
உதகையில் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத் துறை சார்பில் சிறுபான்மையினர்
உரிமைகள் தின விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
உதகையிலுள்ள நீலகிரி மாவட்ட கூடுதல் ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு, மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா தலைமையேற்று பேசியதாவது:
ஐ.நா. சபையில் உறுப்பினர்களாக உள்ள நாடுகள் அனைத்தும் டிசம்பர் 18 ஆம் தேதியை சிறுபான்மையினர் உரிமைகள் தின விழாவாக கொண்டாடி வருகின்றன. தேசிய சிறுபான்மையினர்ஆணையத்தின் வழிகாட்டுதலின்படி நமது நாட்டிலும் இந்த விழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. சச்சார் குழு பரிந்துரையின் அடிப்படையில், தமிழகத்தில் சிறுபான்மையினர் நலனுக்கென சென்னையில் தனி இயக்குநர் அலுவலகமும், அதனுடைய மாவட்ட அலுவலகமாக நீலகிரி மாவட்டத்தில் உதகையிலும் செயல்பட்டு வருகிறது.
மதவழி சிறுபான்மையினர் என அங்கீகரிக்கப்பட்ட கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்கள், சீக்கியர், புத்த மதத்தினர், பார்ஸி மற்றும் ஜைன மதத்தினருக்கு பல்வேறு வகையான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. சிறுபான்மையினர் இனத்தைச் சேர்ந்த பள்ளி, கல்லூரி மற்றும் ஆராய்ச்சிப் படிப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கு பல்வேறு வகையான கல்வி உதவித் தொகை வழங்கும் திட்டம் நீலகிரியில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. 2017-18 ஆம் கல்வியாண்டில் மொத்தம் 12,636 சிறுபான்மையின மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை அவர்களது வங்கிக் கணக்கில் நேரடியாக மத்திய அரசால் வழங்கப்பட்டுள்ளது. நடப்பு கல்வியாண்டில் மேலும் 13,625 மாணவ, மாணவியருக்கு கல்வி உதவித் தொகை வழங்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
உலமா மற்றும் இதர பணியாளர்களுக்கு நல வாரியம் செயல்பட்டு வருகிறது. இவ்வாரியத்தில் மாவட்டத்தில் 440 உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டு நல வாரிய அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. 31உறுப்பினர்களுக்கு ரூ.78,000 மதிப்பிலான பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன. மேலும் ஆதரவற்ற விதவைகள், கணவரை இழந்த மற்றும் வறுமையில் வாடும் முஸ்லிம் மகளிருக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. இதுவரையில் 95 ஏழை எளிய முஸ்லிம் மகளிருக்கு ரூ.5.79 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன.
தமிழகத்திலிருந்து ஜெருசலேம் புனிதப் பயணம் மேற்கொள்ள நபர் ஒருவருக்கு ரூ.20,000 வீதம் ஆண்டுதோறும் 500 பேருக்கு பண உதவி அளிக்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. பின்தங்கிய மற்றும் சிறுபான்மையின மக்கள் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த டாம்கோ நிறுவனம் மூலம் தனிநபர் கடன், குழுக்கடன், கல்விக்கடன் ஆகியவை வழங்கப்பட்டு வருகின்றன. இதற்கான விண்ணப்பத்தினை தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கம், மாவட்ட கூட்டுறவு இணைப்பதிவாளர் அலுவலகம், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலகங்களில் பெற்று விண்ணப்பிக்கலாம். இதுவரையில் 479 பேருக்கு ரூ.204 லட்சம் மதிப்பில் கடனுதவிகள் வழங்கப்பட்டுள்ளன. கிறிஸ்தவ தேவாலயங்களை புனரமைக்கவும், பழுது பார்க்கவும் நிதி வழங்கும் திட்டமும் செயல்படுத்தப்பட்டு வருகிறது என்றார்.
தொடர்ந்து பயனாளிக்கு ரூ.3,575 வீதம் 30 பயனாளிகளுக்கு ரூ.1.08 லட்சம் மதிப்பில் தையல் இயந்திரங்களும், 14 உலமாக்களுக்கு புதுப்பித்த அடையாள அட்டைகள் என மொத்தம் 44 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை ஆட்சியர் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் உதகை வருவாய் கோட்டாட்சியர் சுரேஷ், சமூக பாதுகாப்புத் திட்ட தனித் துணை ஆட்சியர் முருகன், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மை நலத் துறை அலுவலர் குழந்தைவேல், உதகை வட்டாட்சியர் தினேஷ்குமார் மற்றும் அரசுத் துறை அலுவலர்கள், சிறுபான்மையினர் நல வாரிய உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





