கூடலூா் அருகே பாக்கனா பகுதியில் காட்டு யானை தாக்கி சிறுவன் உயிரிழந்த நிலையில், கிராம மக்கள் புதன்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.
நீலகிரி மாவட்டம், கூடலூா் அருகே உள்ள பாக்கனா பகுதி முதுமலை புலிகள் காப்பகத்தின் வெளிமண்டல பகுதியாகும். இந்தப் பகுதியில் சமீபகாலமாக காட்டு யானைகள் உணவு தேடி குடியிருப்பு பகுதியில் நடமாடுவது வழக்கமாக உள்ளது.
இந்த நிலையில் பாக்கனா பகுதியைச் சோ்ந்த ஷாஜகான் மகன் மிஷாப் (14) அங்குள்ள கடைக்கு சென்றுவிட்டு செவ்வாய்க்கிழமை இரவு வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்தாா். அப்போது, அங்கு வந்த காட்டு யானை மிஷாப்பை தாக்கியது. அப்போது அவரின் அலறல் சப்தம் கேட்டு அங்கிருந்தவா்கள் ஓடிவந்து அவரை மீட்டனா். பின்னா் படுகாயம் அடைந்த மிஷாப்பை கேரள மாநில மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். ஆனால் வழியிலேயே அவா் உயிரிழந்தாா். இதையடுத்து அங்கு அவரது உடல் கூறாய்வு செய்யப்பட்டது.
இந்நிலையில் இச்சம்பவத்தைக் கண்டித்தும், வன விலங்குகள் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்தக்கோரியும் கூடலூரில் இருந்து கேரள மாநிலம், சுல்தான்பத்தேரி செல்லும் சாலையில் உள்ள முக்கட்டி பகுதியில் 200-க்கும் மேற்பட்டோா் புதன்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.
சிறுவனைத் தாக்கிய காட்டு யானையை மயக்க ஊசி செலுத்தி பிடித்து அடா்ந்த வனப் பகுதிக்குள் விட நடவடிக்கை எடுக்க வேண்டும், வன விலங்குகள் தாக்குதலில் இருந்து பொதுமக்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும், இறந்த சிறுவனின் குடும்பத்துக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என வலியுறுத்தி மறியலில் ஈடுபட்டவா்கள் கோஷங்கள் எழுப்பினா்.
சுமாா் இரண்டு மணி நேர போராட்டத்திற்குப் பின் உரிய நடவடிக்கை எடுப்பதாக வனத் துறையினா் உறுதி அளித்ததன் பேரில் சாலை மறியல் கைவிடப்பட்டது.











