முதல்வர் சொன்ன குட்டிக் கதைகள்

மஞ்சூர் அருகே எடக்காட்டில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற குந்தா தொழிற் கூட்டுறவுத் தேயிலை ஆலையின் பொன் விழாவில் முதல்வர் ஜெயலலிதா குட்டிக் கதைகள் கூறி அசத்தினார்.
Updated on
2 min read

மஞ்சூர் அருகே எடக்காட்டில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற குந்தா தொழிற் கூட்டுறவுத் தேயிலை ஆலையின் பொன் விழாவில் முதல்வர் ஜெயலலிதா குட்டிக் கதைகள் கூறி அசத்தினார். அவர் கூறிய கதைகள்:

வழக்கத்துக்கு மாறாக

சிந்திக்க வேண்டும்

காலணிகள் தயாரிக்கும் ஒரு நிறுவனம் விற்பனை மையத்தை அமைக்க ஒரு பகுதியைத் தேர்ந்தெடுக்கக் கருதியது. அப்போது அந்நிறுவனத்தின் இயக்குநர் குழுமத்தில் உள்ள பெரும்பாலானோர் "இந்தப் பகுதியில் வசிக்கும் மக்கள் காலணிகளே அணிவதில்லை. எனவே, இங்கு காலணிகளுக்கான விற்பனை மையத்தை அமைப்பது பயனற்றது' என்றனர்.

ஆனால், ஒருவர் மட்டும் "காலணிகளை பயன்படுத்தாத மக்கள் வசிக்கும் இடத்தில் விற்பனை மையத்தைத் துவங்குவது வியாபாரத்தை பெருகச் செய்யும்' என்றார். அதைத் தொடர்ந்து அந்தப் பகுதியில் விற்பனை மையம் அமைக்கப்பட்டு, அந்நிறுவனத்தின் வியாபாரம் அதிகரித்தது. இதுபோன்ற அசாதாரணச் சிந்தனைகளைக் கடைபிடித்தால் மேன்மையடைய முடியும்.

புது யுக்தியுடன் தன்னம்பிக்கையும் சேர்ந்தால் வெற்றி நிச்சயம்

ஒரு ஊரில் தனியாருக்குச் சொந்தமான வழிபாட்டுத் தலத்தில் மணி அடிக்கும் பணியை ஒருவர் செய்து கொண்டிருந்தார். அந்த வழிபாட்டுத் தலத்தை நிர்வகிப்பவர்களின் கூட்டம் ஒரு நாள் நடைபெற்றது. அதில் வழிபாட்டுத் தலத்தில் பணிபுரிபவர்கள் அனைவரும் எழுத, படிக்கத் தெரிந்தவர்களாக இருக்க வேண்டும் என்று முடிவெடுக்கப்பட்டது.

படிக்காதவர்கள் இருந்தால் ஒரு குறிப்பிட்ட காலத்துக்குள் அவர்கள் எழுத, படிக்க தெரிந்து கொள்ள வேண்டுமெனவும் முடிவெடுக்கப்பட்டது. இதையடுத்து மணி அடிக்கும் பணியை மேற்கொண்டிருந்தவர் உள்பட படிக்காதவர்கள் அனைவரையும் 6 மாத காலத்துக்குள் எழுத, படிக்க தெரிந்து கொள்ள வேண்டுமென நிர்வாகம் அறிவுறுத்தியது. ஆனால் மணி அடிக்கும் பணியை மேற்கொண்டிருந்தவரால் எழுத, படிக்க கற்றுக்கொள்ள இயலவில்லை. இதனால் நிர்வாகம் அந்த பணியாளரை வேலையை விட்டு நீக்கியது.

அந்தக் கவலையுடன்  வீட்டுக்குப் புறப்பட்ட அவர், தலைவலி காரணமாக தேநீர் அருந்த நினைத்தார். வழியில் தேநீர் விற்கும் கடை எதுவும் இல்லை. உடனே அவரது சிந்தனையில், இந்த இடத்தில் சைக்கிளில் தேநீர் விற்கும் நடமாடும் கடை ஒன்றை தொடங்க வேண்டுமென தோன்றியது. மறுநாளே அதைச் செய்தார். அதைத் தொடர்ந்து தின்பண்டங்கள் விற்கும் கடையையும் அதே பகுதியில் தொடங்கினார். வியாபாரம் மூலமாக சம்பாதித்த பணத்தை சேமிக்கும் வகையில் வங்கிக் கணக்கைத் தொடங்கினார். அந்த நபரின் வங்கிக் கணக்கில் அதிக பணம் இருப்பதை அறிந்த வங்கி மேலாளர், அவரை அழைத்து சேமிப்புக் கணக்கில் உள்ள பணத்தை நிரந்தர வைப்புத் தொகையில் செலுத்தினால் அதிக அளவு வட்டி கிடைக்கும் என்றார்.

இதற்குச் சம்மதித்த அந்த நபரிடம் அதற்கான படிவத்தில் கையெழுத்திடுமாறு வங்கி மேலாளர் கூறினார். அப்போது அவர், தான் கைநாட்டு எனவும், தனக்கு கையெழுத்து போடத் தெரியாது எனவும் கூறியுள்ளார்.

அதற்கு வங்கி மேலாளரோ, "படிக்காமலேயே இவ்வளவு பணம் சம்பாதித்துள்ளாயே, படித்திருந்தால் நீ என்ன வேலை செய்திருப்பாய்?' என்று கேட்டபோது, படித்திருந்தால் வழிபாட்டு மையத்தில் மணி அடித்துக் கொண்டிருப்பேன் என பதில் அளித்தாராம்.

எனவே வாழ்க்கையில் முன்னேற படிப்பு மட்டும் இருந்தால் போதாது; உழைப்பும், தன்னம்பிக்கையும், கிடைக்கும் வாய்ப்புகளை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ளும் அறிவும், திறமையும் தேவை.

உழைப்பால் மட்டுமே

உயர முடியும்

ஓர் ஊரில் மிகப் பெரிய பணக்காரர் ஒருவர் வசித்து வந்தார். நாட்டிலேயே தான் ஒருவர் மட்டுமே சுகபோகத்தை அனுபவிப்பதாக அவருக்கு நினைப்பு. ஒருநாள் அந்த பணக்காரரைத் தேடி துறவி ஒருவர் வந்தார். அந்தத் துறவியை அவர் வணங்கி உபசரித்தார். பின்னர் அந்த துறவியைப் பார்த்து, "உலகம் முழுதும் சுற்றிய அனுபவம் உங்களுக்கு உள்ளது. என்னைவிட சுகத்தை அனுபவிக்கிறவர்களை பார்த்திருக்கிறீர்களா?' என்று கேட்டாராம்.

அதற்கு புன்னகைத்த துறவி, உன்னைவிட சுகமாக வாழ்கின்றவரை வேறு எங்கு தேட வேண்டும். அவர் உங்கள் நாட்டிலேயே இருக்கிறார் என பதிலளித்தார். தவிர,   அந்தப் பணக்காரரை, துறவி ஒரு வயல்வெளிக்கு அழைத்துச் சென்றார். அங்கு வெயில் குறித்த கவலையே இல்லாமல் வியர்வைக்கு அஞ்சாமல் 60 வயது மதிக்கத்தக்க பெரியவர் இளைஞரைப் போல உழவுப் பணியை மேற்கொண்டிருந்தார்.

அவரைச் சுட்டிக்காட்டி, "உன்னைவிட சுகம் அனுபவிக்கும் சுகயோகி இவர் தான்' என துறவி கூறியதற்கு, கேலி வேண்டாம் என்று பணக்காரர் பதிலளித்தாராம்.

அப்போது துறவி "செல்வந்தரே, இந்தத் தள்ளாத வயதிலும் அவரது உழைப்பைப் பாருங்கள். வெயிலுக்கு அஞ்சாமல் உழைத்துக் கொண்டிருக்கிறார். இந்த உழைப்புக்குப் பின் அவருக்கு நன்றாகப் பசிக்கும். கூழோ, கஞ்சியோ எதுவானாலும் அவருக்கு அமிர்தம் தான். மீண்டும் பகல் முழுவதும் உழைப்பார். அந்த உழைப்பின் களைப்பில் இரவில் நிம்மதியாக உறங்குவார். சுகபோகம் என்பது வெயிலையும், பனியையும், புயலையும், மழையையும் ஆனந்தமாய் எதிர்கொள்ளக் கூடியதாகும். அதை எதிர்கொள்ள அவர் எப்போதும் தயார். உழைப்புக்கு பின்வரும் உறக்கம் தான் சொர்க்கம். உழைக்காமல் எதுவும் சுகபோகமாகாது' என்று தெரிவித்தாராம். அப்போது அந்தப் பணக்காரர் துறவியை வணங்கி, தன்னை மன்னிக்குமாறும், தானும் உழைக்க தயாராகிவிட்டதாகவும் தெரிவித்தார். இவ்வாறு தனது பேச்சில் குட்டிக் கதைகளை முதல்வர் ஜெயலலிதா கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com