உதகையில் அரசினர் தாவரவியல் பூங்காவில் மே மாதம் நடைபெறவுள்ள மலர்க்காட்சிக்காகவும், ரோஜா பூங்காவில் நடைபெறவுள்ள ரோஜா கண்காட்சிக்காகவும் போட்டியாளர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா தெரிவித்துள்ளதாவது:
உதகை அரசினர் தாவரவியல் பூங்காவில் 122ஆவது மலர்க் காட்சி வரும் மே 18ஆம் தேதி முதல் 20ஆம் தேதி வரை 3 நாள்களுக்கு நடைபெறவுள்ளது. இம்மலர்க் காட்சியினை முன்னிட்டு மாவட்டத்திலுள்ள சிறந்த பூங்காக்களுக்குப் பரிசுகள் வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதற்காக மாவட்டத்திலுள்ள பல்வேறு பூங்காக்களின் உரிமையாளர்கள் போட்டியில் பங்கேற்பதற்கான விண்ணப்பப் படிவங்கள் உதகையிலுள்ள அரசினர் தாவரவியல் பூங்காவின் தோட்டக்கலை உதவி இயக்குநர் அலுவலகத்திலும், குன்னூரில் சிம்ஸ் பூங்காவிலுள்ள தோட்டக்கலை உதவி இயக்குநர் அலுவலகத்திலும், கூடலூர் மற்றும் கோத்தகிரி பகுதிகளிலுள்ள தோட்டக்கலை உதவி இயக்குநர் அலுவலகங்களிலும் இம்மாதம் 25ஆம் தேதி வரை வழங்கப்படும்.
பூர்த்தி செய்த விண்ணப்பங்களை அரசினர் தாவரவியல் பூங்காவிலுள்ள தோட்டக்கலை உதவி இயக்குநர் அலுவலகத்தில் உரிய கட்டணத்துடன் செலுத்தப்பட வேண்டும். சிறந்த பூங்காக்களைத் தேர்வு செய்யும் குழுவினர் மே 2ஆம் தேதி முதல் 7ஆம் தேதி வரை உதகை, குன்னூர், கோத்தகிரி, கூடலூர் பகுதிகளைப் பார்வையிட உள்ளனர். இதுதொடர்பான கூடுதல் விவரங்களுக்கு உதகையிலுள்ள தோட்டக்கலை உதவி இயக்குநர் அலுவலகத்தை நேரிலோ அல்லது 0423-2442545 என்ற தொலைபேசி எண்ணிலோ தொடர்புகொள்ளலாம்.
ரோஜா கண்காட்சி...: உதகை அரசினர் ரோஜா பூங்காவில் 16ஆவது ரோஜா கண்காட்சி மே 12, 13 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது. இக்கண்காட்சியையொட்டி, தனியார் ரோஜா தோட்டங்களை அமைத்துப் பராமரிப்பவர்களுக்காக 6 பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்படவுள்ளன. இதில், ஒவ்வொரு பிரிவிற்கும் தலா ரூ.100 கட்டணம் செலுத்தி போட்டிகளில் பங்கேற்கலாம். இதற்கான கடைசி நாள் ஏப்ரல் 23ஆம் தேதியாகும்.
ரோஜா கண்காட்சி நடைபெறும் நாள்களில் ரோஜா வளர்ப்போருக்கான போட்டிகள் நடத்தப்படவுள்ளன. பூந்தொட்டிகளில் வளர்க்கப்பட்ட ஹைபிரிட் டீ ரோஜா, புளோரிபண்டா ரோஜா, மினியேச்சர் ரோஜா மற்றும் ஸ்டாண்டர்டு ரோஜாக்களுக்கான போட்டிகளும், ரோஜா வகைகளிலான போட்டிகளின் கீழ் ஹைபிரிட், புளோரிபண்டா, கொடி ரோஜாக்களுக்கான போட்டிகளும், கொய்மலர் ரோஜாக்களுக்கான போட்டிகளும், தனியார் மற்றும் அரசுத் துறைகளில் ரோஜா வளர்ப்போருக்கான போட்டிகளும், பசுமைக் குடில்களில் வளர்க்கப்பட்ட ஹைபிரிட் இனத்தை சேர்ந்த ரோஜாக்களுக்கான போட்டிகளும், பெரிய குடுவைகளில் ரோஜா அலங்கரிப்பு, ரோஜா ரங்கோலி, ரோஜா மாலை மற்றும் ரோஜா இதழ்களிலிருந்து தயாரிக்கப்பட்ட பொருள்களுக்கான போட்டிகளும் நடத்தப்பட்டு வெற்றி பெறுபவர்களுக்கு பரிசுகள் வழங்கப்படும். இதற்கான பதிவுக் கட்டணம் ரூ.100 ஆகும். பதிவு செய்வதற்கான கடைசி நாள் மே மாதம் 10 ஆம் தேதியாகும்.
இப்போட்டிகளில் பங்கேற்பவர்கள் உதகை அரசினர் ரோஜா பூங்காவில் உள்ள தோட்டக்கலை உதவி இயக்குநர் அலுவலகத்தில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை பதிவு செய்து கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எனவே, ஆர்வமுள்ள ரோஜா வளர்ப்போர் அரசினர் ரோஜா பூங்காவின் தோட்டக்கலை அலுவலரை 0423-2444070 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு விவரங்களை பெற்றுக் கொள்ளலாம் எனவும் என ஆட்சியர் தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையே, மலர்க்காட்சி, ரோஜா கண்காட்சிகளையொட்டி உதகையிலுள்ள அரசினர் தாவரவியல் பூங்கா மற்றும் ரோஜா பூங்காக்களில் பல்வேறு வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அனைத்து மலர் பாத்திகளிலும் மலர்ச் செடிகள் நடவு செய்யப்பட்டு வருகின்றன. மலர்ச் செடிகளிலிருந்து ஏப்ரல் மாதக் கடைசி வாரத்திலிருந்து மலர்கள் மலரும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது.
அரசினர் தாவரவியல் பூங்காவிலுள்ள பழுதடைந்திருந்த கண்ணாடி மாளிகையை பழமை மாறாமல் புதுப்பிக்கும் பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன. இந்த கண்ணாடி மாளிகை உதகை மலர்க் காட்சிக்கு முன்னதாக சுற்றுலாப் பயணிகள் பார்வையிடுவதற்கு வசதியாகத் திறக்கப்படுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உதகைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் சனிக்கிழமையன்று அரசினர் தாவரவியல் பூங்காவுக்கு சுமார் 14,000 பேரும், ஞாயிற்றுக்கிழமை சுமார் 16,000 பேரும் வருகை தந்ததாக பூங்கா நிர்வாகத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
தாயாகும் ஜன நாயகன் பட நடிகை!

ரெனால்ட் இந்தியா ஏப்ரல் மாத விற்பனை இரட்டிப்பு!

ஆர்பிஐ துணை ஆளுநராக ரோகித் ஜெயின் நியமனம்
டி20 உலகக் கோப்பைத் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு!
வீடியோக்கள்

#ipl2026 | CSK vs MI: யாருக்கு வெற்றி வாய்ப்பு? | Chennai Super Kings | Mumbai Indians |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | "உலகக் கோப்பை ஜெயிக்க உங்களுக்கு கிளாசென் வேண்டும்" |
தினமணி செய்திச் சேவை

Dinamani வார ராசிபலன்! | May 3 முதல் 9 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

