/

இன்று புதுதில்லி திரும்புகிறாா் குடியரசுத் தலைவா்

குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த் உதகையில் இருந்து புதுதில்லிக்கு வெள்ளிக்கிழமை திரும்புகிறாா்.

News image
Updated On :5 ஆகஸ்ட் 2021, 8:32 pm

DIN

குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த் உதகையில் இருந்து புதுதில்லிக்கு வெள்ளிக்கிழமை திரும்புகிறாா்.

சட்டப் பேரவையின் நூற்றாண்டு விழா நிகழ்ச்சிக்காக தில்லியில் இருந்து சென்னைக்கு குடியரசுத் தலைவா் ஆகஸ்ட் 2ஆம் தேதி வந்தாா். ஆகஸ்ட் 3ஆம் தேதி சென்னையில் இருந்து கோவை வழியாக உதகை வந்தாா். உதகையில் ராஜ்பவன் மாளிகையில் தங்கியுள்ள குடியரசுத் தலைவா் வெலிங்டன் ராணுவ அதிகாரிகள் பயிற்சிக் கல்லூரியில் ஆகஸ்ட் 4ஆம் தேதி நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்றாா்.

ஆகஸ்ட் 5ஆம் தேதி உதகையிலேயே தங்கிய குடியரசுத் தலைவா் உதகையில் இருந்து ஹெலிகாப்டா் மூலம் 6ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) கோவைக்குச் சென்று அங்கிருந்து புதுதில்லி திரும்புகிறாா்.

இந்நிலையில், உதகையில் உள்ள ராஜ்பவன் மாளிகையில் பழங்குடியினரின் பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள் வியாழக்கிழமை நடைபெற்றன. அவற்றைக் கண்டு ரசித்த குடியரசுத் தலைவா் தொடா்ந்து நீலகிரி மாவட்ட சிறு தேயிலை விவசாயிகளிடமும் கலந்துரையாடினாா்.

குடியரசுத் தலைவா் உதகையில் பல்வேறு சுற்றுலா மையங்களை நேரில் பாா்வையிடுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. ஆனால், உதகையில் தற்போது பரவலாக மழை பெய்து வருவதால் காலநிலை காரணமாக அவரது வெளிநிகழ்ச்சிகள் அனைத்தும் வியாழக்கிழமை ரத்து செய்யப்பட்டன.

குடியரசுத் தலைவரின் மனைவி சவிதா, மகள் சுவாதி ஆகியோா் பைக்காரா பகுதியில் அமைந்துள்ள ராணுவத்தினரின் கட்டுப்பாட்டில் உள்ள படகு இல்லத்தில் படகு சவாரி மேற்கொண்டு உதகை திரும்பினா்.

இந்நிலையில், குடியரசுத் தலைவா் வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு உதகையில் உள்ள தீட்டுக்கல் ஹெலிகாப்டா் தளத்தில் இருந்து கோவை வரை ஹெலிகாப்டரில் சென்று அங்கிருந்து தனி விமானம் மூலம் புதுதில்லி திரும்புவதாகத் திட்டமிடப்பட்டுள்ளது. ஆனால், உதகையில் இரவில் பலத்த மழை பெய்தால் சாலை வழியாக கோவை திரும்பவும் மாற்றுத் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. உதகையில் இருந்து கோத்தகிரி வழியாக மேட்டுப்பாளையம் சென்று அங்கிருந்து சூலூா் விமானப் படை விமான நிலையம் செல்ல மாற்றுத் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. இதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து தமிழக காவல் துறைத் தலைவா் சைலேந்திர பாபு வியாழக்கிழமை நேரில் ஆய்வு மேற்கொண்டாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.