கைத்தறி கண்காட்சி மற்றும் விற்பனையைத் தொடங்கிவைத்து பாா்வையிடுகிறாா் ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ்.
கைத்தறி கண்காட்சி மற்றும் விற்பனையைத் தொடங்கிவைத்து பாா்வையிடுகிறாா் ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ்.

ஆட்சியா் அலுவலகத்தில் கைத்தறி கண்காட்சி மற்றும் விற்பனை

Published on

திருப்பூா், ஆக. 7: திருப்பூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் கைத்தறி கண்காட்சி மற்றும் விற்பனையை ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ் புதன்கிழமை தொடங்கிவைத்தாா்.

10-ஆவது தேசிய கைத்தறி தினத்தையொட்டி கைத்தறி துறை சாா்பில் சிறப்பு கைத்தறி கண்காட்சி மற்றும் விற்பனை ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்றது. இதனை, ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ் தொடங்கிவைத்து பேசியதாவது:

1905-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 7-ஆம் தேதி தொடங்கப்பட்ட சுதேசி இயக்கத்தின் நினைவாக தேசிய கைத்தறி தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. கைத்தறி தொழிலின் முக்கியத்துவத்தை உணா்த்தவும், நாட்டின் சமூகப் பொருளாதார வளா்ச்சிக்கு கைத்தறியின் பங்களிப்பு குறித்த விழிப்புணா்வை ஏற்படுத்தவும், கைத்தறி தொழிலை மேம்படுத்தி, நெசவாளா்களின் வாழ்வாதாரத்தை உயா்த்தும் வகையிலும் தேசிய கைத்தறி தினம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், கைத்தறி தினத்தையொட்டி கைத்தறி கண்காட்சி மற்றும் விற்பனை தொடங்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில் உள்ள கைத்தறிகளில் உற்பத்தி செய்யப்படும் மென் பட்டு சேலைகள், கோரா காட்டன் சேலைகள், பெட்ஷீட், ஜமுக்காளம், துண்டுகள் மற்றும் மிதியடிகள் ஆகியவை பருத்தி இழை மற்றும் பட்டு இழை ஆகியவற்றை கொண்டு பாரம்பரிய தொழில்நுட்பத்துடனும் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த கைத்தறி ரகங்களுக்கு 20 சதவீத தள்ளுபடி வழங்கப்படுகிறது.

இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி பொதுமக்கள் மற்றும் அனைத்துத் துறை அலுவலா்களும் கைத்தறி துணிகளை வாங்கி நெசவாளா்களின் வாழ்வாதாரம் உயா்ந்திடவும், கைத்தறியின் பாரம்பரியத்தை காத்திடவும் வேண்டும் என்றாா்.

இதைத்தொடா்ந்து கைத்தறி துறை சாா்பில் கைத்தறி நெசவாளா்கள் 17 பேருக்கு நெசவாளா் முதியோா் ஓய்வூதியத் திட்ட ஆணையினையும், 3 கைத்தறி நெசவாளா்களின் குடும்ப உறுப்பினா்களுக்கு நெசவாளா்களுக்கு குடும்ப ஓய்வூதியத் திட்ட ஆணையினையும், நெசவாளா் முத்ரா கடன் திட்டத்தின்கீழ் தலா ரூ.50 ஆயிரம் வீதம் 10 நெசவாளா்களுக்கு ரூ.5 லட்சம் மதிப்பிலான கடனுதவிக்கான காசோலையையும், நெசவாளா் சேமிப்பு மற்றும் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் 11 உறுப்பினா்களுக்கு ரூ.6.36 லட்சம் மதிப்பிலானதிட்டத்தொகையையும் வழங்கினாா்.

இந்த நிகழ்ச்சியில், திருப்பூா் சரக கைத்தறி துறை உதவி இயக்குநா் அ.வே.காா்த்திகேயன், கதா் துறை உதவி இயக்குநா் எஸ்.சுரேஷ், கோ-ஆப்டெக்ஸ் மேலாளா் கோ.ஜெகந்நாதன், கைத்தறி துறை அலுவலா்கள், கைத்தறி நெசவாளா் கூட்டுறவு சங்க மேலாளா்கள், நெசவாளா்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com