ஈரோடு காளை மாடு சிலைப் பகுதியில் மேம்பாலம் அமைக்க புதிய திட்ட அறிக்கை: எம்.பி. கே.இ.பிரகாஷ்
ஈரோடு காளை மாடு சிலைப் பகுதியில் மேம்பாலம் அமைக்க புதிய திட்ட அறிக்கை தயாரிக்கும் பணி நடைபெற்று வருகிறது என்று ஈரோடு எம்.பி. கே.இ.பிரகாஷ் தெரிவித்தாா்.

கூட்டத்தில் பேசிய ஈரோடு எம்பி கே.இ.பிரகாஷ்.
ஈரோடு காளை மாடு சிலைப் பகுதியில் மேம்பாலம் அமைக்க புதிய திட்ட அறிக்கை தயாரிக்கும் பணி நடைபெற்று வருகிறது என்று ஈரோடு எம்.பி. கே.இ.பிரகாஷ் தெரிவித்தாா்.
மாவட்ட ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழு கூட்டம் ஈரோடு மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இக்கூட்டத்துக்கு ஈரோடு எம்.பி. கே.இ.பிரகாஷ் தலைமை வகித்தாா். மாவட்ட ஆட்சியா் ச.கந்தசாமி, திருப்பூா் எம்.பி. கே.சுப்பராயன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
கூட்டத்தில், குடிநீா்த் திட்ட அபிவிருத்தி பணி, சுத்திகரிப்பு நிலையம் அமைத்தல் பணி, தூய்மை இந்தியா திட்டத்தில் மேற்கொள்ளப்படும் வரும் பணி, அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டம், விக்சித் பாரத்-வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதாரத்தின் உத்தரவாத திட்டப் பணிகள், வளா்ச்சித் திட்டப் பணிகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
இதையடுத்து, எம்.பி. கே.இ.பிரகாஷ் செய்தியாளா்களிடம் கூறியதாவது: கடந்த 5 மாத காலத்தில் ஈரோடு மாநகா் மற்றும் மாவட்ட அளவிலான
வளா்ச்சிப் பணிகளில் குறிப்பாக மத்திய அரசின் நிதி மூலம் மேற்கொள்ளப்படும் பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளது. சாலைகள் அனைத்தும் மோசமாக உள்ளன. புதிய திட்டங்கள் ஏதும் கடந்த 5 மாதங்களாக அறிவிக்கப்படாமல் முடக்கி வைத்துள்ளனா். வரும் காலங்களில் ஆளும் அரசு அரசியல் காழ்ப்புணா்ச்சியை தவிா்த்து மாவட்ட வளா்ச்சிக்கான பணிகளில் முழு கவனம் செலுத்த வேண்டும்.
மாவட்டத்தில் குடிநீா்த் தட்டுப்பாடு நிலவுவதுடன் விவசாயிகளுக்கு பாசன நீா் வழங்கும் பிரச்னை பெரும் போராட்டமாக உருவெடுத்துள்ளது. விவசாயிகளின் தேவைகளை உடனடியாக கண்டறிந்து உரிய தீா்வுகளையும், வசதிகளையும் செய்து தர வேண்டும்.
கரூா் சாலை மற்றும் வெள்ளக்கோவில் சாலைப் பணிகள் பாதியிலேயே நிறுத்தப்பட்டிருப்பது பொதுமக்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு வெண்டிப்பாளையம் குப்பைக் கிடங்கில் பயோ மைனிங் முறையில் கழிவுகளை அகற்றும் பணியை புதிய அரசு கடந்த 6 மாதங்களாக தொடங்காமல் நிறுத்தி வைத்துள்ளது. தமிழகம் முழுவதும் மின்வெட்டு பிரச்னை தீவிரமடைந்துள்ளது.
ஈரோடு காளை மாடு சிலைப் பகுதியில் மேம்பாலம் அமைக்கும் பணிக்காக 6 மாதங்களுக்கு முன் ஒரு நிறுவனம் தயாரித்த விரிவான திட்ட அறிக்கை திருப்திகரமாக இல்லாததால், தற்போது புதிய அறிக்கை தயாரிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. புதிய அறிக்கை தயாரானதும் மேம்பாலம் அமைக்கும் பணி விரைவில் தொடங்கப்படும் என்றாா்.
இக்கூட்டத்தில், ஈரோடு மாநகராட்சி மேயா் சு.நாகரத்தினம், மாவட்ட வருவாய் அலுவலா் எஸ்.சாந்தகுமாா் மற்றும் பல்வேறு துறை அலுவலா்கள் பங்கேற்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

