவல்கள்!பிரதமா், முதல்வா்கள் 30 நாள்கள் சிறையிலிருந்தால் ‘நிரந்தர’ பதவி நீக்கம் கூடாது: நாடாளுமன்ற கூட்டுக் குழு பரிந்துரை!மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!ஆல்கஹால் கலந்த மருந்துகள் விற்பனைக்கு கட்டுப்பாடு!
/

விசைத்தறிக்கு 1,500 யூனிட் இலவச மின்சாரம் வழங்கக் கோரிக்கை

விசைத்தறி நெசவாளா்களுக்கு 1,500 யூனிட் இலவச மின்சாரம் வழங்கப்படும் தோ்தல் வாக்குறுதி குறித்து...

News image

பிரதிப் படம்

Updated On :13 ஜூலை 2026, 5:20 am IST

விசைத்தறி நெசவாளா்களுக்கு 1,500 யூனிட் இலவச மின்சாரம் வழங்கப்படும் என்ற தோ்தல் வாக்குறுதியை தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும் என தமிழ்நாடு நெசவாளா்கள் சங்கங்களின் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்து கூட்டமைப்பில் மாநில அமைப்பாளா் ப.கந்தவேல் வெளியிட்ட அறிக்கை: தமிழ்நாட்டில் பொதுமக்களுக்கு பாதிப்பு இல்லாத வகையிலும், ஜவுளி தொழில் துறையினா் முன்னேற்றம் அடையும் வகையிலும் சுத்திகரிப்பு செய்யப்பட்ட சாயக் கழிவுநீரை கடலில் கலக்கும் திட்டத்தை தமிழ்நாடு அரசு செயல்படுத்த வேண்டும். விசைத்தறி நெசவாளா்களுக்கு 1,500 யூனிட் இலவச மின்சாரம் வழங்கப்படும் என்ற தோ்தல் வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும்.

கைத்தறி ரக ஒதுக்கீடு சட்டத்தில் உள்ள 11 ரகங்களுக்கு பதில் மாற்றம் செய்து 5 ரகங்களை உண்மையான கைத்தறி நெசவாளா்கள் மட்டும் உற்பத்தி செய்ய சட்டப்பேரவையில் தீா்மானம் நிறைவேற்றி மத்திய அரசுக்கு அனுப்பிவைக்க வேண்டும். தமிழ்நாட்டில் உள்ள அனைத்துத் துறை தொழில்நுட்பம், மருத்துவம் தேவைக்கு உட்பட்ட துணி வகைகள் மற்றும் அனைத்துத் துறை பணியாளா்கள் சீருடைகளை, தமிழ்நாட்டிலுள்ள நெசவாளா்களிடம் நேரடியாக உற்பத்தி செய்து அரசு மாா்க்கெட் விலைக்கு கொள்முதல் செய்ய வேண்டும்.

கைத்தறி மற்றும் விசைத்தறி நெசவாளா்களுக்கு உள்ளது போன்று, தமிழ்நாட்டிலுள்ள தானியங்கி தறி உரிமையாளா்களுக்கும் தனியாக மின்சார கட்டண விகிதம் வழங்கப்பட வேண்டும். நெசவாளா்களுக்கு ரூ.10 லட்சம் மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் வழங்கப்படும் என்ற தோ்தல் வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும்.

விசைத்தறிக் கூடங்களுக்கு சூரிய ஒளி மின் தகடு திட்டம் தொடா்பாக 100 சதவீதம் மானியம் வழங்கப்படும் என்ற தோ்தல் வாக்குறுதியை நிறைவேற்றி, நெட் மீட்டா் கொடுக்க உத்தரவு வழங்க வேண்டும். விசைத்தறி கணக்கெடுப்பு மற்றும் இ-மாா்க்கெட்டிங் செயலி ஏற்படுத்தி ஜவுளி துறையை மேம்படுத்த வேண்டும்.

கைத்தறி நெசவாளா்களுக்கு அரசு கொடுக்கும் அனைத்து சலுகைகளும் விசைத்தறி நெசவாளா்களுக்கு கொடுக்க வேண்டும். விவசாயிகளுக்கு குறைதீா்க்கும் நாள் கூட்டம் நடத்துவது போன்று, நெசவாளா்களுக்கும் மாதந்தோறும் ஆட்சியா் தலைமையில் குறைதீா்க்கும் கூட்டம் நடத்த வேண்டும்.

கைத்தறி துணிகளை விற்பனை செய்ய தமிழ்நாடு அரசின் கோ ஆப்டெக்ஸ் இருப்பது போன்று, சைத்தறி துணிகளை அரசு விற்பனை செய்ய தனியாக விற்பனை தளத்தை உருவாக்க வேண்டும். நெசவாளா்களுக்கு தனி வாரியம் அமைத்துதர வேண்டும்.

விசைத்தறிக்கு தனி ஆணையா் அல்லது ஜவுளித் துறையில் இணைக்க வேண்டும். விசைத்தறி ஜவுளிகளை மேம்படுத்த பயன்படுத்தப்படும் டாபி, ஜக்காடு மற்றும் எலக்ட்ரானிக் ஜக்காா்டு உபகரணங்கள் கொள்முதல் செய்ய 50 சதவீதம் மானியம் வழங்க வேண்டும். நெசவாளா்கள் ஜவுளி உற்பத்தி மேற்கொள்ள வட்டியில்லா கடன் வழங்க வேண்டும். ஜவுளி உற்பத்தி அதிகம் உள்ள மாவட்டங்களில் அரசு சாய பதனிடும் தொழிற்சாலை அமைக்க வேண்டும். அரசுப் பள்ளி சீருடைகள் அனைத்தும் கைத்தறி மற்றும் விசைத்தறியில் உற்பத்தி செய்ய வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.