மக்களிடம் அதிகரித்துள்ள டெபிட், கிரெடிட் கார்டு பயன்பாடு: பிஓஎஸ் இயந்திரங்களுக்கான தேவை அதிகரிப்பு
திருப்பூரில் பொதுமக்களிடம் பற்று அட்டை (டெபிட் கார்டு), கடன் அட்டை (கிரெடிட் கார்டு) பயன்பாடு அதிகரித்து வருவதன் காரணமாக, பாயிண்ட்


திருப்பூரில் பொதுமக்களிடம் பற்று அட்டை (டெபிட் கார்டு), கடன் அட்டை (கிரெடிட் கார்டு) பயன்பாடு அதிகரித்து வருவதன் காரணமாக, பாயிண்ட் ஆஃப் சேல் (பிஓஎஸ்) இயந்திரங்களுக்கான தேவையும் கடந்த சில தினங்களில் அதிகரித்துள்ளது.
கருப்பு பண ஒழிப்பு நடவடிக்கையாக நாட்டில் புழக்கத்தில் இருந்த 500,1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என மத்திய அரசு கடந்த மாதம் 8-ஆம் தேதி அறிவித்தது. அரசின் இந்த நடவடிக்கை பெரும்பான்மை மக்களிடம் வரவேற்பை பெற்றாலும், உடனடியாக அனைவரது கைகளுக்கும் புதிய ரூபாய் நோட்டுகள் கிடைக்காத காரணத்தாலும் பணப் பற்றாக்குறை காரணமாகவும் பல்வேறு விமர்சனங்களுக்கு உள்ளாகி வருகிறது.
இந்நிலையில், இப்பிரச்னைக்குத் தீர்வு காண மத்திய அரசு அடுத்தகட்ட நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ஒருபகுதியாக ரொக்கப் பரிவர்த்தனைகளை குறைத்துக் கொண்டு, பற்று அட்டை (டெபிட் கார்டு), கடன் அட்டை (கிரெடிட் கார்டு) பயன்பாடு, செல்லிடப்பேசி செயலிகள், மின் பணப்பை (இ-வாலட்) போன்ற மின்னணு பரிவர்த்தனைகளுக்கு பொதுமக்கள் மாற வேண்டும் என்று மத்திய அரசு தெரிவித்து வருகிறது.
இந்நிலையில், பின்னலாடை ஏற்றுமதி நகரமான திருப்பூரில், தொழில் துறையினர் முதல் தொழிலாளர்கள் வரை அனைத்துத் தரப்பு மக்களிடத்திலும் டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு பயன்படுத்தும் பழக்கம் அதிகரித்து வருகிறது.
மத்திய அரசின் ரூபாய் நோட்டுகள் மதிப்பு நீக்க நடவடிக்கைக்கு முழு ஆதரவு தெரிவித்த இந்நகரம், பணப் பற்றாக்குறையால் பாதிப்புக்கு உள்ளாகி வருவது இப்போது வரை தொடர்கிறது. மாவட்டத்தின் புறநகர் பகுதிகளில் வங்கிகள், ஏடிஎம் மையங்களில் மக்கள் கூட்டம் குறைந்தாலும், நகரில் வங்கிகள், ஏடிஎம் மையங்களில் பணம் எடுக்க குவியும் மக்கள் கூட்டம் இன்னும் குறையவில்லை. இப்பிரச்னையிலிருந்து மீளவும், தொழிலாளர்களின் கைகளுக்கு அத்தியாவசிய பொருள்கள் கிடைக்கவும் தொழில் துறையினர் தரப்பு, வங்கிக் கணக்குகள் தொடங்கி அவை மூலமாக ஊதியங்களை வழங்குவது போன்ற பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.
இவற்றுக்கிடையில், தொழிலாளர்கள் உள்பட மாவட்டத்தில் உள்ள மக்களிடம் சமீப நாள்களில் கிரெடிட், டெபிட் கார்டு பயன்பாடு அதிகரித்துள்ளது தெரியவந்துள்ளது. மக்களிடம் கிரெடிட், டெபிட் கார்டு பயன்பாடு அதிகரித்துள்ள காரணத்தால், அவற்றைப் பயன்படுத்த தேவையான பாயின்ட் ஆஃப் சேல் (பிஓஎஸ்) இயந்திரங்களுக்கான தேவைகளும் அதிகரித்துள்ளன.
திருப்பூர் மாவட்டத்தை பொருத்தவரை கடந்த ஒரு வாரத்தில் மட்டும் பிஓஎஸ் இயந்திரங்களுக்கான டிமாண்ட் 3,000 என்பதே வங்கியாளர்கள் அளித்துள்ள தகவல். இதில் சிறு வியாபாரிகள் முதல் பெரு விற்பனை நிறுவனங்கள் வரை தங்களுக்கான பிஓஎஸ் இயந்திரங்களுக்காக முன்பதிவு செய்துள்ளனர். பணப் பற்றாக்குறையை சமாளிக்க மக்களிடம் கிரெடிட், டெபிட் கார்டு பயன்பாடு அதிகரித்துள்ளதன் காரணமாகவே இந்த தேவை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கிறார் மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் எஸ்.சுந்தரமூர்த்தி.
இதுகுறித்து அவர் கூறுகையில், வங்கிகளில் ஏற்கெனவே இருந்த பிஓஎஸ் இயந்திரங்கள் குறிப்பிட்ட மாதக் கட்டணத்தில் வழங்கப்பட்டுள்ளன. தற்போது புதிய இயந்திரங்கள் வருகைக்காக காத்திருக்க வேண்டியுள்ளது. இப்போது 3,000 இயந்திரங்களுக்கான டிமாண்ட் உள்ளது. மக்களிடம் கிரெடிட், டெபிட் கார்டு பயன்பாடு அதிகரித்துள்ளதே இந்தத் தேவைக்கு காரணம். ஒரு மாத காலத்துக்குள் தேவைப்படுவோருக்கு பிஓஎஸ் இயந்திரங்கள் வங்கிகள் மூலமாக வழங்கப்பட்டு விடும். நாளடைவில் மாதப் பயன்பாட்டு கட்டணமாக வசூலிக்கப்படும் தொகையும் தளர்த்தப்பட வாய்ப்புள்ளது என்றார்.
சில்லறை தட்டுப்பாடு நீங்கும்
புதிய ரூ.2000 நோட்டுகள் பரவலாக கிடைத்தும் சில்லறைத் தட்டுப்பாடு நிலவி வந்தது. இந்நிலையில், கடந்த வாரமே திருப்பூருக்கு புதிய ரூ. 500 நோட்டுகள் வரப்பெற்றன. திருப்பூருக்கு வந்த ரூ. 2 கோடி மதிப்புள்ள புதிய ரூ. 500 நோட்டுகள் அனைத்து வங்கிகளுக்கும் பிரித்து அனுப்பப்பட்டு, பொதுமக்களுக்கு கிடைக்க வங்கிகள் மூலமாக நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இந்நிலையில், வரும் திங்கள்கிழமைக்குப் பிறகு திருப்பூருக்கு அடுத்த கட்டமாக புதிய ரூ. 500 நோட்டுகள் வரவுள்ளன. மக்களின் கைகளில் அவை விரைவாக கிடைக்கும்போது, சில்லறைத் தட்டுப்பாடுக்கும் பணப் பற்றாக்குறைக்கும் ஓரளவு தீர்வு கிடைக்கும், என்று வங்கியாளர்கள் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...