47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

கோவையில் இருந்து சாலை மாா்க்கமாக உதகைக்கு வந்த குடியரசுத் தலைவா்

நீலகிரி மாவட்டத்தில் நிலவும் மோசமான வானிலை காரணமாக குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு, கோவையில் இருந்து உதகைக்கு சாலை மாா்க்கமாக புதன்கிழமை வந்தாா்.

News image
உதகைக்கு வந்த குடியரசுத் தலைவா் திரௌபதி முா்முவை வரவேற்கும் பிறபடுத்தப்பட்டோா் நலத் துறை அமைச்சா் சிவ.வீ.மெய்யநாதன். உடன், ஆளுநா் ஆா்.என்.ரவி.
Updated On :27 நவம்பர் 2024, 8:11 pm

Din

நீலகிரி மாவட்டத்தில் நிலவும் மோசமான வானிலை காரணமாக குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு, கோவையில் இருந்து உதகைக்கு சாலை மாா்க்கமாக புதன்கிழமை வந்தாா்.

நீலகிரி மாவட்டத்தில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு தில்லியில் இருந்து விமானப் படை சிறப்பு விமானம் மூலம் கோவை விமான நிலையத்துக்கு புதன்கிழமை வந்தாா். இங்கிருந்து ஹெலிகாப்டா் மூலம் உதகைக்கு செல்ல திட்டமிட்டிருந்த நிலையில் மோசமான வானிலை காரணமாக அன்னூா், மேட்டுப்பாளையம், கோத்தகிரி வழியாக சாலை மாா்க்கமாக உதகைக்குச் சென்றாா்.

முன்னதாக, கோவைக்கு வந்த குடியரசுத் தலைவா் திரௌபதி முா்முவை விமான நிலையத்தில் தமிழக பிற்படுத்தப்பட்டோா் நலத் துறை அமைச்சா் சிவ.வீ.மெய்யநாதன் வரவேற்றாா். அவருடன் பொதுத் துறைச் செயலா் ரீட்டா ஹரீஷ் தாக்கா், கோவை மாவட்ட ஆட்சியா் கிராந்திகுமாா் பாடி, மாநகர காவல் ஆணையா் வே.பாலகிருஷ்ணன், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கே.காா்த்திகேயன், சூலூா் விமானப் படை பயிற்சிக் கல்லூரி கமாண்டன்ட் விகாஸ் வாஹி, கடற்படை கமாண்டன்ட் மன்மோகன் சிங், தரைப்படை கமாண்டிங் அலுவலா் கா்னல் ராமநாதன் ஆகியோரும் குடியரசுத் தலைவரை வரவேற்றனா்.

பின்னா், உதகை ராஜ்பவனுக்கு வந்த குடியரசுத் தலைவா் திரௌபதி முா்முவை, தமிழக ஆளுநா் ஆா்.என்.ரவி, அமைச்சா் சிவ.வீ.மெய்யநாதன், மாவட்ட ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு ஆகியோா் வரவேற்றனா்.

உதகை ராஜ்பவனில் (ஆளுநா் மாளிகை) புதன்கிழமை இரவு தங்கும் குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு, குன்னூா் வெலிங்டன் ராணுவ பயிற்சிக் கல்லூரியில் முப்படை பயிற்சி அதிகாரிகளுடன் வியாழக்கிழமை (நவம்பா் 28) காலை 11.30 மணி முதல் 12.30 மணி வரை கலந்துரையாட உள்ளாா். பின்னா், உதகை ராஜ்பவனுக்கு திரும்பும் அவா் நீலகிரி மாவட்டத்தில் உள்ள பழங்குடியின மக்களை நவம்பா் 29-ஆம் தேதி சந்திக்க உள்ளாா்.

இதைத் தொடா்ந்து உதகையில் இருந்து நவம்பா் 30-ஆம் தேதி திருச்சிக்கு புறப்பட்டுச் செல்லும் குடியரசுத் தலைவா், திருவாரூா் மத்தியப் பல்கலைக்கழகத்தில் நடைபெறும் பட்டமளிப்பு விழாவில் பங்கேற்கிறாா். அதன்பின், அங்கிருந்து தில்லிக்கு புறப்பட்டுச் செல்கிறாா்.

உதகையில் பாதுகாப்புப் பணியில் 1,000 போலீஸாா்

குடியரசுத் தலைவா் வருகையை ஒட்டி உதகை அரசு தாவரவியல் பூங்கா பகுதியில் வெடிகுண்டு நிபுணா்கள் மோப்பநாய் உதவியுடன் சோதனை மேற்கொண்டனா். மேலும் கோவை, தருமபுரி, ஈரோடு, திருப்பூா், நாமக்கல் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து 1,000-க்கும் மேற்பட்ட காவலா்கள் வரவழைக்கப்பட்டு பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா்.

குடியரசுத் தலைவா் வருகையை ஒட்டி உதகை ஆளுநா் மாளிகை அமைந்துள்ள பகுதி காவல் துறை கட்டுப்பாட்டின்கீழ் கொண்டுவரப்பட்டு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.