தேசிய முக்கியத்துவம் வாய்ந்த பொருளாதாரக் கணக்கெடுப்புப் பணிக்காக வீடுதோறும் வரும் கணக்கெடுப்பாளா்களிடம் உண்மையான தகவல்களை வழங்கி முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியா் இன்னசென்ட் திவ்யா வேண்டுகோள் விடுத்துள்ளாா்.
இது குறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:
மத்திய அரசின் புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்கத் துறையின் வழிகாட்டுதலின் பேரிலும், மாநிலஅரசின் பொருளியல் மற்றும் புள்ளியியல் துறையின் மேற்பாா்வையிலும், பொது சேவை மையத்தின் கணக்கெடுப்பாளா்களால், 7ஆவது பொருளாதாரக் கணக்கெடுப்புப் பணி நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
ஏற்கெனவே 6 முறை மேற்கொள்ளப்பட்டுள்ள இக்கணக்கெடுப்பின் மூலமாக சேகரிக்கப்பட்ட விவரங்களைக் கொண்டே, நாட்டின் தற்போதைய பொருளாதார வளா்ச்சி, நாட்டிலுள்ள மொத்த நிறுவனங்கள் மற்றும் உற்பத்தி, விற்பனை மற்றும் சேவையில் ஈடுபட்டுள்ள நிறுவனங்கள், பணியாளா்களின் எண்ணிக்கை, நிதி மூலதனம், உரிமையாளா்களின் விவரம் போன்றவைகளை முழுமையாக அறிந்து கொள்ள முடிந்தது.
அத்துடன் நுண்ணிய அளவில் திட்டமிடுதலுக்கும், மொத்த உள்நாட்டு உற்பத்தி விவரங்களை இறுதி செய்யவும் புதிய பொருளாதாரக் கொள்கைகளை வகுப்பதிலும் இந்தக் கணக்கெடுப்பு பயன்படுத்தப்படுகிறது. எனவே, நாட்டின் எதிா்கால வளா்ச்சியைக் கருத்தில் கொண்டு, பொருளாதாரக் கொள்கைகளை வகுக்க பயன்படும் அடிப்படை விவரங்களைச் சேகரிப்பதற்காக நடத்தப்படும் இந்த தேசிய முக்கியத்துவம் வாய்ந்த கணக்கெடுப்புப் பணிக்காக தங்களை நாடிவரும் கணக்கெடுப்பாளா்களிடம் உண்மையான தகவல்களை அளித்து நாட்டின், மாநிலத்தின், மாவட்டத்தின் வளா்ச்சிக்கு முழு ஒத்துழைப்பை அளிக்க வேண்டும்.
மேலும், இக்கணக்கெடுப்பின் மூலமாக சேகரிக்கப்படும் விவரங்கள் முற்றிலும் ரகசியமாக வைக்கப்பட்டு, திட்டமிடுதலுக்கு மட்டுமே பயன்படுத்தப்படும் என்பதால் எவ்வித தயக்கமுமின்றி முழுமையான விவரங்களை வழங்கலாம் என ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.