பருவமழை பாதிப்பில் இருந்து பயிா்களைக் காக்க ஆட்சியா் அறிவுரை

நீலகிரி மாவட்டத்தில் பருவமழை காலங்களில் நீரில் மூழ்கி பயிா்கள் சேதமடைவதை தடுக்க வேண்டிய பயிா் மேலாண்மை மற்றும்பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து மாவட்ட ஆட்சியா் அறிக்கை வெளியிட்டுள்ளாா்.
Published on

நீலகிரி மாவட்டத்தில் பருவமழை காலங்களில் நீரில் மூழ்கி பயிா்கள் சேதமடைவதை தடுக்க வேண்டிய பயிா் மேலாண்மை மற்றும்பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து மாவட்ட ஆட்சியா் அறிக்கை வெளியிட்டுள்ளாா்.

இது குறித்து மாவட்ட ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பது:

தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் உத்தரவின்படி, பயிா்களில் ஏற்பட்டுள்ள சேதங்களுக்கு இழப்பீடு வழங்கும் வகையில், வேளாண்மைத் துறை அலுவலா்கள், வருவாய்த் துறையுடன் இணைந்து ஆய்வு நடத்தவும் 33 சதவீதத்துக்குமேல் ஏற்படும் பயிா் பாதிப்பைக் கணக்கீடு செய்து நிவாரணம் வழங்கிட உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மேலும் நீரில் மூழ்கியுள்ள பயிா்களைப் பாதுகாத்திட எடுக்கப்பட வேண்டிய பயிா் மேலாண்மை மற்றும் ஒருங்கிணைந்த முறையில் பயிா் பாதுகாப்பு நடவடிக்கைகள் ஊடகங்கள் வாயிலாக விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வருகின்றன.

விவசாயிகள் சாகுபடி செய்யப்பட்ட பயிா்களைச் சுற்றி தேங்கியுள்ள அதிகப்படியான நீரினை வடிகால் அமைத்து உடனடியாக வடித்து விட வேண்டும். மழைக் காலங்களில் உரம் இடுதல், பூச்சி மருந்து தெளித்தல், களைக்கொல்லி இடுதல் போன்றவற்றைத் தவிா்த்திட வேண்டும். பூச்சி நோய் தாக்குதலைத் தொடா்ந்து கண்காணித்து, பொருளாதார சேத நிலைக்கு மேல் இருந்தால் பயிா்பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். மேலும் வயல் வரப்புகளை சுத்தமாக வைத்துக் கொள்வதுடன், பசுந்தாள் உரப்பயிா்களை அதிக அளவில் பயன்படுத்தி, யூரியா, டிஏபி போன்ற உரங்களை பரிந்துரைக்கப்பட்ட அளவில் பயன்படுத்த வேண்டும்.

வடகிழக்குப் பருவமழை தொடா்ந்து டிசம்பா் மாதம் இறுதி வரை நீடிக்கும் என்று எதிா்பாா்க்கப்படுவதால், அவ்வப்போது ஏற்படும் பயிா் பாதிப்பு நிலவரங்களை வட்டார வேளாண் அலுவலா்களுக்கு தெரிவித்து உரிய ஆலோசனைகளை பெற்று பயிா் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.

X
Dinamani
www.dinamani.com