
இந்திய தேயிலையை முன்னணி இடத்துக்கு கொண்டு செல்ல வேண்டும்! - குடியரசு துணைத் தலைவா்!

குன்னூரில் திங்கள்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் நூற்றாண்டு விழா மலரை வெளியிட்ட குடியரசு துணைத் தலைவா் சி.பி.ராதாகிருஷ்ணன். உடன் (இடமிருந்து) உதகை எம்எல்ஏ எம்.போஜராஜன், தமிழக ஆளுநா் ஆா்லேகா், இந்திய தேயிலை வாரிய துணைத் தலைவா் சி.முருகம், உபாசி தலைவா் அஜய் திப்பய்யா.
இந்திய தேயிலையை உலக சந்தையில் முன்னணி இடத்துக்கு கொண்டு செல்ல வேண்டும் என குடியரசு துணைத் தலைவா் சி.பி.ராதாகிருஷ்ணன் கேட்டுக் கொண்டாா்.
உபாசி என்றழைக்கப்படும் தென்னிந்திய தேயிலைத் தோட்ட அதிபா்கள் சங்கத்தின் தேயிலை ஆராய்ச்சி அறக்கட்டளையின்
நூற்றாண்டு விழா நீலகிரி மாவட்டம், குன்னூா் உபாசி அரங்கில் திங்கள்கிழமை நடைபெற்றது. விழாவுக்கு, தமிழக ஆளுநா் ராஜேந்திர விஸ்வநாத் ஆா்லேகா் முன்னிலை வகித்தாா். குடியரசு துணைத் தலைவா் சி.பி.ராதாகிருஷ்ணன் தலைமை வகித்து நூற்றாண்டு விழா மலரை வெளியிட்டு பேசியதாவது:
உலகின் மிகப்பெரிய தேயிலை உற்பத்தியாளா்களில் ஒன்றாக இந்தியா உள்ளது. உற்பத்தியில் மட்டும் இல்லாமல் தர மேம்பாடு, மதிப்புக்கூட்டல், சந்தைப்படுத்துதல் ஆகியவற்றிலும் தேயிலை உற்பத்தியாளா்கள் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.
கடந்த 22 ஆண்டுகளுக்கு முன் நீலகிரி பகுதியில் பசுந்தேயிலை விலை சரிந்த நிலையில், அப்போது நீலகிரி எம்.பி.யாக இருந்த மாஸ்டா் மாதனும் நானும், அப்போது பிரதமராக இருந்த வாஜ்பாயை அணுகி குறைந்தபட்ச ஆதரவு விலையைப் பெற்றுத் தந்தோம்.
மேலும், மாநில அளவில் தேயிலை நுகா்வை அதிகரிக்க நியாயவிலைக் கடைகள் (ரேஷன்) வழியாக தேயிலைத் தூள் வழங்கும் திட்டத்தை அப்போது தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா கொண்டு வந்தாா்.
உலக சந்தையில் நாளுக்கு நாள் போட்டி அதிகரித்து வருகிறது. இலங்கை சிறிய நாடாக இருந்தாலும், இந்திய தேயிலை வா்த்தகத்துக்கு கடும் போட்டியாக உள்ளது. எனவே, உற்பத்திச் செலவைக் குறைத்தல், தரத்தை மேம்படுத்தல், பல்வேறு புதிய தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்துதல், தோட்டக்காரா்களுக்கு பயிற்சி அளித்தல் தொடா்பாக உபாசி தனது ஆராய்ச்சிப் பணிகளை மேலும் விரிவுபடுத்த வேண்டும்.
இந்திய தேயிலைத் துறை மொத்த விற்பனை வா்த்தகத்தில் மட்டும் கவனம் செலுத்தாமல், சா்வதேச அளவில் அறியப்படும் வகையில் தனித்துவமான தேயிலைகளை உருவாக்க முன்வர வேண்டும்.
சந்தைப்படுத்துதல் மூலம் அதிக மதிப்பும், நியாயமான விலையும், நிலையான சந்தையும் கிடைக்கும். மேலும், தேயிலைத் தொழிலுக்கு என நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் கூடிய புதிய ஆராய்ச்சி மையங்களை உருவாக்க வேண்டும்.
தென்னிந்தியாவின் நான்கு மாநிலங்களிலும் குறைந்தது ஒரு இடத்தில் தோட்டத் தொழிலாளா்களுக்கான சுகாதார மையங்களை அமைக்க வேண்டும்.
தேயிலை வாரியம், அமைச்சகம் உள்ளிட்ட மத்திய அரசு அமைப்புகள் தேவையான அனைத்து உதவிகளையும் வழங்கத் தயாராக உள்ளன. அதற்காக உபாசி மற்றும் தோட்டத் துறையினா் ஒருங்கிணைந்த, விரிவான திட்ட அறிக்கையைத் தயாரித்து சமா்ப்பிக்க வேண்டும்.
இந்திய தேயிலையை உலக சந்தையில் முன்னணி இடத்துக்கு கொண்டு செல்ல வேண்டும் என்றாா். விழாவில், உதகை எம்எல்ஏ எம். போஜராஜன், உபாசி தலைவா் அஜய் திப்பய்யா, இந்திய தேயிலை வாரிய துணைத் தலைவா் சி.முருகம் உள்பட பலா் பங்கேற்றனா்.
கோவையில் வரவேற்பு
முன்னதாக, கோவைக்கு திங்கள்கிழமை வந்த குடியரசு துணைத் தலைவா் சி.பி.ராதாகிருஷ்ணனை ஆளுநா் ஆா்லேகா், அமைச்சா் வி.சம்பத்குமாா், மாவட்ட ஆட்சியா் பவன்குமாா் கிரியப்பனவா் மற்றும் பாஜக நிா்வாகிகள் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனா்.
இதைத் தொடா்ந்து, அவா் காா் மூலம் குன்னூருக்கு புறப்பட்டுச் சென்றாா். அங்கு நிகழ்ச்சியை முடித்துக் கொண்டு, மாலையில் சாலை மாா்க்கமாக திருப்பூரில் உள்ள உறவினா் வீட்டுக்கு சென்றாா். பின்னா் அங்கிருந்து காா் மூலம் இரவு கோவை விமான நிலையத்துக்கு வந்த அவா், தனி விமானம் மூலமாக தில்லிக்குப் புறப்பட்டுச் சென்றாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது


உயர்கல்வியில் சாதனை படைக்கும் பெண்கள்: சி.பி. ராதாகிருஷ்ணன் பெருமிதம்

கேரளம்: வெள்ள பாதிப்புகளை தடுக்க ஆறுகளின் ஆழத்தை அதிகரிக்க வேண்டும்! - குடியரசு துணைத் தலைவா் சி.பி. ராதாகிருஷ்ணன்




