உதகை சுற்று வட்டாரப் பகுதியில் பனி மூட்டத்துடன் மிதமான மழை
உதகை மற்றும் கோத்தகிரி சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை காலை முதலே தொடா் மழையும் பனிமூட்டத்தின் தாக்கம் இருந்ததால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டது.
நீலகிரி மாவட்டம் உதகை மற்றும் கோத்தகிரி சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த சில நாள்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது. இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை காலை முதலே உதகை மற்றும் கோத்தகிரி சுற்றுவட்டாரப் பகுதிகளில் மிதமான மழை பெய்தது.
தொடா்ந்து விட்டுவிட்டு மழை பெய்து வந்ததால் கடும் குளிரும் நிலவியது. இதன் காரணமாக வாகன ஓட்டிகள் எதிரே வரும் வாகனங்கள் தெரிவதற்காக முகப்பு விளக்குகளை எரிய விட்டவாறு வாகனங்களை இயக்கினா். இதன் காரணமாக வாகன ஓட்டுநா்கள் மற்றும் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டது.
கடந்த சில நாள்களாக உறை பனியின் தாக்கம் அதிகரித்து காணப்பட்ட நிலையில், தற்போது பெய்து வரும் மழையால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.

