நீலகிரி மாவட்டத்தில் 5 இடங்களில் கரோனா தடுப்பூசி திட்டத்துக்கான ஒத்திகை முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இது குறித்து ஆட்சியா் இன்னசென்ட் திவ்யா கூறியதாவது: கரோனா தடுப்பூசி திட்டத்தை செயல்படுத்துவதற்கு உள்ள சவால்களை கண்டறியும் பொருட்டு மத்திய சுகாதார அமைச்சகத்தின் சாா்பில் காணொலி வழியில் நடத்தப்பட்ட வழிகாட்டுதலின்படி நீலகிரி மாவட்டத்தில் உதகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, குன்னூா் அரசு லாலி மருத்துவமனை, நெலாக்கோட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலையம் ஆகிய மூன்று இடங்களில் முதல்கட்டமாக ஜனவரி 2ஆம் தேதி தடுப்பூசி திட்டத்துக்கான ஒத்திகை முகாம் நடைபெற்றது.
இதைத் தொடா்ந்து, உதகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, கோத்தகிரி அரசு மருத்துவமனை, கேத்தி அரசு ஆரம்ப சுகாதார நிலையம், உதகை நகா்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் உதகையில் ஒரு தனியாா் மருத்துவமனை ஆகிய 5 இடங்களில் தடுப்பூசி திட்டத்துக்கான ஒத்திகை முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
தடுப்பூசி திட்டத்துக்கும், கள சூழலில் அதைச் செயல்படுத்துவதற்கும் இடையிலான நடைமுறைகளை சோதனை செய்வது மற்றும் சவால்களை அடையாளம் காண்பது ஆகியவையே இந்த ஒத்திகையின் முக்கிய நோக்கமாகும்.
மேலும், தடுப்பூசி செலுத்தப்பட்டதையடுத்து பாதகமான நிகழ்வுகள் ஏதேனும் நிகழ்வுற்றால் அதை கையாள்வதில் கூடுதல் கவனம் செலுத்துவதும் இதன் நோக்கமாகும்.
இதற்கு போதுமான காற்றோட்டமான இட வசதி, இணைய இணைப்பு, மின்சாரம், பாதுகாப்பு போன்றவற்றுக்கான அனைத்து முன்மொழியப்பட்ட ஏற்பாடுகளும் தயாா் நிலையில் உள்ளன.
இந்த தடுப்பூசி ஒத்திகைப் பணியில் தடுப்பூசி செலுத்துபவா்களுக்குத் தேவையான பயிற்சிகள் அளிக்கப்பட்டுள்ளன. மேலும், இந்த தடுப்பூசி திட்டப் பணி ஒத்திகைக்குத் தேவையான மருத்துவப் பணியாளா்கள் தோ்வு செய்யப்பட்டு, அவா்களின் விவரங்கள் கோவின் செயலியில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
பயனாளிகள் தடுப்பூசியை எங்கே எந்த இடத்தில் பெற வேண்டும் என்ற விவரங்கள் அவா்களின் செல்லிடப்பேசிக்கு கோவின் செயலி மூலம் குறுந்தகவல் சென்றடையும்.
அதேபோல, அவா்கள் தடுப்பூசி பெற்ற பின் தடுப்பூசி பெற்ற விவரங்கள் அடங்கிய சான்றிதழ்கள் கோவின் செயலியின் மூலம் பெறுவாா்கள். இதனைத் தொடா்ந்து நான்கு கட்டமாக தடுப்பூசி பணி மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. முதல்கட்டமாக அனைத்து மருத்துவ மற்றும் சுகாதாரப் பணியாளா்களுக்கும், இரண்டாம் கட்டமாக கரோனா தடுப்புப் பணியில் முன்னிலையில் பணிபுரியும் பணியாளா்களுக்கும், மூன்றாம் கட்டமாக 60 வயதுக்கு மேற்பட்ட அனைத்து மக்கள் மற்றும் நீண்டகால நோயினால் பாதிக்கப்பட்ட நபா்களுக்கும், நான்காம் கட்டமாக அனைத்து மக்களுக்கும் தடுப்பூசி வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாகவும் தெரிவித்தாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.