அரசுப் பேருந்துகளில் சத்தமாக ரீல்ஸ் பார்க்கக் கூடாது! முக்கிய அறிவிப்புதமிழகத்தில் இன்றும், நாளையும் மழைக்கு வாய்ப்புவிவசாயக் கடன் தள்ளுபடி திட்டம் இல்லை: நிதித் துறை அமைச்சர்ஒரே நாளில் 2,036 காவலா்கள் பணியிட மாற்றம்பொட்டாஷ் உரம் தட்டுப்பாடு: விவசாயிகள் வேதனை
/

தமிழகத்தில் பிளாஸ்டிக் பொருள்களுக்குத் தடை: பிள்ளையார் சுழி போட்ட நீலகிரி மாவட்டம்

தமிழகத்தில் அடுத்த ஆண்டு ஜனவரி முதல் தேதியில் இருந்து பிளாஸ்டிக் பொருள்களுக்குத் தடை விதித்து தமிழக முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

Updated On :30 ஜனவரி 2024, 6:44 pm IST

தமிழகத்தில் அடுத்த ஆண்டு ஜனவரி முதல் தேதியில் இருந்து பிளாஸ்டிக் பொருள்களுக்குத் தடை விதித்து தமிழக முதல்வர் உத்தரவிட்டுள்ளார். இதற்கு  நீலகிரி மாவட்டமே பிள்ளையார் சுழி போட்ட மாவட்டம் எனக்கூறலாம்.
 நீலகிரி மாவட்டத்தில் கடந்த 2000ஆவது ஆண்டுக்கு முன்பு மாவட்ட ஆட்சியராக இருந்த சிவசங்கரன் ஒரு நிகழ்ச்சியில் பேசுகையில்,  "நீலகிரி மாவட்டத்தில் பிளாஸ்டிக் பொருள்களின் பயன்பாடு தொடர்ந்து அதிகரித்து வருவதால் சுற்றுச்சூழலுக்கு தீங்கு ஏற்படுகிறது. இத்தகைய பிளாஸ்டிக் பொருள்களை தடை செய்ய வேண்டும். பிளாஸ்டிக் பைகளுக்குள் நமக்கான பொருள்களை வைப்பதற்கு முன்பாக  அந்தப் பையைத் திறக்க ஊதப்படும் காற்றின் மூலம் பரவும் நச்சுக் கிருமிகளால் ஏற்படும் நோய்களைக்கூட  நம்மால் கட்டுப்படுத்த முடியவில்லை' எனக் குறிப்பிட்டார்.
    இதையடுத்து நீலகிரி மாவட்ட ஆட்சியராக வந்த சுப்ரியா சாஹூ, "பிளாஸ்டிக் பொருள்களின் பயன்பாடு குறித்த முழு ஆய்வை மேற்கொண்டு 20 மைக்ரான் எடைக்குக் குறைவான அனைத்து வகையான பிளாஸ்டிக் பொருள்களுமே தடை செய்யப்படுவதாக அதிகாரபூர்வமாக அறிவித்தார்.  சுப்ரியா சாஹூவின் இந்த அறிவிப்புக்கு வரவேற்பு தெரிவித்து "தினமணி' நாளிதழில் தலையங்கம் வெளியிடப்பட்டது.  அதன் காரணமாக இந்தத் தடை எவ்வளவு அவசியமானது என்ற விவரம் மாநிலம்  முழுவதும் தெரியவந்தது.
  இப்பிரச்னையில் அதிகமாகத் தீவிரம் காட்டப்படாத  நிலையில் நீலகிரி மாவட்டத்தின் தற்போதைய ஆட்சியராக உள்ள இன்னசென்ட் திவ்யா இந்த மாவட்டத்தில் பிளாஸ்டிக் ஒழிப்பில் மிகத் தீவிரம் காட்டினார். கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் உதகையில் நடைபெற்ற எம்ஜிஆர் நூற்றாண்டு விழா நிகழ்ச்சிகளின்போது தமிழக முதல்வர் உள்ளிட்ட அனைத்து முக்கிய விருந்தினர்களும் பங்கேற்றிருந்த போதும்கூட பிளாஸ்டிக் பொருள்களுக்குப் பதிலாக மாற்றுப் பொருளைத் தேடும் நிலை உருவானது.  தமிழக அரசு அடுத்த ஆண்டு  ஜனவரி  முதல் தேதியில் இருந்து பிளாஸ்டிக் பொருள்களுக்குத்  தடை விதிக்கப்படும் என அறிவித்திருப்பதற்குக் காரணம் நீலகிரி மாவட்டத்தில் இத்திட்டத்தை முனைப்போடு செயல்படுத்தியதே எனக் கூறலாம்.
   பிளாஸ்டிக்  என்பது நமது அன்றாட வாழ்வோடு இணைந்துவிட்ட ஒன்றாகும்.   பிளாஸ்டிக்  பைகளின் பயன்பாடு அதிகபட்சமாக ஒரு மணி நேரம் வரை மட்டுமே இருந்தாலும்கூட  இவை மட்குவதற்கு இவற்றின் தன்மையைப் பொருத்து நூற்றுக்கணக்கான ஆண்டுகள் வரை ஆகும் என சுற்றுச்சூழல் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். கடலில் மிதந்து கொண்டிருக்கும் கழிவுகளில் 90 சதவீதக் கழிவுகள் பிளாஸ்டிக்கினாலேயே ஏற்படுபவை எனவும்,  தற்போது உற்பத்தி செய்யப்படும் பிளாஸ்டிக்கில் 7 சதவீதம் மட்டுமே மறு சுழற்சிக்காகப் பயன்படுத்தப்படுவதாகவும் கூறப்படுகிறது.
  சென்னையில் மட்டும் நாளொன்றுக்கு சுமார் 2 லட்சம் கிலோ பிளாஸ்டிக் கழிவுகள் கொட்டப்படுவதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர். மட்கும் தன்மையற்ற பிளாஸ்டிக்குகள் மண்ணின் திறனை மாற்றியமைப்பதோடு மண்ணில் உள்ள சத்துகளில் உயிரியல் மற்றும் வேதியியல் மாற்றங்களை ஏற்படுத்தி சுற்றுச்சூழலை மாசுபடுத்துகிறது. இதன் காரணமாக மண்ணின் காரத் தன்மை,  அமிலத் தன்மையில் மாற்றங்கள் உண்டாகின்றன. பிளாஸ்டிக் பைகளின் பயன்பாடு பெரும்பாலான நாடுகளில் தவிர்க்கப்பட்டுவிட்டது. இந்தியா போன்ற வளரும் நாடுகளில் பிளாஸ்டிக் பொருள்களின் பயன்பாட்டைத் தவிர்ப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
   பிளாஸ்டிக் ஒழிப்புக்கு நீலகிரி மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் வெற்றியடைந்துள்ளதாகவே கூறலாம். தமிழகம் முழுவதும் பிளாஸ்டிக் பொருள்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் இதற்கு பதிலாக மாற்றுப் பொருள்களை குறைந்த விலையில் அல்லது கட்டுப்படியாகக் கூடிய விலையில் தயாரித்தால் மட்டுமே பொதுமக்கள் 
பிளாஸ்டிக் ஒழிப்புக்கு தங்களது முழு ஆதரவையும் தருவார்கள் என்பதில் ஐயமில்லை.
  நீலகிரி மாவட்டத்தைப் பொருத்தமட்டில் இங்குள்ளவர்கள் மட்டுமின்றி இங்கு வரும் லட்சக்கணக்கான சுற்றுலாப் பயணிகளும் பிளாஸ்டிக் ஒழிப்புக்கு முழு ஒத்துழைப்பு அளித்து வருகின்றனர். பிளாஸ்டிக் ஒழிப்பில் தமிழகத்துக்கு நீலகிரி மாவட்டம் வழிகாட்டியதைப்போல,  இந்தியா முழுவதுக்கும் தமிழகம் வழிகாட்டும் மாநிலமாகத் திகழப்போகிறது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.