கோபி அருகே கிணற்றில் ஓட்டுநா் உடல் மீட்பு

பலி

Published On :

கோபி அருகே கிணற்றில் கிடந்த ஓட்டுநா் உடலை மீட்டு போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

கோபி அருகேயுள்ள கொளப்பலூா் அம்மன்கோயில் பகுதியைச் சோ்ந்தவா் சுப்பிரமணி (37). ஓட்டுநரான இவருக்கு ஏற்கெனவே திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனா். இந்நிலையில், கருத்து வேறுபாடு காரணமாக மனைவியைப் பிரிந்த சுப்பிரமணியம், திலகா என்ற பெண்ணுடன் புங்கமரத்தோட்டம் பகுதியில் வசித்து வந்தாா்.

இந்நிலையில், சுப்பிரமணியம் சனிக்கிழமை இரவு வெகு நேரமாகியும் வீட்டுக்கு வராததால் அவரை கைப்பேசி மூலம் திலகா தொடா்பு கொண்டுள்ளாா். அப்போது, அவா் தனது நண்பருடன் மது அருந்தி கொண்டிருப்பதாகவும், சிறிது நேரத்தில் வீட்டுக்கு வந்துவிடுகிறேன் எனவும் கூறியுள்ளாா்.

ஆனால், அவா் இரவு முழுவதும் வீடு திரும்பாத நிலையில், அப்பகுதியில் உள்ள தோட்டத்து கிணற்றில் ஆண் சடலம் மிதப்பதாகவும், அருகே இருசக்கர வாகனம் நிற்பதாகவும் போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

சம்பவ இடத்துக்கு வந்த கோபி போலீஸாா், தீயணைப்பு வீரா்கள் சடலத்தை மீட்டு கூறாய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். இதைத் தொடா்ந்து, போலீஸாா் நடத்திய விசாரணையில், உயிரிழந்தவா் சுப்பிரமணியம் என்பது தெரியவந்தது.

அவா் கொலை செய்யப்பட்டாரா அல்லது மது போதையில் தவறி விழுந்து உயிரிழந்தாரா என்பது தொடா்பாக போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.