/

கொடநாடு விவகாரம்: சயன், மனோஜ் ஜாமீனை ரத்து செய்யக் கோரும் மனு மீது இன்று விசாரணை

கொடநாடு எஸ்டேட்டில் நிகழ்ந்த கொலை, கொள்ளைச் சம்பவங்கள் தொடர்பான வழக்கில் தற்போது

Updated On :24 ஜனவரி 2019, 12:28 am IST

கொடநாடு எஸ்டேட்டில் நிகழ்ந்த கொலை, கொள்ளைச் சம்பவங்கள் தொடர்பான வழக்கில் தற்போது  வெளியே உள்ள சயன், மனோஜ் ஆகிய இருவரின் ஜாமீனை ரத்து செய்யக் கோரும் மனு மீதான விசாரணை உதகை நீதிமன்றத்தில் வியாழக்கிழமை (ஜனவரி 24) நடைபெற  உள்ளது.
   கொடநாடு எஸ்டேட்டில் 2017ஆம் ஆண்டு நிகழ்ந்த கொலை, கொள்ளைச் சம்பவங்கள் தொடர்பாக 10 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களில் 9 பேர் ஜாமீனில் வெளியே வந்துள்ளனர். இதில், கேரளத்தை சேர்ந்த சயன், மனோஜ் ஆகியோர் தெஹல்கா பத்திரிகை முன்னாள் ஆசிரியர் மேத்யூஸ் சாமுவேல் தில்லியில் வெளியிட்ட ஆவணப்படத்துக்கு அளித்திருந்த பேட்டியில் கொடநாடு சம்பவங்களில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு தொடர்புள்ளதாகக் கருத்துத் தெரிவித்திருந்தனர்.
 இதையடுத்து, உதகை நீதிமன்றத்தில் அரசு வழக்குரைஞர் நந்தகுமார் தாக்கல் செய்த மனுவில், சயன், மனோஜ் ஆகியோர் ஊடகங்களுக்கு தெரிவித்து வரும் இத்தகைய தகவல்களால் இவ்வழக்கில் தொடர்புடைய பிற சாட்சிகள் கலைய வாய்ப்புள்ளது. எனவே, இவர்கள் இருவரின் ஜாமீனையும் ரத்து செய்ய வேண்டும் எனக் கோரப்பட்டிருந்தது. 
  இந்த மனு மீதான விசாரணை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் மாவட்ட நீதிபதி வடமலை முன்னிலையில் வியாழக்கிழமை விசாரணைக்கு வருகிறது. அப்போது, சயன், மனோஜ் ஆகியோர் நேரில் ஆஜராக வேண்டும் என்ற கட்டாயம் இல்லாவிட்டாலும்கூட, அவர்கள் இருவரின் தரப்பில் வழக்குரைஞர்கள் ஆஜராகி கருத்துகளைத் தெரிவிப்பார்கள்.  இதனடிப்படையில் நடைபெறும் விவாதத்திற்குப் பிறகு சயன், மனோஜ் ஆகிய இருவரின் ஜாமீன் ரத்து செய்யப்படுமா அல்லது இவ்வழக்கின் அடுத்தகட்ட  விசாரணை நடைபெறவுள்ள பிப்ரவரி 2ஆம் தேதி வரை அவர்கள் இருவருக்கும் ஜாமீன் நீட்டிக்கப்படுமா என்பது தெரியவரும்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.