ஏ.இ.பி.சி. தேர்தலால் கேள்விக்குறியாகும் ஏற்றுமதியாளர்கள் ஒற்றுமை!
திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கத் தேர்தலில் கருத்தொற்றுமை ஏற்பட்ட நிலையில், ஏற்றுமதியாளர்களிடையே உருவான ஒற்றுமை ஆடை ஏற்றுமதி...


திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கத் தேர்தலில் கருத்தொற்றுமை ஏற்பட்ட நிலையில், ஏற்றுமதியாளர்களிடையே உருவான ஒற்றுமை ஆடை ஏற்றுமதி மேம்பாட்டுக் கூட்டமைப்பின் (ஏ.இ.பி.சி) செயற்குழு பதவிக்கான தேர்தல் மூலமாக கேள்விக்குறியாகிவிட்டது.
திருப்பூர் பின்னலாடை ஏற்றுமதி வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கம் (டீ)
1990-இல் உருவாக்கப்பட்டது. இந்தச் சங்கத்தில் தற்போது 951 நிரந்தர உறுப்பினர்கள், 155 இணை உறுப்பினர்கள் உள்ளனர். தலைவர், இரு துணைத் தலைவர்கள், செயலாளர், இரு இணைச் செயலாளர்கள், பொருளாளர் என ஏழு நிர்வாகப் பதவிகள் மற்றும் 20 செயற்குழு உறுப்பினர்கள் என மொத்தம் 27 பதவிகள் இச்சங்கத்தில் உள்ளன.
சங்கத்துக்கு மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்தல் நடத்தப்பட்டு வருகிறது. முன்னதாக, 2013-இல் தேர்தல் நடைபெற்றது. இச்சங்கத்தின் தலைவராக ஏ.சக்திவேல் தொடர்ந்து 27 ஆண்டுகளாகப் பதவி வகித்துவந்துள்ளார். அவரது பதவிக் காலம் கடந்த வாரம் நிறைவுபெற்றது.
இந்நிலையில், புதிய நிர்வாகிகள் தேர்தல் செப்டம்பர் 27-ஆம் தேதி நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டது. இத்தேர்தலில் போட்டியிடும் ராஜா எம்.சண்முகம் தரப்பினருக்கும், கே.எம்.சுப்ரமணியம் தரப்பினருக்கும் இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தையில், தேர்தலில் போட்டியைத் தவிர்க்கவும் சுமுகமான முறையில் புதிய நிர்வாகிகளைப் பதவி அமர்த்தவும் முடிவு செய்யப்பட்டது.
அதன்படி, ராஜா எம்.சண்முகம் தலைமையிலான அணிக்குத் தலைவர், செயலாளர், பொருளாளர், மற்றும் துணைத் தலைவர் ஆகிய நான்கு நிர்வாகப் பதவிகள் மற்றும் 11 செயற்குழு உறுப்பினர் பொறுப்புகளும், கே.எம்.சுப்ரமணியம் அணியினருக்கு துணைத் தலைவர், இணைச் செயலாளர்கள் என மூன்று நிர்வாகப் பதவிகள் மற்றும் 9 செயற்குழு உறுப்பினர் பொறுப்புகளும் வழங்குவதாக முடிவு செய்யப்பட்டுள்ளதாகத் தெரியவந்துள்ளது.
இத்தகைய ஒருங்கிணைந்த செயல்பாடே தொழில் துறையினருக்கு நன்மை பயக்கும் என அனைவரும் கருதி வந்தநிலையில், ஆடை ஏற்றுமதி மேம்பாட்டுக் கூட்டமைப்பின் (ஏ.இ.பி.சி) தெற்கு பிராந்தியத்துக்கான 3 செயற்குழு உறுப்பினர்கள் பதவிக்கான தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இத்தேர்தல் தற்போது ஏற்றுமதியாளர்களிடையே ஏற்பட்ட ஒற்றுமையைக் கேள்விக்குறியாக்கிவிட்டது.
ஏஇபிசிக்கு மொத்தமுள்ள 28 செயற்குழு உறுப்பினர்களில் திருப்பூர், சென்னை, பெங்களூரு ஆகிய மூன்று நகரங்களுக்கு மூன்று செயற்குழு உறுப்பினர்கள் பதவி வழங்கப்பட்டுள்ளது.
ஆடை ஏற்றுமதி மேம்பாட்டுக் கூட்டமைப்பு மூலமாக (ஏ.இ.பி.சி) ஏற்றுமதியாளர் உறுப்பினர் என தரம் உயர்த்தப்பட்டவர்கள் மட்டுமே ஏ.இ.பி.சி. தேர்தலில் வாக்களிக்க முடியும். எனவே, திருப்பூர், சென்னை, பெங்களூரூவைச் சேர்ந்த 265 ஏற்றுமதியாளர்கள் மட்டுமே வாக்களிக்க முடியும். இதில், திருப்பூரில் மட்டும் 191 பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றவர்களாக உள்ளனர். இதனால், அந்த மூன்று பதவிகளையும் தேர்வு செய்யும் சக்தியாக திருப்பூர் உள்ளது.
இந்நிலையில், இந்த மூன்று பதவிகளுக்கும் ராஜா எம்.சண்முகம் தரப்பில் வேட்பாளர்களைத் தனியாக நிறுத்த திட்டமிடப்பட்டுள்ளது. அதேசமயம், கே.எம்.சுப்ரமணியம் தரப்பினரோ, திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கத் தேர்தலில் ஏற்பட்ட சுமுகத் தீர்வு மற்றும் ஒற்றுமையைப் போலவே, ஏ.இ.பி.சி. செயற்குழு உறுப்பினர் பதவிகளை இரண்டுக்கு ஒன்று என்ற விகிதத்தில் பகிர்ந்து, போட்டியைத் தவிர்க்க வேண்டும் என விரும்புகின்றனர். ஆனால், இதை ராஜா எம்.சண்முகம் தரப்பினர் ஏற்கவில்லை. மாறாக, தேர்தல் மூலமாகவே ஏ.இ.பி.சி.யின் மூன்று பதவிகளுக்குமான நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட வேண்டும் என்று தெரிவிக்கின்றனர்.
மனுவைத் திரும்பப் பெற முடிவு - இது தொடர்பாக ஏற்றுமதியாளர் கே.எம்.சுப்ரமணியம் செய்தியாளர்களிடம் திங்கள்கிழமை கூறியதாவது:
அனைவரது ஒற்றுமை மட்டுமே வளர்ச்சிக்கு வழிவகுக்கும் என்பதால் "டீ' சங்கத் தேர்தலில் சுமுகமான முறையில் நிர்வாகிகளைத் தேர்வு செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. இதில் ஏற்பட்ட ஒற்றுமையே ஏ.இ.பி.சி. தேர்தலிலும் இருக்க வேண்டும் என்று விரும்புகிறோம். இதை, அவர்கள் ஏற்கவில்லை என்றால், டீ சங்கத் தேர்தலில் இருந்து நாங்கள் மனுவைத் திரும்பப் பெற வேண்டிய நிலை ஏற்படும் என்றார்.
தேர்தலில் இருந்து வாபஸ் பெறும் இந்த முடிவு மீண்டும் தொழில் துறையினர் மத்தியில் பிரிவினையை ஏற்படுத்தும் என்றும், ஒட்டுமொத்த வளர்ச்சியைப் பாதிக்கும் விஷயமாகவே இருக்கும் எனவும் கருதப்படுகிறது.
இதுகுறித்து டீ சங்கத் தேர்தலில் செயலாளர் பதவிக்கு மனு தாக்கல் செய்துள்ளவரும், ஏ.இ.பி.சி. நிர்வாகக் குழு உறுப்பினர் தேர்தலில் போட்டியிட இருப்பவருமான டி.ஆர்.விஜயகுமாரிடம் கேட்டபோது, தேர்தல் மூலமாகவே ஏ.இ.பி.சி. செயற்குழு உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட வேண்டும் என்பதே எங்கள் முடிவு என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...