11-ஆம் நூற்றாண்டு சோழர் கால செப்பேடுகளை பிரதமர் மோடி முன்னிலையில் திருப்பியளித்த நெதர்லாந்து அரசு!போக்சோ வழக்கு: மத்திய அமைச்சர் மகன் காவல் நிலையத்தில் சரண் தெலங்கானாவில் எஸ்ஐஆர் பணிகள் ஜூன் 15 முதல் தொடக்கம்நீட் விவகாரம்: மத்திய அமைச்சர் பதவியில் இருந்து தர்மேந்திர பிரதானை நீக்க ராகுல் காந்தி வலியுறுத்தல்கேரளத்தில் புதிய முதல்வர் பதவியேற்பு விழாவில் பங்கேற்கும் பாஜக எம்எல்ஏக்கள்!இளைஞர்களைக் கரப்பான்பூச்சி, ஒட்டுண்ணிகளுடன் ஒப்பிட்ட விமர்சனம்: உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி விளக்கம்!சிபிஎஸ்இ 9-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூலை முதல் மும்மொழிக் கல்வி கட்டாயம்!புதிய தமிழக அமைச்சர்களுக்கு துறைகள் ஒதுக்கீடு!
/

1,800 ஏக்கர் நிலப்பரப்புக்கு பட்டா வழங்கக் கோரி வனத் துறையைக் கண்டித்து கோத்தர் பழங்குடியினர் தர்னா

வனத் துறையைக் கண்டித்து உதகையில் கோத்தர் பழங்குடியினர் தர்னா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Updated On :23 ஜனவரி 2019, 5:37 am IST

வனத் துறையைக் கண்டித்து உதகையில் கோத்தர் பழங்குடியினர் தர்னா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
  நீலகிரி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் கோத்தர் இன பழங்குடியினர் வசித்து வருகின்றனர். இதில், சோலூர் கோக்கால் பகுதியில் கோத்தர் இன மக்கள் வசித்து வரும் பகுதியைச் சுற்றிலும் காப்புக் காடுகள் அமைந்துள்ளன. இங்குள்ள நிலத்தை மேய்ச்சல் நிலம் என ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்திலேயே தங்கள் இனத்தாருக்குக் கொடுத்ததாகவும், அதற்கான ஆவணங்கள் உள்ளதாகவும், தற்போது அந்த இடத்தில் கால்நடை மேய்ச்சல் மற்றும் விவசாயம் மேற்கொண்டு வருவதாகவும், இங்குள்ள 1,800 ஏக்கர் நிலத்துக்கு உடனடியாக பட்டா வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
  ஆனால், 1,800 ஏக்கர் நிலத்தை அவர்களுக்கு வழங்க வாய்ப்பு இல்லை. தற்போது அவர்கள் வசம் உள்ள நிலத்தில் மட்டுமே விவசாயம்  செய்ய வேண்டும். நிலத்தை குத்தகைக்கு விடக் கூடாது. கோத்தரினத்தை சாராத எவருக்கும் நிலத்தைக் கொடுக்கக் கூடாது என வனத் துறை தெரிவித்து வருகிறது.
    இப்பிரச்னை காரணமாக வனத் துறையினருக்கும், கோக்கால் பகுதியிலுள்ள கோத்தர் இன மக்களுக்கும் தொடர்ந்து பிரச்னை ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில், கொல்லிமலையில் நடைபெற்ற கோத்தர் இன மக்களின் பாரம்பரிய திருவிழாவுக்காக கோக்காலில் இருந்து அனைவரும் கொல்லிமலைக்குச் சென்றுள்ளனர். இந்நிலையில், திங்கள்கிழமை இரவில் உதகை தலைக்குந்தா பகுதியைச் சேர்ந்த ஷாநவாஸ்  கோக்கால் பகுதியிலுள்ள முண்டன் என்பவரது 
 விளைநிலத்தில் இருந்ததாகக் கூறப்படுகிறது.  அப்போது அங்கு ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த வனத் துறையினர் பாதுகாக்கப்பட்ட வனப் பகுதிக்குள் அத்துமீறி நுழைந்ததாக  ஷாநவாûஸ கைது செய்துள்ளனர். தகவலறிந்து கொல்லிமலையிலிருந்து உதகைக்கு வந்த கோத்தர் இன மக்கள் உதகைக் கிளைச் சிறைக்கு வந்து சிறை அதிகாரிகளுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். 
    பழங்குடியினர் மீது இரவு நேரத்தில் வனத் துறையினர் தேவையின்றித் தாக்குதல் நடத்துவதாகக்கூறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் நள்ளிரவு வரை இப்பிரச்னை தொடர்ந்துள்ளது. இதையடுத்து ஷாநவாûஸ உதகை கிளைச் சிறையில் அடைக்காமல் கோவை மத்திய சிறைக்கு வனத் துறையினர் கொண்டு சென்றனர். 
   இப்பிரச்னை தொடர்பாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு செவ்வாய்க்கிழமை  வந்த கோத்தர் இன மக்கள் ஆட்சியர் இல்லாததால் மாவட்ட வன அலுவலர் அலுவலகத்துக்குச் சென்று தர்னா போராட்டத்தில் ஈடுபட்டனர். 
    இது தொடர்பாக மாவட்ட வன அலுவலர்  சுமேஷ் சோமன் கூறியதாவது:
 வனச் சட்டங்களின்படி பழங்குடியினர் நிலங்களில் பழங்குடியினர் மட்டுமே விவசாயத்தில் ஈடுபட வேண்டும். மற்றவர்களுக்கு நிலத்தை குத்தகைக்குக் கொடுத்தால் வெளியேற்றப்படுவர் என ஏற்கனவே எச்சரிக்கப்பட்டுள்ளது.  நீண்ட நாள்  கண்காணிப்புக்கு பின்னரே விதிகளை மீறி செயல்பட்டதற்காக ஷாநவாûஸ கைது செய்யப்பட்டுள்ளார் என்றார்.
  இது குறித்து கோத்தர் இனத் தலைவர்களுள் ஒருவரான  நீதி சரஸ்வதி கூறியதாவது:
  கொல்லிமலைக்குச் சென்றதன் காரணமாக தங்கள் விளைநிலங்களின் பாதுகாப்புக்காக ஷாநவாûஸ அங்கு விட்டுச் சென்றோம். அவரை வனத் துறையினர் அத்துமீறி கைது செய்துள்ளனர் என்றார்.
   நகர காவல் துணைக் கண்காணிப்பாளர்  திருமேனி கோத்தர் இன மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். புதன்கிழமை காலையில் உதகை வருவாய் கோட்டாட்சியர் முன்னிலையில்  கோத்தர் இன மக்களை பேச்சுவார்த்தைக்கு வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டதை அடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.