இந்நாள் முன்னாள் அமைச்சரா - முந்துவது யார்?
திருப்பூர் வடக்கு சட்டப் பேரவைத் தொகுதி மறுசீரமைப்புக்குப் பிறகு 2011-இல் உருவாக்கப்பட்டது. திருப்பூர் மாநகராட்சியின் 60 வார்டுகளில் 29 வார்டுகளையும்,


திருப்பூர் வடக்கு சட்டப் பேரவைத் தொகுதி மறுசீரமைப்புக்குப் பிறகு 2011-இல் உருவாக்கப்பட்டது. திருப்பூர் மாநகராட்சியின் 60 வார்டுகளில் 29 வார்டுகளையும், 10 ஊராட்சிப் பகுதிகளையும் உள்ளடக்கியது இந்தத் தொகுதி. தொகுதியில் அதிகபட்சமாக 40 சதவீதம் வரை கொங்கு வேளாள கவுண்டர்கள் வசித்து வருகின்றனர். அவர்களுக்கு அடுத்து 20 சதவீதம் வரை தாழ்த்தப்பட்டவர்கள் உள்ளனர். அடுத்து செட்டியார் மற்றும் முதலியார் சமூகத்தினர் குறிப்பிட்ட சதவீதத்தில் உள்ளனர்.
இதில் தொகுதி சார்ந்த தொழிலான பின்னலாடை உற்பத்தியிலும், பாத்திர உற்பத்தியிலும் ஈடுபடும் தொழிலாளர் சமூகம் பெரும் அளவில் உள்ளது. ஆனால், அவர்களில் பெரும்பான்மையினர் வெளிமாவட்டத்தினர். இதனால் தொகுதியில் வெற்றியைத் தீர்மானிக்கும் சமூகங்களாக கொங்கு வேளாள கவுண்டர்களும், தாழ்த்தப்பட்டோருமே உள்ளனர்.
களத்தில் யார், யார்?
திருப்பூர் வடக்குத் தொகுதியில் அதிமுக சார்பில் முன்னாள் ஒன்றியச் செயலாளர் கே.என்.விஜயகுமார் நிறுத்தப்பட்டுள்ளார். திமுக சார்பில் முன்னாள் அமைச்சர் மு.பெ.சாமிநாதன் வேட்பாளராக களம் கண்டுள்ளார். தேமுதிக, தமாகா - மக்கள் நலக் கூட்டணி சார்பில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் ரவி (எ) சுப்பிரமணியம், பாஜக சார்பில் மாவட்டச் செயலாளர் சின்னசாமி மற்றும் பிற கட்சிகளைச் சேர்ந்த வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.
கள நிலவரம்:
தமிழக சட்டப் பேரவைத் தொகுதிகளில் அதிமுகவினர் தங்களது கோட்டை என்று மார்தட்டிக் கொள்ளும் பகுதிகளில் திருப்பூர் வடக்கு சட்டப் பேரவைத் தொகுதியும் ஒன்று. இதை அதிமுகவுக்குப் போட்டியாக கருதப்படும் திமுகவினரே ஒப்புக்கொள்ளும் சூழல்தான் இங்குள்ளது.
இத் தொகுதியில் போட்டியிடும் திமுக முன்னாள் அமைச்சர் மு.பெ.சாமிநாதன் இரு தினங்களுக்கு முன் இதை வெளிப்படையாகத் தெரிவித்தார். அவர் தனது பேச்சில், அதிமுகவின் கோட்டை வரும் தேர்தலில் தகர்க்கப்படும் என்று கூறி அதிமுகவினரின் கூற்றை உறுதி செய்தார்.
மு.பெ.சாமிநாதன் (திமுக):
தொகுதியில் திமுக சார்பில் நிறுத்தப்பட்டுள்ள மு.பெ.சாமிநாதன் திருப்பூருக்கு புதியவர் அல்ல. 1996-இல் இருந்து, 2001, 2006 தேர்தல் வரை தொடர்ச்சியாக வெள்ளக்கோவில் தொகுதியில் வெற்றி பெற்றவர். கடந்த திமுக ஆட்சியில் நெடுஞ்சாலைத் துறை அமைச்சராக இருந்தவர். 2011-ஆம் ஆண்டு தேர்தலில் தொகுதி சீரமைப்பு காரணமாக, மடத்துக்குளத்தில் போட்டியிட்டு தோல்வியடைந்தார்.
இந்நிலையில், திருப்பூர் தெற்குத் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு கேட்டவருக்கு, திருப்பூர் வடக்கு மாவட்டச் செயலாளர் க.செல்வராஜ் மேயராக மட்டுமே திருப்பூரில் அறியப்பட்டவர் என்பதால், மாநகராட்சிப் பகுதிகளை மட்டுமே 90 சதவீதம் கொண்ட திருப்பூர் தெற்குத் தொகுதியில் அவருக்கு வாய்ப்பளித்து, அமைச்சராக இருந்த காரணத்தால் திருப்பூரில் நன்கு அறியப்பட்டிருப்பார் என்ற கோணத்தில் வடக்குத் தொகுதியில் போட்டியிட சாமிநாதனுக்கு திமுக தலைமை வாய்ப்பளித்தது. அவர்களைப் பொருத்தவரை சாமிநாதன் பலமான வேட்பாளர் என்பதே திமுகவின் கணக்கு.
கே.என்.விஜயகுமார் (அதிமுக):
வடக்குத் தொகுதி தமிழக வனத் துறை அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தனின் சொந்தத் தொகுதி. கடந்த தேர்தலில் தமிழகத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுகவுக்கு வெற்றியைப் பெற்றுக் கொடுத்த தொகுதி. ஆனால், அதிமுக தலைமையோ ஆனந்தனுக்கு பதிலாக கே.என்.விஜயகுமாருக்கு வாய்ப்பை வழங்கியது.
அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தனுக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை என்றாலும், திருப்பூர் மாநகர் மாவட்டச் செயலாளர் பொறுப்பில் உள்ளார். திருப்பூர் மாநகர் மாவட்டத்துக்கு உள்பட்ட திருப்பூர் வடக்கு, தெற்கு, அவிநாசி, பல்லடம் ஆகிய தொகுதிகளின் வெற்றிப் பொறுப்பை ஆனந்தன் வசம் கட்சித் தலைமை ஒப்படைத்துள்ளது. இதனால், நான்கு தொகுதிகளுக்கான தேர்தல் பணிகள் அமைச்சர் தலைமையில் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதில், தனது சொந்தத் தொகுதியான திருப்பூர் வடக்குத் தொகுதியில் எம்.எஸ்.எம்.ஆனந்தன் சிறப்பு கவனம் செலுத்தி வருகிறார்.
ரவி (எ) சுப்பிரமணியம் (இந்திய கம்யூனிஸ்ட்):
தேமுதிக, தமாகா - மக்கள் நலக் கூட்டணி சார்பில் நிறுத்தப்பட்டுள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் ரவி (எ) சுப்பிரமணியத்துக்கு தேமுதிகவின் வாக்குகள் பயன்படலாம். காரணம், கடந்த தேர்தலில் அதிமுக - தேமுதிக கூட்டணி அமைத்துப் போட்டியிட்டு வடக்குத் தொகுதியில் மாநிலத்தில் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது. தவிர, தொழிலாளர்கள், தொழிற்சங்கத்தினர் வாக்குகள், கூட்டணிக் கட்சிகளுக்கு உள்ள சிறிய வாக்கு வங்கி இவருக்கு சாதகமானவை.
சின்னசாமி (பாஜக):
இவர் திருப்பூர் மாநகர் மாவட்ட பாஜக செயலாளராக உள்ளார். பின்னலாடைத் தொழில் துறையினருக்கு நன்கு அறிமுகம் ஆனவர். மேலும், திருப்பூரில் உள்ள இந்து அமைப்புகளின் ஆதரவு இவருக்கு உண்டு. இவருக்காக இந்து அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் செய்து வரும் தேர்தல் பணி சாதகமான விஷயங்களாக உள்ளன.
சுப்பிரமணியம் (பாமக):
இவர், திருப்பூர் நகர துணைச் செயலாளராக உள்ளார். திருப்பூரில் பாமகவுக்கு பெரிய வாக்கு வங்கி இல்லை என்றாலும், தருமபுரி உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து வேலைக்காக வந்து நிரந்தரமாகத் தங்கியவர்கள் பலர் இத்தொகுதியில் உள்ளனர். அவர்களது வாக்கு மற்றும் பாமகவுக்கு ஆதரவு தெரிவித்துள்ள வியாபாரிகள் உள்ளிட்டோர் சார்ந்த வாக்குகள் இவருக்கு சாதகமாக அமையலாம்.
இதுவரை:
2011 தொகுதி சீரமைப்புக்கு முன் ஒருங்கிணைந்த தொகுதியாக திருப்பூர் இருந்தபோது, 1951-இல் இத்தொகுதியிலிருந்து இரு காங்கிரஸ் உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டனர். அதற்கு பிறகு இரு தேர்தல்களில் காங்கிரஸ் வெற்றி பெற்றது. ஆனால், 1967, 1971 தேர்தலில் பெற்ற வெற்றிக்குப் பிறகு திருப்பூரில் இதுவரை திமுக வெற்றி பெறவில்லை. அதற்குப் பிறகு தேர்தல்களில் அதிமுக நான்கு முறையும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி இரு முறையும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இருமுறையும் வெற்றி பெற்றுள்ளன. தொகுதி சீரமைப்புக்குப் பிறகு 2011 தேர்தலில் திருப்பூர் வடக்கு, தெற்கு என இரு தொகுதிகள் உருவாக்கப்பட்டு, தெற்கில் அதிமுக கூட்டணியில் போட்டியிட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும், வடக்கில் அதிமுகவும் வெற்றி பெற்றன.
வாய்ப்பு யாருக்கு?
திருப்பூர் வடக்குத் தொகுதி அதிமுகவின் கோட்டையாக இருந்தாலும், புதிய வாக்காளர்கள் வரவு, வாக்காளர்களுக்கு கட்சிகள் மீதுள்ள விருப்பு, வெறுப்புகள் சில நேரங்களில் மாறுபட்ட தேர்தல் முடிவுகளை அளிக்கும் வல்லமை கொண்டவை. தொகுதியில் தேர்தல் ஓட்டத்தில் அதிமுக, திமுக முதலிரண்டு இடங்களிலும் அடுத்தடுத்த இடங்களில் தேமுதிக, தமாகா - மக்கள் நலக் கூட்டணி வேட்பாளர் மற்றும் பிற கட்சி வேட்பாளர்கள் ஓடிக் கொண்டிருந்தாலும், இறுதியில் யார் வெற்றிக்கான இலக்கை எட்டிப் பிடிக்கின்றனர் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
- பெ.ஸ்ரீனிவாசன்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...