உடுமலை வட்டாரத்தில் மக்காச்சோளம் அறுவடை துவக்கம்: விலை வீழ்ச்சியால் விவசாயிகள் விரக்தி

உடுமலை, மடத்துக்குளம் வட்டத்தில் மக்காச்சோளம் அறுவடைப் பணிகள் துவங்கியுள்ளன. இந்நிலையில் விலை வீழ்ச்சி அடைந்து வருவதால் விவசாயிகள் விரக்தியடைந்து வருகின்றனர்.
Updated on
2 min read

உடுமலை, மடத்துக்குளம் வட்டத்தில் மக்காச்சோளம் அறுவடைப் பணிகள் துவங்கியுள்ளன. இந்நிலையில் விலை வீழ்ச்சி அடைந்து வருவதால் விவசாயிகள் விரக்தியடைந்து வருகின்றனர்.
உடுமலை, பல்லடம், திருப்பூர், பொங்கலூர் உள்ளிட்ட பகுதிகளில் அமைந்துள்ள தனியார் கோழிப்பண்ணைகளுக்கும், கால் நடை தீவன உபயோகத்துக்கும் ஆண்டு முழுவதும் மக்காச்சோளத் தேவை இருந்து வருகிறது.  இந்நிலையில் ஜனவரி முதல் வாரத்தில் விவசாயிகள் பலத்த எதிர்பார்ப்புடன் மக்காச்சோள அறுவடையைத் துவக்கி உள்ளனர்.
கடந்த 2 ஆண்டுகளாக பருவ மழை முற்றிலும் பொய்த்ததால் விவசாயிகள் பொருளாதார ரீதியாக  நெருக்கடிக்கு உள்ளாகினர். இந்நிலையில் இந்த ஆண்டு தென் மேற்கு பருவ மழை நல்ல முறையில் பெய்ததால், உடுமலை, மடத்துக்குளம் வட்டங்களில் நடப்பாண்டில் சுமார் 40,000 ஏக்கர் வரை விவசாயிகள் மக்காச்சோளம் பயிரிட்டிருந்தனர். 120 நாள் பயிரான மக்காச்சோளத்தை கடந்த செப்டம்பர் மாதத் தொடக்கத்தில் விவசாயிகள் பயிரிட்டனர். தென்மேற்கு பருவ மழையுடன் வடகிழக்கு பருவ மழையும் விவசாயிகளுக்குக் கை கொடுத்ததால் மக்காச்சோள விளைச்சல் அமோகமாக உள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
இந்நிலையில் ஜனவரி முதல் வாரம் விவசாயிகள் பலத்த எதிர்பார்ப்புகளுடன் அ றுவடையைத்  துவக்கினர்.  ஓர் ஏக்கருக்கு சராசரியாக 35 மூட்டைகள் (ஒரு மூட்டைக்கு 100 கிலோ) அறுவடையாகி வரும் நிலையில், மக்காச்சோளம் திடீரென விலை வீழ்ச்சி அடைந்துள்ளது.  கடந்த மாதம் ஒரு மூட்டை ரூ. 1,650 வரை விற்ற நிலையில், தற்போது ரூ. 1,200 என விலை குறைந்ததால் விவசாயிகள் விரக்தி அடைந்துள்ளனர். உடுமலை ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் தற்போது ஒரு மூட்டைக்கு ரூ. 1,150- ரூ. 1,250 வரை விலை நிர்ணயம் செய்யப்படுகிறது.
கடந்த ஆண்டு இந்தப் பருவத்தில் விலை ஏறுமுகமாக இருந்ததால் மக்காச்சோளத்துக்கு இந்த ஆண்டும் நல்ல விலை கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில் சில விவசாயிகள் அறுவடையை தள்ளிப்போட்டு வருகின்றனர். இதுகுறித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் எஸ்.ஆர்.மதுசூதனன் கூறியது:
இந்த ஆண்டு உடுமலை, மடத்துக்குளம் வட்டங்களில் சுமார் 40,000 ஏக்கரில் மக்காச்சோளம் பயிரிடப்பட்டது. தற்போது அறுவடை துவங்கி உ ள்ளது. ஆனால், கடந்த மாதம் ரூ. 1,650 வரை விற்ற மக்காச்சோளம், தற்போது ரூ. 1,200 வரை விலை வீழ்ச்சி அடைந்துள்ளது. 
கடந்த இரண்டு வருடங்களாக விவசாயிகள்  வறட்சியால் பேரிழப்புகளைச் சந்தித்தனர். எனவே கடன் வாங்கி மக்காச்சோளத்தைப் பயிரிட்டனர்; ஒரு ஏக்கருக்கு ரூ. 25,000 வரை செலவு செய்துள்ளனர்.
இந்நிலையில் மக்காச்சோளம் விலை வீழ்ச்சி அடைந்துள்ளது விவசாயிகளை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. தமிழக அரசு இதில் தலையிட்டு  விவசாயிகளுக்கு நியாயமான விலையை நிர்ணயிக்க வேண்டும் என்றார்.
இதுகுறித்து உடுமலை ஒழுங்கு முறை விற்பனைக்கூடக் கண்காணிப்பாளர் சரவ ணன் செவ்வாய்க்கிழமை கூறியது:
பொதுவாக ஜனவரி,  பிப்ரவரி மாதங்கள் மக்காச்சோள சீசன் ஆகும். தற்போது  அறுவடை துவங்கி ஒரு வாரத்துக்கு மேலான நிலையில் தற்போது சுமார் ரூ. 20 லட்சம் மதிப்புள்ள மக்காச்சோளம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்துக்கு வந்துள்ளது. செவ்வாய்க்கிழமை நிலவரப்படி 100 கிலோ கொண்ட ஒரு  மூட்டை  ரூ. 1,250 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது விவசாயிகளுக்கு பெருத்த ஏமாற்றம் தந்துள்ளது.  
இந்த விலை போதாது என்று நினைக்கும் விவசாயிகளுக்கு ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் இருப்பு வைத்துக்கொள்ள பல்வேறு வசதிகள் செய்யப்பட்டுள்ளன. விவசாயிகள் கொடுக்கும் மக்காச்சோள மதிப்பில் பொருளீட்டுக் கடனாக 75 சதவிகிதம் வரை 5 சதவிகித வட்டிக்கு கடன் தொகை வழங்கப்படும். அதற்கு இலவசமாகக் காப்பீடும் செய்து தரப்படும் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com