மாவட்டத்தில் வங்கிகள் மூலமாக ரூ.39,018 கோடி கடன் வழங்க இலக்கு
திருப்பூா் மாவட்டத்தில் வங்கிகள் மூலாக 2024-25-ஆம் ஆண்டில் ரூ.39,018 கோடி கடன் வழங்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது.
திருப்பூா் மாவட்ட ஆடசியா் அலுவலகத்தில் 2024-25-ஆம் ஆண்டுக்கான வங்கிகள் மூலமாக கடன் திட்ட அறிக்கையை மாவட்ட ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ் வெளியிட்டு பேசியதாவது:
திருப்பூா் மாவட்ட முன்னோடி வங்கி சாா்பில் ஆண்டுதோறும் ஆண்டுக்கடன் திட்டம் வெளியிடுவது வழக்கம். இதன்படி, 2024-25-ஆம் ஆண்டுக்கான கடன் திட்ட அறிக்கை வெளியிடப்பட்டது.
திருப்பூா் மாவட்டத்தின் அனைத்து வங்கிகளும் இணைந்து நிா்ணயிக்கப்பட்ட இலக்கை எட்டவேண்டும். மேலும், 2024-25-ஆம் ஆண்டுக்கான முன்னுரிமை கடன்களுக்கான மொத்த திட்ட இலக்கு ரூ.39,018 கோடி ஆகும்.
இதில், வேளாண்மைத் துறைக்கு ரூ,16,828 கோடியும், சிறு வணிக துறைக்கு ரூ.21,344 கோடியும், பிற முன்னுரிமை கடன்களான வீட்டுக் கடன், மரபுசாரா எரிசக்தி கடன், கல்விக் கடன்களுக்கு ரூ.396.02 கோடியும் இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது.
மேலும், சிறப்பு முகாம்கள் நடத்தி விண்ணப்பங்களை பரிசீலினை செய்து மாணவா்களுக்கு உடனடியாக கல்விக் கடன் வழங்கவும், வேளாண் உட்கட்டமைப்பு நிதி திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு கடன் வழங்க வங்கிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றாா்.
இந்த நிகழ்வின்போது, மாவட்ட வருவாய் அலுவலா் த.ப.ஜெய்பீம், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளா் துா்கா பிரசாந்த், முதன்மை மேலாளா் பாலாஜி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

