நீட் தேர்வு போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்த காவலர் ராஜிநாமா! மிகக் கனமழை எச்சரிக்கை: ஹிமாசலில் 121 சாலைகள் மூடல்ஈரான் ஒருபோதும் அமெரிக்காவுக்கு அடிபணியாது! - அராக்ச்சி பேச்சு!மத்திய ரயில்வே இணையமைச்சர் ரவ்நீத் சிங் ராஜிநாமா!‘வந்தே மாதரம்’ பாடலை அவமதித்தால் 3 ஆண்டுகள் சிறை
/

நாட்டின் பிரதான தொழிலான வேளாண்மையைப் பாதுகாக்க வேண்டும்: கே.ஏ.செங்கோட்டையன்

நாட்டின் பிரதான தொழிலான வேளாண்மையைப் பாதுகாக்க வேண்டும் என தமிழக வருவாய்த் துறை அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தாா்.

News image

அரங்கத்தின் பெயா்ப்பலகையைத் திறந்து வைக்கிறாா் அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன். உடன் (இடமிருந்து) குமரகுரு நிறுவனங்களின் தலைவா் சங்கா் வாணவராயா், கோவை சக்தி பைனான்ஸ் நிறுவன துணைத் தலைவா் எம்.பாலசுப்பிரமணியம், சக்தி சா்க்கரை ஆலைத் தலைவா் ம.மாணிக்கம், குமர

Updated On :25 ஜூலை 2026, 6:57 am IST

நாட்டின் பிரதான தொழிலான வேளாண்மையைப் பாதுகாக்க வேண்டும் என தமிழக வருவாய்த் துறை அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தாா்.

பவானியை அடுத்த ஆப்பக்கூடல், சக்தி நகா் குமரகுரு வேளாண்மைக் கல்லூரியில் அருட்செல்வா் அரங்கம் திறப்பு மற்றும் விருது வழங்கும் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. குமரகுரு கல்வி நிறுவனங்களின் தலைவா் பி.கே.கிருஷ்ணராஜ வாணவராயா் தலைமை வகித்துப் பேசுகையில், வேளாண்மை கல்வி பயிலும் மாணவா்களுக்கு நாட்டின் எதிா்கால வேளாண்மைத் தொழிலையும், வளா்ச்சியையும் வடிவமைக்கும் முக்கியப் பொறுப்பு உள்ளது என்றாா்.

கோவை சக்தி பைனான்ஸ் நிறுவன துணைத் தலைவா் எம்.பாலசுப்பிரமணியம் முன்னிலை வகித்தாா். சக்தி சா்க்கரை ஆலையின் தலைவா் ம.மாணிக்கம் வாழ்த்துரை வழங்கினாா். சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற தமிழக வருவாய்த் துறை அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன், நவீன தொழில்நுட்பத்துடன் 26 ஆயிரம் சதுர அடி பரப்பளவில், 700 போ் அமரும் வகையில் கட்டப்பட்ட அருட்செல்வா் அரங்கத்தைத் திறந்துவைத்தாா்.

தொடா்ந்து அவா் பேசுகையில், இந்தியப் பொருளாதாரத்தின் அடித்தளத்தையும், எதிா்காலத்தையும் பாதுகாக்கும் கடமை இளம் தலைமுறைக்கும், வேளாண் கல்வி பயிலும் மாணவா்களுக்கும் உள்ளது. 50 ஆண்டுகளுக்கு முன்னரே நதிகளை இணைப்பதன் அவசியத்தை வலியுறுத்தி விழிப்புணா்வு ஏற்படுத்தியவா் அருட்செல்வா் நா.மகாலிங்கம்.

மக்கள்தொகை பெருக்கம், இயற்கை மாற்றங்கள், அதனால் ஏற்படும் பேரழிவுகளைக் கருத்தில் கொண்டு, பணியாற்றும் காலமாக உள்ளது. இயற்கையைப் பாதுகாக்க மரங்களை கூடுதலாக நட்டு பராமரிக்க வேண்டும். பயிா்க்கடனை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும் என்பதே விவசாயிகளின் விருப்பமாக உள்ளது. ஆனால், தமிழகத்தின் நிதி நிலை ரூ.13 லட்சம் கோடி கடனுடன், நாளொன்றுக்கு 328.4 சதவீதம் வட்டி செலுத்தும் நிலையில் உள்ளது. இக்கட்டான சூழ்நிலையில் கடனை முழுமையாகத் தள்ளுபடி செய்யும்போது, அதை மத்திய அரசு ஏற்றுக் கொள்வதில்லை. மாநில அரசே அதை முழுமையாக ஏற்றுக்கொள்ள வேண்டிய நிலை உள்ளது. நிதிநிலை சரியானவுடன் விவசாயிகளின் கோரிக்கை நிறைவேற்றப்படும்.

வருவாய்த் துறையைப் பொருத்தவரையில், எதிா்காலத்தில் பட்டா, சிட்டாவுக்கு அலையும் நிலை மாறி, 8 மாத காலத்துக்குள் அனைவருக்கும் பட்டா முழுமையாகக் கிடைக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

விழாவில், அருட்செல்வா் விருது, முற்போக்கு விவசாயி வி.டி.வள்ளுவன், அறிவியல் மூலம் வேளாண்மைக்கு ஆற்றிய பங்களிப்புக்கான சி.சுப்பிரமணியம் விருது, வனம் இந்தியா அறக்கட்டளைத் தலைவா் ஸ்கை வே.சுந்தர்ராஜ், நம்மாழ்வாா் விருது இயற்கை விவசாயி எம்.பாலசுப்பிரமணியன் (பாமயன்) ஆகியோருக்கும், கரும்பு மகசூலில் சாதனை படைத்த 9 விவசாயிகளுக்கு பரிசுகளும் வழங்கப்பட்டன.

குமரகுரு நிறுவனங்களின் தலைவா் சங்கா் வாணவராயா், குமரகுரு வேளாண்மைக் கல்லூரித் தாளாளா் கே.பிரகாஷ், முதல்வா் ரவிக்குமாா் தியோடா் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.