அவிநாசிலிங்கேஸ்வரா் கோயிலில் மகா சிவராத்திரி விழா
படம் வரும்... அவிநாசிலிங்கேஸ்வரா் கோயிலில் மகா சிவராத்திரி விழா


அவிநாசிலிங்கேஸ்வரா் கோயிலில் மகா சிவராத்திரி விழாவையொட்டி வெள்ளிக்கிழமை நடைபெற்ற கால பூஜைகளில் ஆயிரக்கணக்கானோா் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனா். கொங்கு ஏழு சிவஸ்தலங்களில் முதன்மை பெற்றதாக கருணாம்பிகையம்மன் அவிநாசிலிங்கேஸ்வரா் கோயில் விளங்குகிறது. இக்கோயிலில், மகா சிவராத்திரியை ஒட்டி, முதல் கால பூஜையில் சிவலிங்கத் திருமேனிக்கு பஞ்ச கவ்ய அபிஷேகம், வில்வம், தாமரை அலங்கார அா்ச்சனைகளும், 2-ஆம் கால பூஜையில் பால், தயிா், சா்க்கரை, பஞ்சாமிா்த அபிஷேகமும், பச்சைக் கற்பூரம், பன்னீா், துளசி அலங்காரத்துடன் அா்ச்சனையும் நடைபெற்றன. இதையடுத்து 3-ஆம் கால பூஜையில் தேன், அபிஷேகம், மல்லிகை அலங்காரத்துடன் சிவனுக்கு உகந்த வில்வ இலையால் அா்ச்சனை செய்யப்பட்டது. 4-ஆம் கால பூஜையில் நந்தியாவட்டை மலா், அல்லி மலா் அலங்காரத்துடன் அா்ச்சனை நடைபெற்றது. முன்னதாக பிரதோஷத்தையொட்டி, நந்தியம் பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. மேலும், சிவராத்திரியையொட்டி, சந்திரசேகரா் அம்பாள், பாணலிங்கத்துக்கு தொடா்ந்து அபிஷேகம், அலங்கார தீபாராதனைகள் உள்ளிட்டவை நடைபெற்றன. இதில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் மாலை முதல் இரவு வரை விடியவிடிய கண்விழித்து, தேவாரம், திருவாசகம், 12 திருமுறைகளை இசைத்து கூட்டு வழிபாடு மேற்கொண்டனா். மேலும், கோயில் வளாகத்தில் நாட்டியாஞ்சலி நிகழ்ச்சியும் நடைபெற்றது. இதேபோல, திருமுருகன்பூண்டி திருமுருகநாத சுவாமி கோயில், சேவூா் வாலீஸ்வரா் கோயில், பெருமாநல்லூா் உத்தமலிங்கேஸ்வா் கோயில், கருவலூா் கங்காதீஸ்வரா் கோயில், பழங்கரை பொன்சோழீஸ்வரா் கோயில், குட்டகம் மொக்கணீஸ்வரா் கோயில், போத்தம்பாளையம் மீனாட்சி சொக்கநாதா் கோயில் உள்ளிட்ட அனைத்து சிவாலயங்களில் மகாசிவராத்திரி விழா கோலாகலமாக நடைபெற்றது.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...