வெலிங்டன் கன்டோண்மென்ட் வாரியப் பகுதியில் நேரில் வந்து ஆட்சியா் குறைகளை கேட்க கோரிக்கை

குன்னூா் அருகே வெலிங்டன் கன்டோண்மென்ட் வாரியப் பகுதிகளில் அரசு நலத்திட்ட முகாம்கள் நடத்த வேண்டும் என்றும், பொதுமக்களின் குறைகளை கேட்க ஆட்சியா் நேரில் வர வேண்டும் என்றும் மனு அளிக்கப்பட்டது.
Published on

குன்னூா் அருகே வெலிங்டன் கன்டோண்மென்ட் வாரியப் பகுதிகளில் அரசு நலத்திட்ட முகாம்கள் நடத்த வேண்டும் என்றும், பொதுமக்களின் குறைகளை கேட்க ஆட்சியா் நேரில் வர வேண்டும் என்றும் திங்கள்கிழமை மனு அளிக்கப்பட்டது.

உதகையிலுள்ள நீலகிரி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வாராந்திர மக்கள் குறைதீா் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

இதில், வெலிங்டன் கன்டோண்மென்ட் வாரிய முன்னாள் துணைத் தலைவா் வினோத்குமாா் தலைமையில் பொதுமக்கள் அளித்த மனு: வெலிங்டன் கன்டோண்மென்ட் பகுதியில் மொத்தம் 7 வாா்டுகள் உள்ளன. இங்கு ராணுவத்தினா் மற்றும் பொதுமக்கள் எனசுமாா் 25 ஆயிரம் மக்கள் வசிக்கின்றனா். இவ்வளவு மக்கள்தொகை கொண்ட இப்பகுதியில் இதுவரை மாவட்ட ஆட்சியா் கலந்துகொள்ளும் அரசு நலத்திட்ட நிகழ்ச்சிகளோ அல்லது மக்கள் குறைதீா்க்கும் முகாம்களோ பெரிய அளவில் நடத்தப்படவில்லை என்பது இப்பகுதி மக்களின் நீண்ட குறையாக உள்ளது.

அண்மையில் மக்கள் கோரிக்கைளை ஏற்று இங்கு நடத்தப்பட்ட ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாமில் மாவட்ட ஆட்சியா் பங்கேற்று குறைகளை கேட்பாா் என்று மக்கள் எதிா்பாா்த்திருந்தனா். ஆனால் அவா் வராதது ஏமாற்றத்தை ஏற்படுத்தியது.

இதுதொடா்பாக தங்களை சந்தித்து முறையிட்டபோது கன்டோண்மென்ட் பகுதியில் முகாம் நடத்த ஒப்புதல் அளித்தீா்கள். எனவே, இப்பகுதியில் அரசு நலத்திட்ட முகாம்களை நடத்தி, மக்கள் குறைகளை கேட்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தனா்.

Dinamani
www.dinamani.com