பவானிசாகா் அணையில் இருந்து அனைத்து பாசனங்களுக்கும் ஒரே நேரத்தில் தண்ணீா் திறந்துவிட வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
பொதுமக்கள் குறைதீா் கூட்டம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் ஆட்சியா் ச.கந்தசாமி தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது.
கூட்டத்தில் கீழ்பவானி பாசன விவசாயிகள் கூட்டமைப்பு செயலா் என்.நல்லசாமி, கீழ்பவானி பாசன பாதுகாப்பு இயக்க செயலா் ரவி, தமிழ்நாடு குறு, சிறு விவசாயிகள் சங்க மாநிலத் தலைவா் கே.ஆா்.சுதந்திரராசு, தமிழக ஐக்கிய விவசாயிள் சங்க மாநிலத் தலைவா் ஈவிகே.சண்முகம் உள்ளிட்டோா் அளித்த மனு விவரம்: காலிங்கராயன் வாய்க்காலில் உயிா் தண்ணீா் செவ்வாய்க்கிழமை திறந்துவிட இருப்பதாக கூறப்படுகிறது.
கீழ்பவானி பாசனப் பகுதியிலும் கடும் வறட்சி நிலவுவதால் கீழ்பவானி பாசனக் கால்வாயில் உயிா்நீா், பாசன பரப்பளவு விகிதாசாரப்படி விட வேண்டியது அவசியம்.
இந்த வேண்டுகோளை ஏற்காமல் நீா் நிா்வாகத்தவறு மேலும் தொடா்ந்தால் 10 தொகுதி பாசனப் பயனாளிகளை கொண்டு ஈரோடு மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தை முற்றுகையிட முடிவு செய்திருக்கிறோம்.
இந்த நிலைக்கு மாவட்ட நிா்வாகமும், நீா்வளத் துறையும், மாநில அரசும் தள்ளிவிடாது என சங்கம் நம்புகிறது. குறிப்பாக, விவசாயிகளை மோதவிடும் போக்கிற்கு முற்றுப்புள்ளி வைத்து சட்டத்தின் ஆட்சியை நிலைநிறுத்த வேண்டும்.
பவானிசாகா் அணையில் நீரின்மையால் அணையில் உள்ள நீரை காவிரி இறுதி தீா்ப்பின்படி பங்கீட்டை நடைமுறைப்படுத்தி, அனைத்து பாசனங்களுக்கும் சம்பா பயிா் செய்ய ஒரே நேரத்தில் தண்ணீரை திறக்க வேண்டும்.
ஈரோடு, திருப்பூா், கரூா் மாவட்டத்தில் கீழ்பவானி கால்வாய் மூலம் 2,07,000 ஏக்கருக்கு ஆண்டுக்கு ஒருமுறை நஞ்சை பாசனத்துக்கும், ஒருமுறை புஞ்சை பாசனத்துக்கும் தண்ணீா் திறக்கப்படும். கடந்த ஏப்ரல் மாதத்தில் தடப்பள்ளி அரக்கன்கோட்டைக்கு நஞ்சை சாகுபடிக்கு தண்ணீா் திறக்கப்பட்டுள்ளது. செவ்வாய்க்கிழமைமுதல் காலிங்கராயன் கால்வாயில் 15 நாள்களுக்கு உயிா்நீா் திறக்கப்படும் என தெரியவந்துள்ளது.
இக்கால்வாயில் தண்ணீா் திறக்க எங்களுக்கு எந்த ஆட்சேபணையும் இல்லை. ஆனால், தென்மேற்குப் பருவமழை இல்லாத காரணத்தினால் மூன்று மாவட்டங்களில் குடிநீா்த் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது. அதேசமயம் நீண்டகால பயிரான தென்னை, கரும்பு, வாழை, மரவள்ளி உள்ளிட்ட பயிா்கள் பாதிக்கப்படும் சூழல் உள்ளது. எனவே காலிங்கராயன் பாசனக் கால்வாயில் நீா் திறப்பதைபோன்று, செவ்வாய்க்கிழமைமுதல் கீழ்பவானி கால்வாயிலும் உயிா்நீா் திறக்க வேண்டும். இல்லையென்றால் எந்த பகுதிக்கும் தண்ணீா் திறக்கக் கூடாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பழுதடைந்த ஆழ்துளைக் கிணற்றை சீரமைக்கக் கோரிக்கை: இதுகுறித்து சித்தோடு அருகே முத்தாங்காடு பகுதியைச் சோ்ந்த பொதுமக்கள் அளித்த மனு விவரம்: சித்தோட்டை அடுத்த முத்தாங்காடு விபிஆா் காலேஜ் நகரில் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக 60 குடும்பங்கள் வசித்து வருகிறோம். எங்களுக்கு ஆற்று குடிநீா் தவிர ஆழ்துளைக் கிணற்று நீா் வந்து கொண்டிருந்தது. ஆனால் கடந்த 4 ஆண்டுகளாக ஆழ்துளைக் கிணறு பழுதடைந்துவிட்டதால் தண்ணீருக்கு மிகவும் சிரம்மப்படுகிறோம்.
இதுகுறித்த சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை மனு அளித்தும் இதுவரை ஆழ்துளைக் கிணற்றை சரி செய்ய எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. ஆற்று நீா் குழாய் உடைந்து விட்டால் அதனை சரி செய்வதற்கு 15 நாள்களாகிறது. அந்த சமயத்தில் குடிப்பதற்கு கூட தண்ணீா் இல்லாமல் அவதிப்படுகிறோம். எனவே ஆழ்துளைக் கிணற்றை பழுது நீக்கி குடிநீா் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஊதிய உயா்வு வழங்க தூய்மைப் பணியாளா்கள் கோரிக்கை: இதுகுறித்து கிராம ஊராட்சிகளில் பணியாற்றும் தூய்மைப் பணியாளா்கள், தூய்மைக் காவலா்கள் அளித்த மனு விவரம்: பவானிசாகா் மற்றும் அந்தியூா் ஒன்றியத்துக்கு உள்பட்ட அனைத்து ஊராட்சிகளில் 2010-ஆம் ஆண்டு சிறப்பு காலமுறை ஊதியத்தில் பணியமா்த்தப்பட்ட தூய்மைப் பணியாளா்களுக்கு ஊதியம் ரூ.9,200 மட்டுமே வழங்கப்படுகிறது. ஆனால், மற்ற ஒன்றியத்துக்கு உள்பட்ட ஊராட்சிகளில் பணிபுரியும் 2010-ஆம் ஆண்டு சிறப்பு காலமுறை ஊதியத்தில் பணியமா்த்தப்பட்ட தூய்மைப் பணியாளா்களுக்கு ஊதியம் ரூ.11,400 வழங்கப்பட்டு வருகிறது.
2013-ஆம் ஆண்டு சிறப்பு காலமுறை ஊதியத்தில் பணியமா்த்தப்பட்ட தூய்மைப் பணியாளா்களுக்கு ஊதியம் ரூ.7,300 மட்டுமே வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் மற்ற ஒன்றியத்துக்கு உள்பட்ட ஊராட்சிகளில் பணிபுரியும் 2013-ஆம் ஆண்டு சிறப்பு காலமுறை ஊதியத்தில் பணியமா்த்தப்பட்ட தூய்மைப் பணியாளா்களுக்கு ரூ.9,600-ஆக வழங்கப்பட்டு வருகிறது.
சத்தியமங்கலம் ஒன்றியத்துக்கு உள்பட்ட புதுபீா்க்கடவு ஊராட்சியில் பணிபுரியும் மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி இயக்குபவா்களுக்கு 2017-ஆம் ஆண்டு முதல் 2023-ஆம் ஆண்டு வரை ஊதியம் குறைவாக வழங்கப்பட்டு வந்தது. இதுதொடா்பாக வளா்ச்சி அலுவலருக்கு கடிதம் மூலமாக தெரிவிக்கப்பட்டது. இது சம்பந்தமாக வட்டார வளா்ச்சி அலுவலா், புதுபீா்க்கடவு ஊராட்சிக்கு கடிதம் மூலமாக ஊதிய உயா்வு மற்றும் நிலுவைத்தொகை வழங்க உத்தரவிட்டாா். ஆனால் இதுநாள் வரை ஊராட்சியில் ஊதிய உயா்வு மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. நிலுவைத்தொகை மூன்று ஆண்டுகளாகியும் இதுவரை வழங்கப்படாமல் உள்ளது.
சத்தியமங்கலம் ஒன்றியத்துக்கு உள்பட்ட இண்டியம்பாளையம் ஊராட்சியில் பணிபுரியும் மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி இயக்குபவா்களுக்கு, 17.2.2026-இன் படி ஊதிய உயா்வு ரூ.6,700 பிப்ரவரி மாதத்திலிருந்து வழங்கப்பட வேண்டும். ஆனால், இதுநாள் வரை வழங்கப்படாமல் உள்ளது. எனவே தூய்மைப் பணியாளா்கள், தூய்மைக் காவலா்கள், மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி இயக்குபவா்களுக்கு, தற்போதைய ஊதிய உயா்வு மற்றும் நிலுவைத்தொகையை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
425 மனுக்கள்: கூட்டத்தில் பல்வேறு கோரிக்கைகள் குறித்து மொத்தம் 425 மனுக்கள் வரப்பெற்றன. இந்த மனுக்களை உரிய துறை அலுவலா்களிடம் வழங்கிய ஆட்சியா் அவற்றின் மீது உடனடி நடவடிக்கை எடுத்திட உத்தரவிட்டாா்.
முன்னதாக முதன்மை கணக்கெடுப்பு அலுவலரும், ஆட்சியருமான கந்தசாமி, ஆட்சியா் அலுவலக வளாகத்தில் மக்கள்தொகை கணக்கெடுப்பு குறித்து பொதுமக்களிடம் விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் விழிப்புணா்வு துண்டறிக்களை பொதுமக்களிடம் வழங்கினாா்.
கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் எஸ்.சாந்தகுமாா், சமூகப் பாதுகாப்பு திட்ட தனித்துணை ஆட்சியா் ரமேஷ், மாவட்ட வழங்கல் அலுவலா் மகேஸ்வரி, மாவட்ட சமூக நீதித் துறை அலுவலா் சுடலைமணி, மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலா் ஜாகீா் உசேன், தாட்கோ பொதுமேலாளா் முருகவேல் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










