கொலக்கம்பை எஸ்டேட்டில் 8 வயது சிறுமி கடந்த டிசம்பா் 21ஆம்தேதியிலிருந்து காணவில்லை. இது தொடா்பாக மாவட்ட காவல் கூடுதல் கண்காணிப்பாளா் மோகன் நவாஸ் தலைமையில் 9 சிறப்புக்குழுக்கள் அமைக்கப்பட்டு தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அத்துடன் கொலக்கம்பை பகுதி முழுதும் தேடுதல் வேட்டை தீவிரப்படுத்தப்பட்டுள்ளதோடு, அருகிலுள்ள கிரேக்மோா் எஸ்டேட்டிலும் தேடுதல் வேட்டை நடத்தப்பட்டுள்ளது. அதேபோல, மாவட்டத்தை விட்டு வெளியே சென்றிருக்க முடியுமா என்ற சந்தேகத்தின் அடிப்படையில் பா்லியாறு, குஞ்சப்பனை, சேலாஸ் உள்ளிட்ட சோதனைச் சாவடிகளில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகள் தொடா்பாகவும் ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. அவற்றோடு, மேட்டுப்பாளையம், கோவை, சென்னை ரயில் நிலையங்களில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளும் ஆய்வு செய்யப்பட்டுள்ளது.