தரம் உயர்த்தப்பட்டும் மக்களுக்கு பயன்படாத அரசு மருத்துவமனை: சிகிச்சைக்கு அலைக்கழிக்கப்படும் மக்கள்

ஊத்துக்குளியில் அரசு மருத்துவமனைக்கு 54 படுக்கை வசதிகளுடன் ரூ. 60 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட புதிய கட்டடம் கடந்த இரு

ஊத்துக்குளியில் அரசு மருத்துவமனைக்கு 54 படுக்கை வசதிகளுடன் ரூ. 60 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட புதிய கட்டடம் கடந்த இரு ஆண்டுகளாக திறக்கப்படாமல் இருப்பதால் நோயாளிகள் பெரும் சிரமத்துக்கு ஆளாகி வருவாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
திருப்பூர் மாவட்டம்,  ஊத்துக்குளி பகுதி விவசாயம்,  விசைத்தறி,  பின்னலாடைத் தொழில் நிறுவனங்களை பிரதானமாகக் கொண்டுள்ளது. மக்கள் தொகை பெருக்கம் மற்றும் வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு மாவட்டத்தின் 9-ஆவது தாலுகாவாக ஊத்துக்குளி கடந்த இரு ஆண்டுகளுக்கு முன் அறிவிக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து, பொது மக்களின் கோரிக்கைக்கு ஏற்ப ஊத்துக்குளியில் இருந்த ஆரம்ப சுகாதார நிலையமானது அரசு மருத்துவமனையாக தரம் உயர்த்தப்பட்டது. அதோடு,  ஊத்துக்குளி மக்களின் மருத்துவத் தேவைகளைக் கருத்தில் கொண்டு, அரசு மருத்துவமனைக்கு 54 படுக்கை வசதிகளுடன் கூடிய புதிய கட்டடம் கட்டப்படும் என்றும் அரசு தெரிவித்தது.
அரசு அறிவிப்புக்கு ஏற்ப, புதிய கட்டடம் கட்டும் பணி 2015-ஆம் ஆண்டு பொதுப் பணித் துறையால் தொடங்கப்பட்டது. பணிகள் தொடங்கி வேகமாக நடைபெற்று வந்த நிலையில்,  2016-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் பணிகள் நடைபெறவில்லை. 80 சதவீத பணிகள் முடிக்கப்பட்டுள்ள நிலையில் மேற்கொண்டு பணிகள் தொடராதது குறித்து கேட்டால் அதிகாரிகள் பதில் அளிக்க மறுப்பதாக பொது மக்கள் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.
இதுகுறித்து ஊத்துக்குளி பகுதி மக்கள் கூறியதாவது:
ஊத்துக்குளி வட்டத்தில் தற்போது மக்கள் தொகை ஒரு லட்சம் வரை வந்து விட்டது. பேரூராட்சி மற்றும் 20 கிராம ஊராட்சிகள் உள்ளன. அவற்றை சார்ந்து பல கிராமங்கள் உள்ளன. அனைத்து மக்களுக்கும் ஊத்துக்குளி அரசு மருத்துவமனை பிரதான மருத்துவ மையமாக உள்ளது.
நாள்தோறும் சுமார் 600 பேர் வரை சிகிச்சைக்கு வந்து செல்கின்றனர். இந்த எண்ணிக்கை அவ்வப்போது அதிகரித்து வருகிறது. ஆனால் அரசு மருத்துவமனையோ இன்னும் பழைய நிலையிலேயே உள்ளது. 7 மருத்துவர்கள் இருக்க வேண்டிய இடத்தில் வெறும் 4 பேர் மட்டுமே உள்ளனர். தொற்று நோய்கள் பரவி வரும் நிலையில் 12 பேர் மட்டுமே தங்கி சிகிச்சை பெறும் வசதி உள்ளது. மற்றவர்கள் அனைவரும் திருப்பூருக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர். இதனால் சிகிச்சை பெற நோயாளிகள் சிரமப்பட வேண்டியுள்ளது. 24 மணி நேரமும் மருத்துவர் நியமனம் செய்யாததால்,  இரவு நேரத்தில் நோயாளிகள் சென்றால் சிரமம் ஏற்படுகிறது. அரசு மருத்துவமனைக்கென ரூ. 60 லட்சம் செலவில் கட்டப்பட்ட கட்டடம் திறக்கப்படாமல் உள்ளது. அதிகாரிகளிடம் முறையிட்டாலும் உரிய பதில் அளிப்பதில்லை என்றனர்.
ஊத்துக்குளி பேரூராட்சி முன்னாள் தலைவர் ஆர்.குமார் கூறுகையில், செங்கப்பள்ளி,  பல்லகவுண்டம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் தேசிய நெடுஞ்சாலையில் அதிக விபத்துகள் ஏற்படுகின்றன. விபத்துகளில் காயமடைந்தவர்களை ஊத்துக்குளி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றால், அவர்கள் திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கின்றனர். இதனால் பலருக்கு உரிய நேரத்தில் சிகிச்சை கிடைக்காமல் போகும் நிலை உள்ளது. ஊத்துக்குளி அரசு மருத்துவமனையில் ஆய்வக வசதியோ,  பிரசவ சிகிச்சை வசதியோ எதுவும் இல்லை. அனைத்து தேவைகளுக்கும் திருப்பூர் அரசு மருத்துவமனையை சார்ந்திருக்க வேண்டியுள்ளது.
போராட்டங்கள் நடத்தி அதிகாரிகளிடம் பல முறை முறையிட்டும், மனுக்கள் கொடுத்தும் அரசு மருத்துவமனைக்கான கட்டடத்தை திறக்க நடவடிக்கை எடுக்கப்படவில்லை.  மருத்துவமனை கட்டடத்தில் சில வேலைகள் மட்டுமே பாக்கி உள்ளன. மாவட்ட நிர்வாகம் தலையிட்டு,  உடனடியாக பணிகளை முடித்து, மருத்துவமனைக் கட்டடத்தை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
இதுகுறித்து மாவட்ட சுகாதாரத் துறை அதிகாரிகளிடம் கேட்டபோது,  பொதுப் பணித் துறை சார்பில் மேற்கொள்ள வேண்டிய சில பணிகளை முடிக்க காலதாமதம் செய்யப்பட்டு வருகிறது. பணிகளை விரைந்து முடித்துக் கொடுக்க பொதுப் பணித் துறைக்கு கடிதம் அனுப்பியுள்ளோம். விரைவாக முடித்துக் கொடுக்க அவர்களும் உறுதியளித்துள்ளனர். சில நாள்களில் பணிகளை முடித்தவுடன், மருத்துவமனை முழு செயல்பாட்டுக்கு கொண்டு வரப்படும் என்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com