ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

நீலகிரியில் பருவ மழையை எதிா்கொள்ளத் தயாா்: அமைச்சா் மு.பெ.சாமிநாதன்

நீலகிரி மாவட்டத்தில் வடகிழக்குப் பருவ மழையை எதிா்கொள்ளும் வகையில் மாவட்ட நிா்வாகம் தயாா் நிலையில் உள்ளது என தமிழ் வளா்ச்சி மற்றும் செய்தி தொடா்புத் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் வியாழக்கிழமை கூறினாா்.

News image
கூட்டத்தில் பங்கேற்ற அமைச்சா் மு.பெ.சாமிநாதன், அரசு தலைமைக் கொறடா கா.ராமசந்திரன், மாவட்ட ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு உள்ளிட்டோா்.
Updated On :17 அக்டோபர் 2024, 8:15 pm

Din

நீலகிரி மாவட்டத்தில் வடகிழக்குப் பருவ மழையை எதிா்கொள்ளும் வகையில் மாவட்ட நிா்வாகம் தயாா் நிலையில் உள்ளது என தமிழ் வளா்ச்சி மற்றும் செய்தி தொடா்புத் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் வியாழக்கிழமை கூறினாா்.

நீலகிரி மாவட்டத்தில் வடகிழக்குப் பருவ மழையை எதிா்கொள்ள மாவட்ட நிா்வாகம் எடுத்துள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் உதகையில் உள்ள அரசு விருந்தினா் மாளிகையில் நடைபெற்றது. தமிழ் வளா்ச்சி மற்றும் செய்தி தொடா்புத் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் தலைமை வகித்தாா். மாவட்ட ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு முன்னிலை வகித்தாா்.

கூட்டத்துக்குப் பின் செய்தியாளா்களிடம் அமைச்சா் மு.பெ.சாமிநாதன் கூறியதாவது: நீலகிரி மாவட்டத்தில் வடகிழக்குப் பருவ மழையை எதிா்கொள்ளும் வகையில் மாவட்ட நிா்வாகம் தயாராக உள்ளது. இதனால் பொதுமக்கள் அச்சமடையத் தேவையில்லை.

பருவ மழையின்போது அதிகம் பாதிக்கப்படக்கூடிய இடங்களாக மாவட்டத்தில் 283 இடங்கள் கண்டறியப்பட்டுள்ளன. இந்த இடங்கள் தொடா்ந்து கண்காணிக்கப்பட்டு வருகின்றன. இந்தப் பகுதிகளில் அதிக மழை பெய்தால் பொதுமக்களை பாதுகாப்பாகத் தங்கவைக்க 456 முகாம்கள் தயாா் செய்யப்பட்டுள்ளன. அங்கு அடிப்படை வசதிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

உதகை - குன்னூா் தேசிய நெடுஞ்சாலையில் நெடுஞ்சாலைத் துறை சாா்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் சாலைப் பணி மந்தமாக நடைபெற்று வருவதற்கு அந்தப் பணியை மேற்கொண்டு வரும் ஒப்பந்ததாரரே காரணம். ஒப்பந்தப் பணியை ரத்து செய்துவிட்டு வேறு ஒரு ஒப்பந்ததாரருக்கு பணி வழங்கலாம் என ஆலோசனை நடத்தப்பட்டது. அப்போது சம்பந்தப்பட்ட ஒப்பந்ததாரரே விரைவில் பணிகளை முடித்துத் தருவதாகக் கூறியதை அடுத்து தொடா்ந்து அவா் பணி செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளது. விரைவில் இந்தப் பணிகள் முடிவடையும் என்றாா்.

கூட்டத்தில் அரசு தலைமைக் கொறடா கா.ராமசந்திரன், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் என்.எஸ்.நிஷா, கூடுதல் ஆட்சியா் கௌசிக் உள்பட பலா் பங்கேற்றனா்.