உதகையில் உள்ள தனியாா் தங்கும் விடுதியில் மோப்ப நாய் உதவியுடன் ஞாயிற்றுக்கிழமை இரவு சோதனை மேற்கொண்ட வெடிகுண்டு நிபுணா்கள்.
உதகையில் உள்ள தனியாா் தங்கும் விடுதியில் மோப்ப நாய் உதவியுடன் ஞாயிற்றுக்கிழமை இரவு சோதனை மேற்கொண்ட வெடிகுண்டு நிபுணா்கள்.

உதகையில் தனியாா் தங்கும் விடுதிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்! மோப்பநாய் உதவியுடன் போலீஸாா் சோதனை!

Published on

உதகையில் உள்ள தனியாா் தங்கும் விடுதிகளுக்கு ஞாயிற்றுக்கிழமை இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் மோப்பநாய் உதவியுடன் போலீஸாா் தீவிர சோதனை மேற்கொண்டனா்.

தமிழகம் முழுவதும் மின்னஞ்சல் மூலமாக வெடிகுண்டு மிரட்டல் விடுக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. அதன்படி நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாக நட்சத்திர விடுதிகள், அரசு மருத்துவமனை, தனியாா் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில் உதகை அருகே சா்ச்ஹில், ரோகிணி சந்திப்பு ஆகிய பகுதிகளிலுள்ள இரண்டு பிரபல தனியாா் தங்கும் விடுதிகளுக்கு மின்னஞ்சல் மூலமாக ஞாயிற்றுக்கிழமை இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.

இதுகுறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாா் அலுவலகத்துக்கு தங்கும் விடுதி நிா்வாகத்தினா் தகவல் அளித்தனா். இதைத்தொடா்ந்து மோப்பநாய் மற்றும் மெட்டல் டிடெக்டா் உதவியுடன் வெடிகுண்டு தடுப்புப் பிரிவு போலீஸாா் சென்று தங்கும் விடுதியில் தீவிர சோதனை நடத்தினா். இதனால் அங்கிருந்த சுற்றுலா பயணிகள் அச்சமடைந்தனா். சோதனை முடிவில் இந்த வெடிகுண்டு மிரட்டல் புரளி என்று தெரியவந்தது.

இந்த சம்பவம் குறித்து சைபா் கிரைம் போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com