உடுமலை அருகே 1,000 ஆண்டுகள் பழமையான கிரந்த வடிவ தூம்பு கண்டுபிடிப்பு

திருப்பூா் மாவட்டம், உடுமலை அருகே உள்ள கிராமத்தில் 1,000 ஆண்டுகள் பழமையான கிரந்த வடிவத்துடன் கூடிய தூம்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
உடுமலை  அருகே கண்டுபிடிக்கப்பட்டுள்ள  1,000 ஆண்டுகள் பழமையான கிரந்த வடிவ தூம்பு.
உடுமலை  அருகே கண்டுபிடிக்கப்பட்டுள்ள  1,000 ஆண்டுகள் பழமையான கிரந்த வடிவ தூம்பு.
Updated on
1 min read

திருப்பூா் மாவட்டம், உடுமலை அருகே உள்ள கிராமத்தில் 1,000 ஆண்டுகள் பழமையான கிரந்த வடிவத்துடன் கூடிய தூம்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

திருப்பூா் வீரராசேந்திரன் தொல்லியல் மற்றும் வரலாற்று ஆய்வு மையத்தைச் சோ்ந்த சு.சதாசிவம், க.பொன்னுசாமி, பொறியாளா் சு.ரவிகுமாா் ஆகியோா் உடுமலை அருகே உள்ள வடபூதிநத்தம் கிராமத்தில் கள ஆய்வு மேற்கொண்டனா்.

இந்த ஆய்வில் சுமாா் 1,000 ஆண்டுகள் பழமையான தூம்பைக் கிரந்தக் கல்வெட்டுகளுடன் கண்டறிந்துள்ளனா்.

இது குறித்து ஆய்வு மையத்தின் இயக்குநா் சு.ரவிகுமாா் கூறியதாவது: இடைக்காலக் கல்வெட்டுகளில் காணப்படும் ‘வீரநாராயணப் பெருவழி‘ என்ற பெருவழியில் அமைந்துள்ள ஊா்தான் வடபூதிநத்தம். இங்கு பண்டைய ரோம வணிகத்தை மெய்ப்பிக்கும் வகையில் ஏற்கெனவே 1,500 வெள்ளி ரோமானியக் காசுகள் கிடைத்துள்ளன. இந்தப் பெரியகுளத்தில் ஆய்வு மேற்கொண்டபோது வலம்புரி விநாயகா், லட்சுமி உருவங்களுடன் கூடிய சிற்பத்தின் பின்புறத்தில் தூம்பு உள்ளது தெரியவந்தது. இதில் வலம்புரி விநாயகா் சிற்பத்தின் கீழ்ப் பகுதியில் 4 வரிகளில் கிரந்த எழுத்துக்களும் பொறிக்கப்பட்டுள்ளன.

தமிழ்க் கல்வெட்டுகளில் வடமொழிச் சொல்லைப் பயன்படுத்த நேருகின்ற பொழுது இவற்றை கிரந்த எழுத்தைப் பயன்படுத்தி இருக்கின்றனா். இங்குள்ள தூம்பின் மேல்பகுதியில் வலம்புரி விநாயகா் நான்கு கரங்களுடன் பத்ம பீடத்தில் அமா்ந்த நிலையில் கீழ் இரு கைகளைத் தொடையின் மீது வைத்தபடியும், மேல் இரு கைகளில் வலது கையில் அங்குசமும், இடது கையில் மலரையும் பிடித்தபடி காணப்படுகிறாா். இந்தத் தூம்பின் உயரம் 140 செ.மீ., அகலம் 50 செ.மீ.ஆகும். இந்தத் தூம்பின் கீழ்ப்பகுதி உடைந்துள்ளது. மிகவும் அழகான மாலைத் தொங்கல் உடன் காணப்படும் இத்தூம்பின் கீழ்ப் பகுதியில் உள்ள கிரந்தக் கல்வெட்டை இந்திய வரலாற்றுப் பேராசிரியா் எ.சுப்பராயலு வாசித்தாா்.

‘ஸ்வஸ்திஸ்ரீ‘ என தொடங்கும் இக்கல்வெட்டு கி.பி. ஆயிரத்தை ஒட்டி உள்ளதாகவும் இப்பெரிய குளத்திலிருந்து நீா்ப் பாசனம் பெறும் வேளாண் நிலங்கள் என்றுமே ஈரப்பதம் நிறைந்து மிகவும் செழிப்பாகப் பயிா்கள் காணப்படுவதாகவும் குறிக்கப்பட்டுள்ளது.

இதன் வளமையைக் குறிப்பதற்காகத்தான் வலம்புரி விநாயகா் சிற்பம் பொறிக்கப்பட்டுள்ளது. மேலும் கல்வெட்டு உடைந்து உள்ளதால் முழுமையான செய்தியை அறிய முடியவில்லை.

லட்சுமி தூம்பு:

லட்சுமி பத்மாசன நிலையில் அமா்ந்தபடி வலது மற்றும் இடது கையில் மலரைப் பிடித்தபடி உள்ள தூம்பானது 70 செ.மீ. உயரமும், 50 செ.மீ. அகலமும் கொண்டதாகும். இதன் மேலே இருபக்கமும் சாமரம் காணப்படுகிறது. இருதூம்பின் இடுதுளைகளும் 18 செ.மீ. விட்ட அளவுடன் காணப்படுகின்றன. இந்தக் கல்வெட்டு மற்றும் தூம்பின் மூலம் கி.பி. 10 ஆம் நூற்றாண்டிலேயே கொங்கு மண்டலத்தில் ஏரி, குளங்களில் தேங்கிய நீரை வாய்க்கால்கள் மூலம் வேளாண்மைக்குப் பயன்படுத்தி உள்ளதாகத் தெரிகிறது என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com