உதகை கோடை சீசனையொட்டி, அரசினர் தாவரவியல் பூங்கா எதிரிலிருந்த நடைபாதைக் கடைகள் அனைத்தும் அகற்றப்பட்டுள்ளன. இதை எதிர்த்து நடைபாதைக் கடை வியாபாரிகள் இரவிலும் உதகை நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
உதகையில் கோடை சீசன் தொடங்கி களை கட்டியுள்ள சூழலில் உதகைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இந்நிலையில் பூங்காவுக்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு இடையூறு ஏற்படாமல் இருக்கவும், பூங்கா சாலையில் மே 1-ஆம் தேதி முதல் 31-ஆம் தேதி வரை "நைட் பஜார்' நிகழ்ச்சி நடைபெற உள்ளதாலும், இங்குள்ள நடைபாதைக் கடைகளை அகற்றுமாறு உதகை நகராட்சி நிர்வாகத்துக்கு மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டது.
இதையடுத்து அங்கு வந்த நகர்மன்ற அதிகாரிகள் நடைபாதைக் கடைகளை அப்புறப்படுத்தினர். ஆனால், சீசன் கால வருவாயை மட்டுமே நம்பி ஓராண்டுக்கு வாழ வேண்டுமென்பதால் தங்களுக்கு அதே பகுதியில் ஒதுக்குப்புறமான இடத்தைத் தருவதற்குப் பதிலாக, தற்போதுள்ள இடத்தையே ஒதுக்க வேண்டும் என்று வியாபாரிகள் கோரிக்கை விடுத்தனர்.
அதற்கு மறுப்புத் தெரிவித்த அதிகாரிகள் அங்குள்ள வாகன நிறுத்துமிடத்தைச் சுற்றிலும் கடைகளை அமைத்துக்கொள்ள அனுமதி வழங்கினர்.
ஆனால் இதற்கு வாகன நிறுத்துமிடத்தை குத்தகைக்கு எடுத்துள்ளவர் ஒப்புக் கொள்ளாததால், அங்கும் அவர்களுக்கு இடம் மறுக்கப்பட்டது.
இதையடுத்து இப் பிரச்னையில் உரிய தீர்வு காண வலியுறுத்தி, நடைபாதை வியாபாரிகள் சங்கத்தினர் உதகை நகர்மன்ற அலுவலகத்தை முற்றுகையிட்டனர். அவர்களிடம் நகராட்சி ஆணையர் ரவி பேச்சு நடத்தினார். வியாபாரிகளின் கோரிக்கையை ஏற்று நடவடிக்கை எடுப்பதாக அவர் அளித்த உறுதிமொழியை ஏற்று, நடைபாதை வியாபாரிகள் போராட்டத்தைக் கைவிட்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.