நீலகிரி மாவட்டத்தில் உள்ள அணைகளில் பருவ மழை நீரை வீணாகாமல் சேமித்தால் தடையின்றி மின் உற்பத்தி நடைபெற வாய்ப்புள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் குந்தா, பைக்காரா நீர்மின் திட்டத்தின் கீழ் 12 மின் நிலையங்கள் உள்ளன. இங்குள்ள 13 அணைகள் மற்றும் 50-க்கும் மேற்பட்ட தடுப்பணைகளில் சேமிக்கப்படும் தண்ணீர் மூலம் மின்னுற்பத்தி மேற்கொள்ளப்படுகிறது.
தினசரி 833.65 மெகா வாட் மின் உற்பத்தி மேற்கொள்ளும் திறன் மின் நிலையங்களுக்கு உள்ளது. கடந்த ஆண்டின் பருவமழையின் போது 65 சதவீதம் அளவுக்கு தண்ணீர் அணைகளில் சேமிக்கப்பட்டது. தொடர்ந்து மின் உற்பத்திக்கு தண்ணீர் பயன்படுத்தப்பட்டதால் தற்போது பெரும்பாலான அணைகளில் 50 சதவீதம் அளவுக்கு தண்ணீர் இருப்பு உள்ளது.
மே மாதம் வரை வறட்சியான காலநிலை இருக்கும் என்பதால், தண்ணீர் அளவு மேலும் குறைய வாய்ப்புள்ளது. கோடையின் தாக்கம் தற்போது அதிகரித்துள்ளதால், மின் உற்பத்திக்கு முக்கிய அணையாகக் கருதப்படும் அப்பர் பவானி, அவலாஞ்சி, எமரால்டு அணைகளில் தண்ணீர் அளவு குறைந்துள்ளது.
உலக வங்கி நிதியுதவியுடன் மாவட்டத்தில் உள்ள அணைகள் படிப்படியாகப் புனரமைக்கப்பட்டு வருகின்றன. அணையைச் சுற்றியிருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு, தண்ணீர் அளவு உயரும் அளவுக்கு கட்டடங்கள் உயர்த்திக் கட்டப்பட்டுள்ளன. நடப்பு ஆண்டில் கோடை மழை, தென்மேற்கு பருவ மழை, வடகிழக்கு பருவ மழை எதிர்பார்த்த அளவு பெய்யும் என மின் வாரியம் நம்பி வருகிறது. மழையின் போது அணைகள், தடுப்பணைகளில் தண்ணீரை வீணாக்காமல் முழுவதும் சேமிக்க குந்தா மின் வாரியம் திட்டமிட்டுள்ளது.
நீலகிரியின் மின் உற்பத்தியில் பருவமழை முக்கிய பங்கு வகிக்சிறது. இங்குள்ள அணைகளில் சுவரை உயர்த்திக் கட்டும் பணிகள் நடந்து முடிந்தாலும், தூர்வாரும் பணியை இன்னும் மேற்கொள்ளவில்லை.
இதனிடையே மின்வாரியத் தலைமையிலிருந்து மின் உற்பத்தி நிலையங்களுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. அதில், "நடப்பாண்டு பருவ மழையை கருத்தில் கொண்டு தடையின்றி மின்னுற்பத்தி மேற்கொள்ளும் வகையில் தண்ணீரை சேமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்' என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து குந்தா மேற்பார்வை செயற்பொறியாளர் ரகு கூறுகையில். "கோடைக்காலத்தில் எந்தப் பிரச்னையும் வராதபடி, மின்வாரியத் தலைமையின் உத்தரவுப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பருவமழைக்கு முன்னதாக அணைகளை தயார் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.