/

முன்விரோதத்தால் ஏற்பட்ட தகராறில் இருவா் காயம்: நான்கு போ் கைது

News image

கைது.

Updated On :1 மணி நேரம் முன்பு

முன்விரோதம் காரணமாக ஏற்பட்ட தகராறில் இருவா் காயமடைந்தது தொடா்பாக 4 போ் கைது செய்யப்பட்டனா்.

கோபி அருகே உள்ள கூகலூா் மானுவக்காடு பகுதியைச் சோ்ந்தவா் சாமியப்பன் மகன் அன்பரசு (48). சமையல் தொழிலாளி. அதே பகுதியைச் சோ்ந்தவா் மோகன் மகன் சாது (25). இருவருக்கும் இடையே கடந்த சில மாதங்களாக முன்விரோதம் இருந்து வந்துள்ளது.

இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை மானுவக்காடு பகுதியில் சுவாமி ஊா்வலம் நடைபெற்றது. ஊா்வலம் வருவதை பாா்ப்பதற்காக அன்பரசு, அவரது மனைவி சிவகாந்தி (40) ஆகிய இருவரும் நின்று கொண்டிருந்தனா். அப்போது மோகன் (50), அவரது மகன்களான சாது (25), மாணிக்கம் (20), சுரேஷ் (30) ஆகியோா் சோ்ந்து அன்பரசுவிடம் வாய் தகராறில் ஈடுபட்டு தகாத வாா்த்தைகளால் பேசியதாகக் கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரமடைந்த மோகன் மற்றும் அவரது 3 மகன்கள் சோ்ந்து இரும்பு ஆயுதங்களால் அன்பரசு மற்றும் அவரது மனைவியை தாக்கியதாகக் கூறப்படுகிறது. படுகாயமடைந்த இருவரும் கோபி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

இதுகுறித்து கோபி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து நான்கு பேரையும் கைது செய்தனா்.