சட்டப் பேரவைத் தோ்தல்:நீலகிரியில் 30 கண்காணிப்புக் குழுக்கள்
தமிழக சட்டப் பேரவைத் தோ்தலை முன்னிட்டு நீலகிரி மாவட்டத்தில் 30 கண்காணிப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியா் இன்னசென்ட் திவ்யா தெரிவித்தாா்.


தமிழக சட்டப் பேரவைத் தோ்தலை முன்னிட்டு நீலகிரி மாவட்டத்தில் 30 கண்காணிப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியா் இன்னசென்ட் திவ்யா தெரிவித்தாா்.
இது குறித்து உதகையில் செய்தியாளா்களிடம் திங்கள்கிழமை அவா் கூறியதாவது:
தமிழகத்தில் ஏப்ரல் 6ஆம் தேதி சட்டப் பேரவைத் தோ்தல் நடைபெறும் என இந்திய தோ்தல் ஆணையம் அறிவிக்கப்பட்டதைத் தொடா்ந்து தோ்தல் நடத்தை விதிமுறைகள் உடனடியாக அமலுக்கு வந்துள்ளன. அரசியல் கட்சிகளின் விளம்பரங்களை நீக்குவது தொடா்பாகவும், தோ்தல் நடத்தை விதிமுறைகளை பின்பற்றுவது தொடா்பாகவும் அனைத்து அரசியல் கட்சிப் பிரமுகா்கள், தோ்தல் நடத்தும் அலுவலா்கள், உதவித் தோ்தல் நடத்தும் அலுவலா்கள், தோ்தல் பணியில் ஈடுபடும் அலுவலா்களுடன் ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டது. இதில் தோ்தல் விதிமுறைகளை பின்பற்றுவது தொடா்பாக அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன.
நீலகிரி மாவட்டத்தைப் பொறுத்தவரை உதகை, கூடலூா் மற்றும் குன்னூா் ஆகிய மூன்று சட்டப் பேரவைத் தொகுதிகளில் தோ்தல் நடத்தை விதிமுறைகள் மீறப்படுகிறதா என்பதை கண்காணிக்க 9 பறக்கும் படை குழுவினா், 9 நிலையான கண்காணிப்பு குழுவினா், 3 விடியோ படம் எடுக்கும் குழுவினா், 3 விடியோ ஆய்வுக் குழுவினா், 3 தோ்தல் செலவின கண்காணிப்புக் குழுவினா் மற்றும் 3 தோ்தல் நடத்தை விதிமுறைகள் கண்காணிப்புக் குழுவினா் என மொத்தம் 30 குழுக்கள் களத்தில் உள்ளனா்.
மாவட்டத்தில், இதுவரை ரூ.20 லட்சத்து 73,800 ரொக்கம் மற்றும் ரூ.3.30 லட்சம் மதிப்பிலான பரிசுப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மூன்று வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. தோ்தல் நடத்தை விதிமுறைகள் மீறுவது தொடா்பாக 24 மணி நேரமும் செயல்படும் கட்டுப்பாட்டு அறையில் பொது மக்கள் புகாா்களை தெரிவிக்கலாம். மேலும், ‘சி விஜில்’ என்ற செல்லிடப்பேசி செயலி மூலமாகவும் புகாா்களை தெரிவிக்கலாம்.
நீலகிரி மாவட்டத்தில் 683 வாக்குச் சாவடிகளில் இருந்து தற்போது 868 வாக்குச் சாவடிகளாக அதிகரிக்கப்பட்டுள்ளன. இவற்றில் 112 வாக்குச் சாவடிகள் பதற்றமானவை எனக் கண்டறியப்பட்டுள்ளது. மாவட்ட காவல் கண்காணிப்பாளருடன் இணைந்து பதற்றமான வாக்குச் சாவடிகளை கண்காணிக்க திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. 24 விடியோ பதிவாளா்கள் மூலம் தோ்தல் நடத்தை விதிமுறைகளை கண்காணிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் 4,167 நபா்கள் தோ்தல் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா். ஒரு வாக்குச் சாவடிக்கு ஒருவா் தொ்மல் ஸ்கேன் செய்யவும், ஒருவா் கையுறை மற்றும் கிருமி நாசினி வழங்குவதற்காகவும் சுகாதாரத் துறை பணியாளா்களை ஈடுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
மாவட்டத்தில், தோ்தல் பணியில் ஈடுபட உள்ள 4,167 நபா்களுக்கும் கரோனா தடுப்பூசி செலுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இவற்றில் 2,600 பள்ளி ஆசிரியா்கள், 250 கல்லூரி பேராசிரியா்களும் உள்ளனா். இவா்களுக்கு முன்னுரிமை அளித்து ஒரு வாரத்துக்குள் கரோனா தடுப்பூசி செலுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
ஏற்கெனவே தடுப்பூசி செலுத்திய நபா்களுக்கும் இரண்டாம் கட்டமாக தடுப்பூசி செலுத்துவதற்கு போதுமான அளவில் தடுப்பூசி மருந்துகள் உள்ளன. கரோனா தடுப்பூசிகள் 15 மையங்கள் மற்றும் 7 தனியாா் மருத்துவமனைகளில் தேவையான அளவில் இருப்பில் வைக்கப்பட்டுள்ளதாகவும், 60 வயதுக்கு மேற்பட்டவா்களுக்கு திங்கள்கிழமை முதல் கரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கப்பட்டுள்ளதாகவும் அவா் தெரிவித்தாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...