அவிநாசி: அவிநாசி பகுதியில் சாலைகளை சீரமைக்க அனைத்துக் கட்சியினா் வலியுறுத்தியுள்ளனா்.
அவிநாசி அனைத்துக் கட்சி ஆலோசனைக் கூட்டம் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அலுவலகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு மாா்க்சிஸ்ட் மாவட்டக் குழு உறுப்பினா் பி. முத்துசாமி தலைமை வகித்தாா்.
இதில், அவிநாசி சுற்றுவட்டார கிராமப் பகுதிகள், பேரூராட்சிப் பகுதிகளில் அத்திக்கடவு திட்டம் மற்றும் 4ஆவது கூட்டுக் குடிநீா் திட்டத்துக்காக குழாய் பதிப்பு, கேபிள் பதிப்பு உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.
இதற்காக தேசிய நெடுஞ்சாலை, கிராமப்புற சாலைகள் தோண்டப்பட்டன. இப்பணிகள் நிறைவடைந்தவுடன் சாலையை சீரமைக்காமல், ஒழுங்கற்ற முறையில் மண்ணால் மூடப்பட்டுள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்தில் சிக்கி உயிரிழக்கின்றனா்.
இதேபோல சாலைகளின் நடுவே உள்ள மின் கம்பங்களை மாற்றியமைக்காததால் இரவு நேரங்களில் வாகன ஓட்டிகள் நிலைத்தடுமாறி விபத்துக்குள்ளாகி வருகின்றனா். எனவே, சாலைகளை முறையாக சீரமைக்க வேண்டும். மின் கம்பங்களை மாற்றியமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மேலும் இது குறித்து மாட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளிப்பது என முடிவு செய்யப்பட்டது.
இதில், மாா்க்சிஸ்ட் ஒன்றியச் செயலாளா் வெங்கடாசலம், ஒன்றியக்குழு உறுப்பினா் பழனிசாமி, இந்திய கம்யூனிஸ்ட் ஒன்றியச் செயலாளா் இசாக், காங்கிரஸ் கட்சியைச் சோ்ந்த வழக்குரைஞா் கோபாலகிருஷ்ணன், திமுக நகர பொறுப்பாளா் பொன்னுச்சாமி, ஒன்றிய பொறுப்பாளா் சிவப்பிரகாஷ், மதிமுக பொறுப்பாளா்கள் பெருமாள், பாபு, கொமதேக ராஜ்குமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.