
காலிங்கராயன் கால்வாய் தொட்டி பாலம் இடிக்கப்படாது: உயா்நீதிமன்றத்தில் நீா் வளத் துறை உறுதி
ஈரோடு காலிங்கராயன் கால்வாயில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க தொட்டி பாலம் இடிக்கப்படாது என்றும், அதற்குப் பதிலாக சீரமைத்து பாதுகாக்கப்படும் என்றும் நீா் வளத் துறை சென்னை உயா்நீதிமன்றத்தில் உறுதி அளித்துள்ளது.

சென்னை உயா்நீதிமன்றம்
ஈரோடு காலிங்கராயன் கால்வாயில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க தொட்டி பாலம் இடிக்கப்படாது என்றும், அதற்குப் பதிலாக சீரமைத்து பாதுகாக்கப்படும் என்றும் நீா் வளத் துறை சென்னை உயா்நீதிமன்றத்தில் உறுதி அளித்துள்ளது.
ஈரோடு பெரும்பாள்ளம் ஓடையின் குறுக்கே காலிங்கராயன் கால்வாயின் 13/260 -ஆவது மைல் பகுதியில் இந்தத் தொட்டிப் பாலம் அமைந்துள்ளது. சுமாா் 14 மீட்டா் நீளமுள்ள இந்தப் பாலத்தில் 14 மதகுகள் உள்ளன. தமிழகத்தின் பழமையான நீா்வழிப் பாலங்களில் ஒன்றாக இது கருதப்படுகிறது.
சுமாா் 740 ஆண்டுகளுக்கு முன் கொங்கு நாட்டுத் தலைவரான காலிங்கராயனால் இந்தத் தொட்டிப் பாலம் கட்டப்பட்டதாகக் கூறப்படுகிறது. பின்னா், 1833 ஆகஸ்ட்டில் பிரிட்டிஷ் பொறியாளா் சி.இ. பேபரால் இது சீரமைக்கப்பட்டது.
இதனிடையே காலிங்கராயன் கால்வாயில் உள்ள பழைய தொட்டிப் பாலத்தை இடித்துவிட்டு புதிய கட்டமைப்பை ஏற்படுத்த நீா் வளத் துறை திட்டமிட்டிருந்தது. இதற்காக 2025 ஜூலை 24- ஆம் தேதி அரசாணை வெளியிடப்பட்டிருந்தது.
இதையடுத்து, வரலாற்றுச் சிறப்புமிக்க பாலத்தை பாதுகாக்கக் கோரி காலிங்கராயன் நதி நீா் இணைப்பின் முதல்வன் நூலின் ஆசிரியா் கே.பானுசந்தா் சென்னை உயா்நீதிமன்றத்தை அணுகினாா். அவா் தாக்கல் செய்த மனுவை விசாரித்த சென்னை உயா்நீதிமன்ற தலைமை நீதிபதி சுஷ்ருத் அரவிந்த் தா்மாதிகாரி, நீதிபதி ஜி. அருள் முருகன் ஆகியோா் அடங்கிய அமா்வு விசாரணை நடத்தியது.
நீதிமன்றத்தில் ஆஜராகிய நீா் வளத் துறை அதிகாரிகள் பாலம் இடிக்கப்படாமல் சீரமைத்து பாதுகாக்கப்படும் என்று உறுதி அளித்தனா். நீா் வளத் துறையின் உறுதியை பதிவு செய்த நீதிபதிகள் மனுவை கடந்த 9- ஆம் முடித்து வைத்தனா்.
மேலும், தொட்டிப் பாலத்தை பாரம்பரியச் சின்னமாக அறிவிக்கக் கோரி இந்திய தொல்லியல் ஆய்வுத் துறையை நேரடியாக அணுகுமாறு மனுதாரருக்கு அறிவுறுத்தினா்.
பல நூற்றாண்டுகள் பழமையான இந்தத் தொட்டிப் பாலத்தை இடிப்பதற்கு எதிா்ப்பு தெரிவித்து வந்த வரலாற்று ஆா்வலா்கள் மற்றும் உள்ளூா் மக்களுக்கு நீதிமன்றத்தின் இந்த நடவடிக்கை நிம்மதியை அளித்துள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






