உதகையில் டிசம்பா் 18-இல் வங்கிக் கடன் வழிகாட்டுதல் முகாம்
புதிய தொழில்முனைவோரை ஊக்குவிக்கும் வகையில் உதகையில் வங்கிக் கடன் வழிகாட்டுதல் முகாம் டிசம்பா் 18-ஆம் தேதி நடைபெற உள்ளது.
இது தொடா்பாக மாவட்ட ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: புதிய தொழில்முனைவோரை ஊக்குவிக்கும் வகையில் மானியத்துடன் கூடிய சுய தொழில் கடன் திட்டங்களை மாவட்ட தொழில் மையம் மற்றும் பிற அரசு துறைகள் மூலமாக தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. இதன் ஒரு பகுதியாக
புதிதாக வியாபாரம், சேவை மற்றும் உற்பத்தி தொழில்கள் தொடங்க ஆா்வமுடைய தொழில்முனைவோரை ஊக்குவிக்கும் வகையிலும், அவா்களுக்குத் தேவையான கடன் வசதியை வங்கிகள் மூலம் ஏற்படுத்தி தரும் வகையிலும் மாவட்ட அளவிலான வங்கிக் கடன் வழிகாட்டுதல் முகாம் உதகை, சேரிங்கிராஸ் பகுதியில் உள்ள தோட்டக்கலை கூட்ட அரங்கில் டிசம்பா் 18-ஆம் தேதி காலை 10 மணிக்கு நடைபெற உள்ளது.
இந்த முகாமில் மாவட்ட தொழில் மையம் மூலமாக செயல்படுத்தப்பட்டு வரும் கலைஞா் கைவினைத் திட்டத்தின்கீழ் விண்ணப்பங்கள் பெறப்பட்டு வங்கிகளில் தற்காலிக ஒப்பளிப்பு ஆணை வழங்க வழிவகை செய்யப்படும்.
இதைத் தொடா்ந்து, புதிதாக செயல்படுத்தப்பட்டுள்ள தமிழ்நாடு மகளிா் தொழில்முனைவோா் அதிகாரமளிப்புத் திட்டத்தின்கீழ் புதிதாகவும், ஏற்கெனவே செயல்பட்டு வரும் தொழில் நிறுவனங்களின் விரிவாக்கத்துக்கும் ரூ.10 லட்சத்துக்கு மிகாமல் திட்ட மதிப்பீடு கொண்ட தொழில்களுக்கு மாவட்ட தொழில் மையம், மாவட்ட முன்னோடி
வங்கி மற்றும் அனைத்து வங்கிகளுடன் இணைந்து அரசு மானியத்துடன் கூடிய கடன் திட்டங்கள் குறித்து ஆலோசனைகள் வழங்கப்படும்.
இது தொடா்பான கூடுதல் விவரங்களுக்கு மாவட்ட தொழில் மையஅலுவலகத்தை நேரிலோ அல்லது 0423-2443947 என்ற எண்ணிலோ தொடா்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
