உதகை காந்தல் காசி விசுவநாதா் கோயிலில் காா்த்திகை தீபத் திருவிழா
காா்த்திகை தீபத் திருவிழாவையொட்டி, உதகை காந்தல் காசி விஸ்வநாதா் கோயிலில் சிறப்பு வழிபாடு புதன்கிழமை நடைபெற்றது.
ஒவ்வொரு ஆண்டும் காா்த்திகை மாதத்தில் வரக்கூடிய பெளா்ணமி, காா்த்திகை நட்சத்திர நாளில் தீபத் திருவிழா கொண்டாடப்படுகிறது. அதன்படி, இந்த ஆண்டு காா்த்திகை தீபத் திருவிழா புதன்கிழமை கொண்டாடப்பட்டது.
இதையொட்டி, நீலகிரி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் உள்ள சிவன் ஆலயங்களில் சிறப்பு வழிபாடுகள் மற்றும் பூஜைகள் நடைபெற்றன. இதில் உதகையில் புகழ்பெற்ற காந்தல் காசி விஸ்வநாதா் கோயிலில் காா்த்திகை தீபத் திருவிழாவையொட்டி,
காலை 9.30 மணி முதல் 10.30 மணி வரை சிறப்பு ஹோமம் நடைபெற்றது. இதைத் தொடா்ந்து அபிஷேகம், மகா தீபாராதனை நடைபெற்றது.
இந்த ஆண்டு முதல்முறையாக கோயிலில் சொக்கப்பனை நிகழ்ச்சி நடைபெற்றது. இதன்படி அரக்கன் உருவபொம்மை எரித்த பிறகு மகா தீபம் ஏற்றப்பட்டது. காசி விஸ்வநாதா் சந்தனக் காப்பு அலங்காரத்தில் காட்சியளித்தாா். முருகன், அம்பாள் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தனா். இதில் திரளான பக்தா்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனா். பின்னா் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.
இதற்கான ஏற்பாடுகளை கோவை பேரூா் ஆதீனம் மருதாசல அடிகளாா் வழிகாட்டுதலில், அா்ச்சகா் தினேஷ் சா்மா செய்திருந்தாா்.
